tamilnadu

img

‘கொரோனாவால் இறப்பவர்களில் பெண்களே அதிகம்’

புதுதில்லி:
இந்தியாவில், கொரோனா பரவல் தொற்றுக்கு ஆண்கள் அதிகப் பாதிப்புடையவர்கள் என்றாலும், கொரோனா தொடர்புடைய மரணங்களில் பெண்களின் விகிதம் அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த மே- 20-ஆம் தேதி வரை பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மொத்த இறப்பு விகிதத்தில் ஆண்களின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும், பெண்களின் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாகவும் உள்ளது.

குளோபல் ஹெல்த் சயின்ஸ் நாளிதழில் வெளியான இந்த புதிய ஆய்வுக் கட்டுரை, கோவிட் -19 நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில், சமமான கவனம் பெண்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளது.தில்லி மக்கள்தொகை ஆராய்ச்சி மையம், ஜெய்ப்பூர் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் ,சுகாதார மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம், ஐ.ஐ.எச்.எம்.ஆர் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்- வளர்ச்சி ஆராய்ச்சி மையம், கேம்பிரிட்ஜ் மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு ஆராய்ச்சி மையம், ஹார்வர்டு சமூக அறிவியல் துறை, டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் போன்ற அமைப்புகள் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் வயது-பாலின வகை சார்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்திற்கான மதிப்பீடுகளை ஆய்வு செய்துள்ளன.
ஆய்வாளர்கள், வயது, பாலினம் வகை சார்ந்த கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளை ஆய்வு செய்துள்ளனர். மே 20 நிலவரப்படி கொரோனா தொற்றில், பெண்களை விட (34 சதவீதம்) ஆண்களுக்கு (66 சதவீதம்) அதிக பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், வயதானவர்களில் ஆண், பெண் என்றில்லாமல் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில், கொரோனா பாதிப்புகள் 1,019 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,059 என இரு மடங்காக அதிகரிக்க நான்கு நாட்கள்(மார்ச் 29 முதல் ஏப்ரல் 1 வரை) தேவைப்பட்டது. 21,373 என்ற எண்ணிக்கையில் இருந்து 42,546 என இரு மடங்காக அதிகரிக்க 11 நாட்கள் (ஏப்ரல் 23 முதல் மே 3 வரை) தேவைப்பட்டது. 49,405-ல் இருந்து 1,00,327 இரு மடங்கு பாதிப்புக்கு 13 நாட்கள் (மே 5 முதல் மே 18 வரை) தேவைப்பட்டது. மே 20- வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில், பெண்களின் எண்ணிக்கை 34.3 சதவீதமாக அதிகரித்தது.

ஐந்து வயதிற்குட்பட்டவர்களில் ஆண் குழந்தைகள் (51.5%), பெண் குழந்தைகள் (48.5%). நடுத்தர வயது ஆண்களிடம் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக 30-39 வயதுக்குட்பட்டவர்களில், 70.4 சதவீத பாதிப்புகள் ஆண்களிடம் காணப்படுகிறது. 30-39 வயது வரம்பிற்கு பிறகு, மொத்த கொரோனா பாதிப்பில் பெண்களின் பங்கு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.70-79 வயதுக்குட்பட்ட மொத்த கொரோனா பாதிப்பில் பெண்களின் பங்கு 40 சதவீதமாக உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் கொரோனா பாதிப்பில், பெண்களின் பங்கு 40 சதவீதத்தை தாண்டுகிறது. கொரோனா தொடர்பான மொத்த இறப்புகளில் பெண்களின் விகிதம் 36.9 சதவீதமாகும்.

30-39 வயதிற்குட்பட்ட பெண்கள் மத்தியில் மிகக் குறைந்த கொரோனா இறப்பு விகிதம் (21.3 சதவீதம்) காணப்படுகிறது. அதே சமயம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரண விகிதத்தில் பெண்களின் பங்கு 48.5 சதவீதமாக உள்ளது .
5-19 வயதிற்குட்பட்ட கொரோனா மரணங்களில், ஆண்களின் இறப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. மொத்த கொரோனா பாதிப்பில், 20 வயதுக்குக் குறைவான குழந்தைகள், இளம் பருவத்தினர் 13.8 சதவீத பங்கைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு விகிதம் 2.1 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் பாதிப்பு விகிதம் 9.7 சதவீதமாகவும் இறப்பு விகிதம் 51.6 சதவீதமாக உள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களின் இறப்புகளில் ஆண்களின் பங்கு 50.7 சதவீதமாகவும், பெண்களின் பங்கு 54.5 சதவீதமாகவும் உள்ளது. 20-59 வயதிற்குட்பட்டவர்களில் 76.4 சதவீத கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. மொத்த இறப்புகளில், 46.4 சதவீதமாக உள்ளது.

மே- 20-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மொத்த பாதிப்புகளில், நடுத்தர வயதுள்ளவர்கள் ஒப்பீட்டளவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

;