tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் தேசவிரோதமானது! ஓசூர் பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சாடல்

கிருஷ்ணகிரி, பிப். 16- மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல; நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரானது; தேச விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டக் குழு சார்பில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து, ஓசூரில் மாபெரும் பொதுக் கூட்டம் சனியன்று நடைபெற்றது. அதில் பேசிய சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: பிஜேபியின் CAA/NPR / NRC முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கு எதிரானது அதைத் திரும்பப் பெற வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு புனித நூல் உண்டு, ஆனால் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே புனித நூல் நமது அரசியலமைப்பு சட்டம் தான். அது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் மோடி அரசு மக்கள் தொகையில் சிறுபான்மை, தலித் பழங்குடி, மலைவாழ் மக்களுக்கும், ஏழை எளியவர்களுமான 75 சதம் பேருக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது. தலித், பழங்குடி, மலைவாழ் மக்களில் வறுமையில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிழைப்புக்காக இடம் விட்டு இடம் நகர்வார்கள். அவர்கள் எங்கு போய் தன் , பரம்பரைக்கு பிறப்புச் சான்று பெற முடியும்? கணக்கெடுப்பில் சிறுபான்மை மதத்தினருக்கும், அரசு நினைத்தபடி சான்று இல்லை என குடியுரிமை மறுக்க முடியும், இதனால் 55 சதத்திற்கும் மேற்பட்டவர்கள் எந்த ஆவணமும் இல்லாதவர்கள், இந்திய குடிமக்கள் இல்லை என மறுக்கப்படுவார்கள். எனவே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசு தேசவிரோத அரசு தானே? 1947ல் நாடு சுதந்திரமடைந்த போது முஸ்லீம் மக்கள் பாகிஸ்தானுக்கு செல்லாமல் விரும்பி எங்கள் நாடு இந்தியா, இங்கு தான் வாழ்வோம் என்றார்கள். முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர் அப்துல் ஹமீது. அதுவே தேச பக்தி. பெரும்பான்மை இந்துக்களுக்கான இட ஒதுக்கீட்டையும், வேலை வாய்ப்பையும் ஒழித்து வரும் பாஜக அரசு இந்து மக்களின் காவலன் போல் காட்டி ஏமாற்றி வருகிறது. பொருளாதாரம் சின்னாபின்னமாகியுள்ளது. தொழில் நெருக்கடி,விவசாயிகள் தற்கொலை, அத்தியாவாசியப் பொருள்கள், கேஸ் கடும் விலையேற்றம் என உள்ள நிலையில் மக்கள் நலனை மறந்து, கார்ப்பரேட்களுக்கு வரிகள், கடன்கள் தள்ளுபடி என 21 லட்சத்து ஐம்பதாயிரம் கோடிகளை கொடுக்கிறது. ஒரு சமதான 120 பணக்காரர்களிடம் 73 சதம் செல்வம் குவிந்து கிடக்கும் நிலை,74 சதம் மக்கள் மிகவும் ஏழைகளாக உள்ளனர். வாங்கும் சக்தி கடுமையாக குறைந்துள்ளது. இவற்றை சீர்படுத்துவதற்கு பதிலாக, பாபர் மசூதி இடிப்பு, ஜம்மு-காஷ்மீர் அந்தஸ்த்து ஒழிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், இட ஒதுக்கீடு ஒழிப்பு, தன் கூட்டணியில் இருந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி, முன்னாள் முதல்வர்கள் மூவர் உட்பட கைது, வீட்டுக்காவல், தில்லியில் போராடிய மாணவர்கள் மீது கொடூர அடக்குமுறை, உத்தரப்பிரதேசத்தில் 21 பேர், அசாமில் 5 பேர், கர்நாடகாவில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தேச விரேதமாக செயல்படும் மத்திய அசை கண்டித்து இடதுசாரிகள், கூட்டணி கட்சியினரின் பிரச்சாரங்கள், இயக்கங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 13 மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிஜேபி கூட்டணி. முதல்வர்களே சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். எனவே இச்சட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 23 பகத்சிங் நினைவு தினம் முதல் தீவிரமாக வீடு வீடாக பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்கள், போராட்டங்கள் இந்திய நாடு முழுவதும் நடைபெறும் என்றார். அவரது ஆங்கில உரையை சிஐடியு மாநில துணை தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழில் மொழி பெயர்த்தார்.
அ.சவுந்தரராசன்
தொடர்ந்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராசன் பேசினார். “நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் கடும் சோதனை நடத்துகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் மீது போட்ட வழக்கை அவர்களே திரும்பப் பெறுகிறார்கள். உடனே பாஜகவின் கையாளாக ரஜினி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறார். ஆர்எஸ்எல் குருமூர்த்தியின் துக்ளக் பத்திரிகையை ஏற்றியும் முரசொலியையும், பெரியாரையும் இழிவுபடுத்தியும் பேசுகிறார். தன் சொத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக. பாஜகவும் ரஜினியை பயமுறுத்தி பயன்படுத்துகிறது.                           100 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் கோல்வால்கர் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எழுதினார். ஆனால் கிலாபத் இயக்கத்தில் முன் நின்றவர்கள் முஸ்லீம்களும் கம்யூனிஸ்ட்களும் தான். பாஜக, ஆர்எஸ்எஸ் காரர்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக மக்களை பிரிட்டிஷ் அரசிடம் காட்டிக் கொடுத்தவர்கள். தேச பக்தர்களாகிய நாம் போராடுவேம், மோடி அரசுக்கு எதிராக வாருங்கள் ஆதரவு தாருங்கள்” என்றார் அவர். பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் தில்லி பாபு, தருமபுரி மாவட்ட செயலாளர் குமார், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு, உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேன்கனிக்கோட்டை வட்ட குழு சார்பில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கட்சி வளர்ச்சி நிதியாக அளிக்கப்பட்டது. ஓசூர் வட்டச் செயலாளர் பி ஜி.மூர்த்தி நன்றி கூறினார். ந.நி.

;