tamilnadu

உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை: உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு

புதுதில்லி, ஏப். 22- தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை எனஉச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணை யம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வழக்குரைஞர் சி.ஆர். ஜெயசுகின் உச்ச நீதிமன்றத்தில் கடந்தஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி மனு தாக்கல்செய்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சிப் பொறுப்புகள் கடந்த 2016, அக்டோபர் 24-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. எனவே, 10 நாள்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி விசாரித்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மாநிலத் தேர்தல் ஆணையம், தலைமைச் செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது 4 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது.இதற்கிடையே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சி.ஆர். ஜெயசுகின் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி முறையிட்டார். அப்போது அவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு கடந்த ஜனவரி 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் பி. வினோத் கண்ணா கூடுதல் அவகாசம் கோரினார். அதற்கு மனுதாரரும், வழக்குரைஞருமான சி.ஆர். ஜெயசுகின் ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, 4 வாரம் கூடுதல் அவகாசம் வழங்கிய பதிவாளர், இனி அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும், வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

;