tamilnadu

img

ரூ.1,600 கோடியை வழங்க ரூ.7000 கோடிக்கு செலவுக் கணக்கு மோடியின் ‘மாத்ரு வந்தனா’ திட்ட மோசடி

புதுதில்லி, ஏப். 14 -கடந்த 5 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா, தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா, மருத்துவக் காப்பீட்டுக்கான ஆயுஷ்மான் பாரத் யோஜனா, எரிவாயு இணைப்புக்கான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா... என ஏராளமான திட்டங்களை மோடி அறிவித்தார். உண்மையாக சொன்னால், பிரதமர் மோடி ஆட்சி அறிவித்தது எதுவும், புதிய திட்டங்கள் இல்லை. அவை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்தவைதான். திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி, புதிய திட்டம்போல, மக்களை ஏமாற்றினார்.அப்படியும், மோடி புதிதாக அறிவித்த எந்தத் திட்டமும் உருப்படவில்லை. அனைத்துத் திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்தன. அதிலொன்றுதான் மோடி அறிவித்த, கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ நிதியுதவிக்கான ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ (ஞஆஆஏலு) திட்டமாகும்.இந்த திட்டமும் மோடி கண்டுபிடித்த திட்டமல்ல. 1990-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘மாத்ரித்வ லாப் யோஜனா’ என்ற திட்டத்தின் ஈயடிச்சாம் காப்பிதான் இது.ஏழைப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பாக ரூ. 3 ஆயிரம், குழந்தை பிறந்ததற்குப் பின்னர் ரூ. 3 ஆயிரம் என இரண்டு கட்டங்களாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம்தான் ‘மாத்ரித்வ லாப் யோஜனா’.


இதுவே பின்னர், ‘இந்திரா காந்தி மாத்ரித்வ சஹ்யோக் யோஜனா’ என்ற பெயரில், சோதனை முயற்சியாக 53 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி, இந்த திட்டத்தில் இருந்த இந்திரா காந்தியின் பெயரை நீக்கி விட்டு, ‘பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா’ என்று புதிய நாமகரணம் சூட்டினார்.எனினும் பிரச்சனை அதுவல்ல. திட்டத்திற்கு எந்த பெயரை வேண்டுமானாலும் மோடி வைத்துக் கொள்ளட்டும். திட்டத்தின் நோக்கம் நிறைவேறினால் போதுமானது. ஆனால், அது நடக்கவில்லை என்பதுதான் இங்கு சொல்லவேண்டியதாகும்.ஏழைத் தாய்மார்களுக்கு முன்பு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை என்று இருந்தது. முதல்வேலையாக அதை ரூ. 5 ஆயிரமாக மோடி குறைத்தார். அதுமட்டுமல்ல, முன்பு இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டு வந்த தொகையை, மோடி மூன்று தவணைகளாக மாற்றினார்.சரி அது போகட்டும். திட்டமாவது அனைவருக்கும் போய்ச் சேர்ந்ததா? என்றால், அதுவும் இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டத்திலும் மோடி அரசு தனது மோசடிகளை அரங்கேற்றியிருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக தற்போது அம்பலமாகி இருக்கிறது.அதாவது, மோடி அறிவித்த திட்டத்தில் ஆண்டுக்கு 2 சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே பயனடைந்து இருக்கின்றனர்.


2018 நவம்பர் 30-ஆம் தேதி வரை, வெறும் 18 லட்சத்து 82 ஆயிரத்து 708 கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமே தலா ரூ. 5 ஆயிரம் விகிதம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ. 1,655 கோடியே 83 லட்சம் அளவிற்கே உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.கொடுமை என்னவென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, அதாவது விளம்பரம், நிர்வாகச் செலவினம் என்ற வகையில் மட்டும் ரூ. 6 ஆயிரத்து 966 கோடியை செலவிட்டு இருப்பதாக மோடி அரசு கணக்கு காட்டியிருப்பதாகும்.புரியும் வகையில் சொன்னால், மோடியின் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தால், ஒடிசாவில் பயனடைந்த கர்ப்பிணிப் பெண்கள் வெறும் 5 பேர் மட்டுமே. இவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த உதவித்தொகை வெறும் 25 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், ஒடிசாவில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 274 கோடி என்று கணக்கு காட்டியிருக்கிறார்கள்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மக்களை எப்படியெல்லாம் மோடி அரசு ஏமாற்றி இருக்கிறது என்பதற்கு பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவும் மற்றொரு உதாரணமாகி இருக்கிறது.

;