tamilnadu

img

தேச நலனுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக பிடிஐக்கு மிரட்டல்...

புதுதில்லி:
இந்தியாவின் மிகப்பெரிய செய்தி ஏஜென்சி நிறுவனமான, பிடிஐ-க்கு, மத்திய அரசின் பிரசார் பாரதி மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’ (Press Trust of India) எனப்படும் பிடிஐ ஆனது, இது 1947-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1949 முதல் செயல்பட்டு வரும்முதன்மையான செய்தி ஏஜென்சி ஆகும். 100 பத்திரிகை நிறுவனங்கள் இணைந்து இந்த செய்தி நிறுவனத்தை நடத்துகின்றன. ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையை பிடிஐ-க்கு செலுத்தி, அதனிடமிருந்து செய்திகளை பெற்று வெளியிடுகின்றன. மத்திய அரசின் பிரசார் பாரதியும் பிடிஐ சந்தாதாரராக உள்ளது.இன்றைய நவீன தொழில்நுட்பம், உள்ளங்கைக்கே செய்திகளைக் கொண்டுவந்து சேர்த்தாலும், பிடிஐ வழங்கும் செய்திக்கு உலகளவில் ஒரு நடுநிலைப் பார்வையும்,  நம்பகத்தன்மையும் உண்டு. இந்நிலையில்தான், இந்திய - சீன எல்லை விவகாரத்தில், தேச நலனுக்குவிரோதமாக செய்திகளை வெளியிடுவ தாக பிடிஐ நிறுவனத்தை மத்திய அரசின் பிரசார் பாரதி செய்தி நிறுவனம் (PBNS) குற்றம் சாட்டியுள்ளது.கிழக்கு லடாக்கில் எழுந்துள்ள பிரச்சனை குறித்து, தில்லியில் உள்ள சீனாவின் தூதர் சென் வெய்துங் அளித்த பேட்டியை பிடிஐ வெளியிட்டது. அதேபோல் சீனாவில் உள்ள இந்தியதூதரைப் பேட்டிகண்டு, அதனையும் பாரபட்சமில்லாமல் பிடிஐ வெளியிட்டது.

எல்லையில் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியின் பேட்டி அமைந்திருந்தது. தில்லியில் உள்ள சீனத் தூதரோ, இந்தியாதான் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது என்று அவரின் பேட்டியில் கூறியிருந்தார்.ஆனால், பிடிஐ வெளியிட்ட இந்த இரண்டு பேட்டிகளுமே சீனா தொடர்பானபிரதமர் மோடியின் கருத்துகளுக்கு நேர் எதிராக இருக்கின்றன என்று பிரசார் பாரதி குற்றம் சாட்டியுள்ளது.அதாவது, எல்லையில் ஊடுருவலே நடக்கவில்லை; ஆக்கிரமிப்பும் இல்லை என்பது பிரதமர் மோடியின் கருத்து. ஆனால், சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரியோ, “லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு சீனத் துருப்புக்கள் திரும்பிச் செல்ல வேண்டும்” என்று அவரது பேட்டியில் கூறி, சீன ஊடுருவலை உறுதிப்படுத்தி விட்டார். மோடி மறைக்க முயன்றதை, மிஸ்ரி அம்பலப்படுத்தி விட்டார். இதுதான் மோடி அரசுக்கு தற்போது நெருக்கடியாகி விட்டது.இதனை மனத்தில் வைத்தே, பிடிஐ தேசநலனுக்கு எதிராக செய்தி வெளியிடுவதாகவும், பிடிஐ-க்கான சந்தா செலுத்துவதை நாங்கள் ஏன் நிறுத்தக் கூடாது என்றும் பிரசார் பாரதி ஒரு கடிதத்தை பிடிஐ- நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.பிரசார் பாரதியின் இந்த மிரட்டலை எதிர்கொள்வது தொடர்பாக பிடிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.

பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்
இந்நிலையில், பிடிஐ நிறுவனத்தை பிரசார் பாரதி மிரட்டுவதற்கு, இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் (IJU), இந்திய மகளிர் பிரஸ் கார்ப்ஸ் (IWPC), இந்திய வெளிநாட்டு நிருபர்கள் சங்கம் (IAFC) உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. பிடிஐ போன்ற ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தைத் தகர்த்தெறிய அரசாங்கம் முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றும், குறிப்பிட்ட இந்த விவகாரத்தில், தாங்கள் பிடிஐ நிறுவனத்துடன் இருப்பதாகவும் அவைகள் கூறியுள்ளன.

;