tamilnadu

ஆன்லைனில் ஊட்டச்சத்து விநாடி-வினா போட்டி...

புதுச்சேரி:
நமது நாட்டில் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரமாகவும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகவும் (போஷன் மா) கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் கல்வி அமைச்சகமும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து ஆன்லைனில் ஊட்டச்சத்து (போஷன் அபியான்) குறித்த விநாடி-வினா போட்டியை நடத்துகின்றன.
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கான ஊட்டச்சத்து குறித்த அறிவைப் பரவலாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது. அதாவது 2022 ஆண்டுக்குள் இந்தியாவை ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஒவ்வொருவருக்கும் தேவையான தகவல்களை அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த ஆன்லைன் விநாடி-வினா போட்டியின் நோக்கமாகும். வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் குழந்தைகள் குள்ளமாக இருத்தல், இரத்தச்சோகை, குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறத்தல், இதர ஊட்டச்சத்துப் பிரச்சனைகள் ஆகியவற்றின் மீது பொதுக்கவனம் செலுத்த இந்தப் போட்டி உதவும்.
ஆன்லைனில் quiz.mygov.in என்ற இணைய தளத்தில் இந்தப் போட்டி 30.9.2020 வரை நடைபெறும். யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொள்ளலாம்.  ஆனால் ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க முடியும். “உணவு & ஊட்டச்சத்து” என்ற மையக் கருத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

 6 கேள்விகளுக்கு 60 விநாடிகளுக்குள் பதில் அளிக்க வேண்டும்.  சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் போதும்.  ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள கேள்விகள் தொகுப்பில் இருந்து தன்னிச்சையாக 6 கேள்விகள் கேட்கப்படும்.  கேள்விகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும். கேள்விகளுக்குப் பதில் அளித்து முடித்த உடனேயே பங்கேற்பாளர்களுக்கு மின்சான்றிதழ் கிடைக்கும்.  போட்டிக்கான கடைசித் தேதிக்குப் பிறகு பங்கேற்றவர்கள் தாங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆன்லைன் விநாடி-வினா போட்டியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் quiz.mygov.in என்ற இணைய தளத்துக்குச் சென்று பெயர், பிறந்த தேதி, தொடர்பு முகவரி, இமெயில் முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றைப் பதிவு செய்துவிட்டு கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம்.

;