tamilnadu

img

கல்விக்கடன் கிடைத்தவர்களில் உயர்சாதி மாணவர்களே அதிகம்...மிகப்பெரும் சமூக அநீதி : சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

புதுதில்லி:
அரசாங்கமே திரும்பச் செலுத்தும்  உத்தரவாதம் அளித்து, ரூ.7.5 லட்சம் வரையில் ஒவ்வொரு மாணவருக்கும் அனுமதியளிக்கப் பட்டுள்ள கல்விக் கடன் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள கல்விக்கடன் களில் சுமார் 70 சதவீதம் பொதுப்பிரிவினைச் சேர்ந்த உயர்சாதி மாணவர்களுக்கே சென்றடைந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. 

மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், கல்விக் கடன்கள் தொடர்பாகவும், கல்விக் கடன் பெற்ற எளிய மாணவர்கள் வங்கி நிர்வாகங்களால் ரிலையன்ஸ் போன்றதனியார் கடன் வசூல் ஏஜென்சிகள் மூலம் கடுமையாக துன்புறுத்தப்படுவது தொடர்பாகவும்கேள்வி எழுப்பி,  இந்த அதிர்ச்சிகரமான விவரங்களை கிடைக்கப் பெற்றுள்ளார். தமிழகத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைப்பதில்லை. கல்விக் கடன் பெற, பிணையாக எந்த சொத்து விவரத்தையும் காட்ட வேண்டியதில்லை என்ற விதிகள்இருந்தாலும், வங்கி நிர்வாகங்கள், ஏழை, எளிய மாணவர்களிடம் சொத்து விவரங்களைக் கேட்டு, அது இல்லை என்ற நிலையில்,கடன் கொடுக்க மறுத்து வருகின்றன. இதனால் நல்ல மதிப்பெண் பெற்று கல்வி வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கட்டணம் செலுத்தமுடியாமல் படிப்பையே கைவிடும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்து மாணவர்கள் ஏராளம். அப்படியே கல்விக்கடன் ஏதேனும் பரிந்துரையின் பேரில் கிடைக்கப்பெற்றாலும் குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பே அந்தக் கடனை கடுமையாகநிர்ப்பந்தித்து வசூல் செய்யும் நடவடிக்கைகளும், உடனடியாக செலுத்த முடியாதமாணவர்களையும் அவரது பெற்றோர் களையும் மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் வேதனையின் விளிம்புக்கு தள்ளப்படும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. 

சு.வெங்கடேசன் கேள்வி
இத்தகைய பின்னணியில், இப்பிரச்சனை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பிருந்தார். இந்தக் கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்து அறிக்கை ஒன்றை அளித்தது. அப்போது அதன் மீது அவையிலும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்து அமைச்சகம் அளித்துள்ள குறிப்பில் உள்ள விவரங்கள்,  கல்விக்கடன் தொடர்பான பல்வேறுஅதிர்ச்சிகரமான  உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள கல்விக் கடன்களில் 70 சதவீதம் கடன்கள் பொதுப்பிரிவினர் என்றுவகைப்படுத்தப்பட்டுள்ள உயர் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது. 

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் குறிப்பின்படி, கல்விக் கடன்களுக் கான உத்தரவாத நிதித்திட்டம் (சிஜிஎப்எஸ்இஎல்) நடைமுறையில் இருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, அளிக்கப்படும் கல்விக் கடன்களுக்கு தேசிய நிதி உத்தரவாத அறக்கட்டளை கம்பெனி லிமிடெட் (என்சிஜிடிசி) என்ற நிறுவனம், அரசால் நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டு, வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதத்தை மாணவர்கள் சார்பில் அளிக்கிறது.  இத்திட்டத்தின் கீழ் கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள் எந்தவிதமான சொத்து இல்லை என்றாலும், சொத்து குறித்த உத்தரவாதம் இல்லையென்றாலும் ரூ.7.5 லட்சம் வரையில் கல்விக் கடன் பெற முடியும். இத்திட்டத்தின்கீழ் 2016-17 ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை கடந்த மூன்றுஆண்டுகளில் மட்டும் 4.1 லட்சம் மாணவர்கள் பலன் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக இதில், 67 சதவீத மாணவர்கள் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் குறிப்பு ஒப்புக் கொள்கிறது. வெறும் 23 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 7 சதவீத தாழ்த்தப்பட்ட மாணவர்களும் 3 சதவீத பழங்குடி மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கல்விக்கடன் பெறுகிற வாய்ப்பினை அடைந்திருக்கிறார்கள். மொத்தம் கடன் கிடைக்கப்பெற்ற 4,10,333 மாணவர்களில் 2,75,028 மாணவர்கள் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மொத்தம் ரூ.9,730 கோடி கல்விக்கடன் விடுவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 94,348 பேருக்கு ரூ.2,750 கோடியும், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 28,614 பேருக்கு ரூ.926 கோடியும், பழங்குடி மாணவர்கள் 12,343 பேருக்கு ரூ.391 கோடியும், ஆக மொத்தம் ரூ.13,797 கோடி கல்விக்கடனாக அளிக்கப்பட்டுள்ளது. இது முறையே, 70.5 சதவீதம், 19.9 சதவீதம், 6.7 சதவீதம், 2.8 சதவீதம் ஆகும்.

 அதிகபட்ச கடன் தொகையான ரூ.7.5 லட்சம் வரையில் கடன் கிடைக்கப்பெற்றதிலும் உயர்சாதி மாணவர்களே அதிகம். பிற பிரிவு மாணவர்களுக்கு முழுமையான தொகை கடனாக அளிக்கப்படவில்லை என்பதும் இந்தக் குறிப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேற்கண்ட திட்டத்தின்கீழ் கடந்தமூன்று ஆண்டுகளில் மொத்தம் விடுவிக்கப் பட்டுள்ள கல்விக் கடன் தொகை ரூ.13,797கோடி. இதில் 70 சதவீதம் கடன் தொகையை, உயர்சாதியைச் சேர்ந்த 67 சதவீத மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதன்படி கணக்கிட்டால், உயர்சாதி மாணவர்கள் சராசரியாக ஒவ்வொருவரும் ரூ.3.5 லட்சம் அளவிற்கு கடன் பெற முடிந்திருக்கிறது. மாறாக, பிற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சராசரி கடன்தொகை என்பது குறைவாக இருக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு சராசரியாக ரூ.2.91 லட்சம், தாழ்த்தப்பட்டமாணவர்களுக்கு ரூ.3.24 லட்சம், பழங்குடி மாணவர்களுக்கு ரூ.3.17 லட்சம் என்ற அளவிலேயே கடன் கிடைத்துள்ளது. 

அப்பட்டமான சமூக அநீதி
பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விபரங்கள்  கடினமான முயற்சிகளுக்குப் பிறகே, கேள்விக்கு பதில் என்ற முறையில் கிடைக்கப்பெற்றது என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.,பல்வேறு திட்டங்களின் கீழ் அளிக்கப் படுகிற கல்விக்கடன்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுவது கடினம் என்ற போதிலும், அரசாங்கத்தாலேயே திருப்பிச் செலுத்தும் நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்ட கல்விக்கடன் திட்டத்தின் விவரங்கள், அனைத்துக் கல்விக் கடன்களும் அதிகபட்சமாக யாருக்கு போய்ச் சேருகின்றன என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது என அவர் சாடுகிறார். மேலும், இந்த குறிப்பிட்ட திட்டமானது எந்தவிதமான பிணையும் இல்லாமல் கல்விக்காக அளிக்கப்படுகிற சிறிய அளவிலான கடன்களுக்கான திட்டம் மட்டும்தான் என குறிப்பிடுகிற அவர், “சமூக- பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய கடன்தொகையை பிற பகுதியினர் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இந்த விபரங்கள் காட்டுகின்றன. இவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது என்பது பகிரங்கமாக தெரிய வந்திருக்கிறது. இது அப்பட்டமான சமூக அநீதியாகும்” என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் வங்கிகூட இல்லை 
2017-18ஆம் ஆண்டின் என்சிஜிடிசி அறிக்கையின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் அளிக்க 29 வங்கிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பிரதானமான தனியார்துறை வங்கிகள் எதுவும் இல்லை. அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இடம் பெற்றுள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவலும் மனிதவள மேம்பாட்டுத்துறை குறிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த குறிப்பின்படி, 83 சதவீத கடன்கள், ரூ.4 லட்சம் என்ற அளவிற்குள் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. சு.வெங்கடேசன் எம்.பி., மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ள இந்த விவரங்கள் தமிழகத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.நாமக்கல்லை மையமாகக் கொண்டு கல்விக்கடன் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிற முன்னாள் வங்கி மேலாளரான ராஜ்குமார், “இந்த விவரம், கல்விக்கடன்கள் என்பவை பிரதானமாக அந்தக்கடன் எப்படி கிடைக்கிறது என்பதைப் பற்றி விவரங்கள் அறிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே சென்றடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது; அவர்களது சாதிமற்றும் வர்க்க வட்டத்திற்குள் இந்த விபரங்கள் தெளிவாக பகிர்ந்து கொள்ளப்படு கின்றன; அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கடன் பெற்று விடுகிறார்கள்” என்கிறார். கல்விக்கடன் பெற உதவி செய்யும் ஒரு அமைப்பின் பொறுப்பாளரான கே.சீனிவாசன் “அனைத்து கல்விக்கடன்கள் தொடர்பான முழு விவரங்களும் கிடைக்கப் பெற்றால், இதில் மிகப் பெரிய சமூக அநீதி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வரும்; எளிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்னும் கல்விக்கடன் கிடைக்கப்பெறாமல் துயரத்தில் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது” என்கிறார்.

;