tamilnadu

img

ஊடகங்களைப் பணிய வைக்க புதிய அஸ்திரம்... அமித்ஷாவுக்கு அதிகாரத்தை கைமாற்றிய மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம்

புதுதில்லி:
தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, கொரோனா பரபரப்புகளுக்கு இடையே, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், அண்மையில் சத்தமில்லாமல் மாற்றியமைத்து, அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியான இந்த அறிவிக்கை மீதான, கருத்துகளை மே 15 ஆம் தேதிக்குள் அமைச்சகத்துக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.இதற்கு தற்போது கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள் ளன. தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை, தங்களின் கைப்பாவையாக மாற்றி, ஆட்டிப்படைப்பதற்கான முயற்சியில் மோடி அரசுஇறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வந்துள் ளன.

அதாவது, தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கான பாதுகாப்பு அனுமதியின் (Security Clearance) கால வரம்பு, இதுவரையிலான விதிமுறைகளின்படி பத்து வருடங்களாக இருந்த நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்த அனுமதியைஉள்துறை அமைச்சகம் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய முடியும் என்பதாக மோடி அரசுமாற்றியமைத்துள்ளது. அனுமதி ரத்துக்கு முன்னதாக தொடர்புடைய சேனலிடம் ‘விளக்கம்’ கேட்கப் படும் என்று மட்டும் ஒரு வரியைச் சேர்த்துள்ளது.வேகமாக வளர்ந்து வரும் ஒளிபரப்பு தொழில் நுட்பம், சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த புதிய வழிகாட்டும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டதாக, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

ஆனால் தனியார் செயற்கைக் கோள் செய்திச்சேனல்களை அரசின் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுக்குள் வைக்கும் நோக்கிலேயே இந்த புதிய வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக செயற்கைக்கோள் சேனல் ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.“புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு சேனலின் இரட்டை லோகோவை பயன்படுத்தினால் 30 நாட்களுக்கு ஒளிபரப்புவதைத் தடைசெய்வது முதல்,அந்த சேனலுக்கான நேரடி ஒளிபரப்பு உரிமைஆறு மாதங்கள் வரை நிறுத்தப்படும். மேலும் ஒருதனியார் சேட்டிலைட் சேனல் நிர்வாகத்தில் இயக்குநர்கள் மாற்றம் அல்லது ஒரு புதிய நிர்வாகியை நியமித்தல், பங்குதாரர்கள் மாற்றம் அல்லது ஒரு சேனலை ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் வாங்குவது போன்ற அனைத்து சூழல்களிலும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் சேனல்களின் நிர்வாகத்தில் அரசு முழுமையாக தலையிடும் நிலை ஏற்படும்.

இந்த புதிய வழிகாட்டுதல்களில் தகவல் ஒலிபரப்புத் துறையை விட உள்துறைக்கே அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. ஆக இந்த வழிகாட்டுதல் அமலுக்கு வரும்போது அமித் ஷா நினைக்காமல் இனி ஒரு சேனலும் செயல்பட முடியாது. தொடங்க முடியாது, நிர்வாகிகளை மாற்ற முடியாது என்ற நிலையே உருவாகியிருக்கிறது” என்று ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

;