tamilnadu

img

புறநானூறு பாடல் மூலம்  மோடிக்கு புத்திமதி சொன்னாரா?

புதுதில்லி:
பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில், தொழிற்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், தற்போது மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், நிதி யமைச்சர் பொறுப்பில் நிய மிக்கப்பட்டுள்ளார்.
அந்த அடிப்படையில், நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன், தனது முதல் நிதிநிலை அறிக்கையை வெள்ளியன்று தாக்கல் செய்தார்.அப்போது, வரிகள் குறித்து பேசத்துவங்கும் முன்பு, ஒரு நாட்டில் வரிகள், எப்படியானதாக இருக்க வேண்டும் என்று, சங்க இலக்கியமான புறநானூற்றின் 184-ஆவது பாடலில் கூறப்பட்டு இருப்பதை எடுத்துரைத்தார்.

“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு     உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே” 
- என்று முழுப்பாடலையும் தமிழில் வாசித்து, பின்னர் அதற்கு ஆங்கிலத்தில் விளக்கமும் கூறினார்.

“மிக சிறிய நிலப்பரப்பில் விளைந்த நெல்லை முறையாக அறுத்து, உணவுக் கவளங்களாக்கி யானைக்கு கொடுத்தால், யானை அதை பல நாட்களுக்கு உண்ண முடியும்; ஆனால் பெரிய அளவில் வயல் இருந்தாலும், யானை தானே இறங்கி வயலில் பயிர்களை சாப்பிட ஆரம்பித்தால் யானை சாப்பிடுவதை விட,அதன் காலில்  மிதிபட்டு நசுங்கி அழியும் நெற்பயிர் களின் அளவு அதிகமாக இருக்கும். அதுபோல, ஒரு நாட்டின் தலைவர், வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடம் வரியை திரட்டினால் நாடு தழைக்கும். மாறாக, நாட்டை ஆள்பவன் அறிவு குறைந்து, முறை அறியாமல், ஈவு இரக்கமில்லாமல் வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான்.” - இதுதான் நிர்மலா சீதாராமன் கூறிய பாடலின் விளக்கம்.

இதனிடையே, புறநானூற்றுப் பாடல் மூலம் நிர்மலா சீதாராமன் என்ன சொல்ல வருகிறார்.. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஈவிரக்கம் இல்லாம் வரிகளைப் போடுகிறது என்று குற்றம் சாட்டுகிறாரா, அல்லது வரிகளைக் குறைக்க வேண்டும் என்று புத்திமதி கூறுகிறாரா? என்று பாஜக-வினர் சற்று குழப்பம் அடைந்தனர். பிரதமர் மோடியும் சற்று அதிர்ச்சி அடைந்தார். எனினும் அதை வெளிக்காட்டாமல், நமட்டுச் சிரிப்பாக சிரித்து, நிர்மலா சீதாராமனை பாராட்டி மேஜையைத் தட்டினார். பாஜக எம்.பி.க்களும் அவரைப் பின்தொடர்ந்து மேஜையைத் தட்டினர்.செய்யுளுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்பாகவே, அர்த்தம் புரிகிறதா, என்று தமிழக எம்.பி.க்களிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி இருந்ததால், பாடலின் சூட்சமத்தைப் புரிந்த, தமிழக எம்.பி.க்கள் ‘நீங்களே மோடியை விமர்சிக்கும்போது, எங்களுக்கு கசக்கவா செய்யும்’ என்று அவர்களும் மேஜையைத் தட்டி நிதியமைச்சரைப் பாராட்டினர்.இதனால் சுதாரித்துக் கொண்ட நிர்மலா சீதாராமன், “பாண்டியன் அறிவுடை நம்பிக்கு, புலவர் பிசிராந்தையர் கூறிய அந்த அற்புதமான அறிவுரையை இந்த அரசும் கேட்டு நடக்கிறது. யானை புகுந்த விளை நிலம் போல் வரி இருக்காது” என்று சமாளித்துள்ளார்.

;