tamilnadu

img

இப்போதாவது தொற்றுநோயியல் நிபுணர்களிடம் ஆலோசனை கேளுங்கள்... மோடிக்கு மருத்துவ வல்லுநர்கள் கூட்டாக கடிதம்..

புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இந்நிலையில், தொற்று நோயியல் நிபுணர்கள், சமூக விஞ்ஞானிகளின் ஆலோசனையைப் பெறாமல், அரசு அதிகாரிகளை மட்டுமே நம்பி இருந்ததற்கான விலையை இந்தியா தற்போது கொடுத்துக்கொண்டிருப்பதாக, மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே, புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியிருந்தால், கொரோனா பரவல், இந்த அளவிற்கு அதிகரித்து இருக்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் குமார், எய்ம்ஸ் சமூகமருத்துவத்துறை (Community Medicine) பேராசிரியர் டாக்டர் புனீத் மிஸ்ரா, எய்ம்ஸ் சமூக மருத்துவமையத்தின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் கபில்யாதவ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு, பிரதமர்
மோடிக்கு கூட்டறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

ஏப்ரல் 6-ம் தேதி அமைக்கப்பட்ட கோவிட் -19 க்கான தொற்றுநோயியல் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சி குழுவின் தலைவராக இருப்பவர் டாக்டர் டி.சி.எஸ். ரெட்டி. தில்லிஎய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவப் பிரிவின் முன்னாள் பேராசிரியர். அதேபோல இத்துறைக்கு தற்போதைய தலைவராக இருப்பவர் டாக்டர் சஷிகாந்த். இவர்களும் அறிக்கையில் கையெழுத்திட்டு உள்ளனர்.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பொதுமுடக்கம் கடந்த மார்ச் 25 அன்று தொடங்கும் போது 606 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பொதுமுடக்கத்தின் 4-ஆவது கட்டம் முடியும் போது, மே 24 அன்று ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகும் சமூகப் பரவல் இல்லை என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களிலும், சாலையில் நடந்தும், சைக்கிளிலும் செல்லும் போது, அவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நாட்டின் மூலை முடுக்கிற்கெல்லாம் கொரோனாவை கொண்டு செல்கின்றனர்.குறிப்பாக கிராமப்புறங்களுக்கும், புறநகர்பகுதிகளுக்கும், குறைவான பாதிப்பு இருக்கக்கூடிய மற்றும் மருத்துவ வசதி குறைவாக இருக் கும் மாவட்டங்களுக்கும் நோய்த்தொற்றைக் கொண்டு செல்கின்றனர்.கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டு வருவற்கு முன்பே,புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்குஅனுப்பியிருந்தால், கொரோனாவில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்படுவதை தவிர்த்திருக்கலாம், பரவலின் வேகத்தையும் குறைத்திருக்கலாம்.

நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் சிறந்த பொதுமுடக்க மாதிரிகளை (மாடல்கள்) அறிந்த,நோய் பரவல் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய தொற்றுநோயியல் நிபுணர்களை இந்திய அரசு கலந்து ஆலோசித்து இருந்தால், பொதுமுடக்கத்தை இன்னும் சிறப்பாக செயல் படுத்தி இருக்கலாம்.பொதுக் களத்தில் கிடைக்கக்கூடிய குறைந்த தகவல்களிலிருந்து, வரையறுக்கப்பட்ட களப்பயிற்சி மற்றும் திறன்களுடன் உள்ள மருத்துவர்கள்மற்றும் கல்வி தொற்று நோயியல் நிபுணர்களிடமிருந்தே அரசு அறிவுறுத்தல்களைப் பெற்றிருப்பதாகநாங்கள் கருதுகிறோம்.அத்துடன் நிர்வாகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளையே பெரிதும் ஆட்சியாளர்கள் நம்பியிருந்தனர். தொற்றுநோய், பொது சுகாதாரம், தடுப்பு மருத்துவம் மற்றும் சமூக விஞ்ஞானிகள் போன்ற துறைகளில் நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுடன் அரசின் ஈடுபாடு குறைவாக இருந்தது.இதன்காரணமாகவே மனிதநேயச் சிக்கல் மற்றும் நோய் பரவலில் மிகப்பெரிய விலையை இந்தியா அளித்து வருகிறது. குறிப்பாக தேசிய அளவில் பொருத்தமற்ற, அடிக்கடி மாறும் நிலைப்பாடுகள், கொள்கைகள் போன்றவை- தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள் மனநிலையில் அல்லாமல், ஆட்சியாளர்களின் ஒரு ‘பகுதி மனநிலையிலேயே’ வகுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மக்கள் கொரோனாவால் தற்போது சந்தித்துவரும் சிக்கல் மற்றும் உடல்நலன் சார்ந்த பிரச்சனைகளைக் களைய மாவட்டம், மாநிலம் அளவில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு சுகாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் குழுவை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையை வல்லுநர்கள் அளித்துள்ளனர்.

“கொரோனா நோயாளிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் வெளிப்படையாக இருத்தால்தான் ஆய்வு செய்பவர்களால் எளிதாக அணுக முடியும். அதை தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, நோயின் தீவிரம், அதைக் கட்டுப்படுத்தும் மாற்று வழிகளை கண்டறிய முடியும்.மக்களிடையே தீவிரமாக சமூக விலகலைக் கடைபிடிக்க வலியுறுத்துவது கொரோனா பரவல் வேகத்தைக் குறைக்கும். அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும், மக்களுக்கு விழிப்புணர்வும் தேவை.இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்களைக் கண்டறிந்து தொடர்ந்து சிகிச்சையளித்தல், கண்காணித்தல், கண்டுபிடித்து தனிமைப்படுத்துதலை தொடர்ந்து செய்ய வேண்டும்” என ஆலோசனைகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.

;