tamilnadu

img

மதச்சார்பின்மை, மாநில, மொழி உரிமை மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர் அன்பழகன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம்

சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் (98) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது திராவிட இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோருடன் இணைந்து வாழ்நாள் முழுவதும் பணியாற்றியவர். பகுத்தறிவு மற்றும் திராவிடக் கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம், அவசரகால நிலை எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டுசிறை சென்றவர். பலமுறைசட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். சிறந்த பேச்சாளர், ஆழ்ந்த சிந்தனையாளர். பன்முக எழுத்தாளர் என்றபெருமிதங்களை கொண்டவர். அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக பழகக் கூடியவர். எந்தசூழ்நிலையிலும் பதற்றமில்லாமல் நிதானத்தை கடைப்பிடிப்பவர்.

இந்திய நாடு மதவெறி சக்திகளின் ஆட்சியின் கீழ் மதசார்பின்மை, மாநில மற்றும் மொழி உரிமைகள் மீது தாக்குதலுக்கு உள்ளாகும் சூழ்நிலையில், இக்கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்பு கொண்ட பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் மறைவு ஈடு செய்யமுடியாததாகும். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், பேராசிரியரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த இரங்கல்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

;