tamilnadu

img

ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தக :  விவசாயத் தொழிலாளர் சங்கம் பிரதமருக்கு கடிதம்

 புதுதில்லி, மார்ச் 26- 21 நாட்கள் சமூக முடக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் வாழ்வாதாரங்களுக்காக நிதி ஒதுக்கீட்டை உடனடியாகச் செய்திடுமாறு வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் நாடு திணறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காக 21 நாட்கள் சமூக முடக்கத்தை அறிவித்திருப்பது தவிர்க்க முடியாததாகும். இதனைக் கடுமையான கட்டுப்பாட்டுடன் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று அனைத்து விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சமூக முடக்கமானது கிராமப்புற பொருளாதாரத்தைப் பொதுவாகவும், கிராமப்புற விவசாய நிலைமைகளைக் குறிப்பாகவும் கடுமையாகப் பாதிக்கும். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விளை பயிர்கள் அறுவடைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மத்திய- மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் அறுவடை சாத்தியமில்லாததாகிவிட்டது. விவசாயத் தொழிலாளர்களுக்கும் வேலை மற்றும் ஊதியம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பணப் பயிர்களும் பறிப்பதற்கு ஆள் கிடைக்காத நிலையில் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கடுமையாகப் பாதிக்கும். இவ்வாறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மத்திய அரசாங்கம், நிதி அமைச்சகத்தின் கீழ் ஒரு பணிக்குழுவை நியமித்திருப்பினும், அதன் வேலைத் திட்டங்கள் எதுவும் இதுவரை நாட்டிற்குத் தெரியப்படுத்தப்படவில்லை. மக்கள் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். கேரளம் மற்றும் சில மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டைச் செய்து நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன.

மத்திய அரசு, மாநில அரசுகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும். இவற்றைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் தொண்டர்களை வழங்குகிறோம் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் இதர வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து, தேவையான சுகாதாரத் தொண்டர்களை அளிப்பதற்கு விருப்பத்தினைத் தெரிவிக்கின்றோம். இத்தொண்டர்களுக்கு சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய பயிற்சி அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசாங்கம், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் துயர் துடைத்திட கீழ்க்கண்டவாறு சிறப்பு இடைக்கால நிதித் தொகுப்பினை அறிவித்திட வேண்டும். 70 கோடி வயது வந்த குடிமக்களுக்கு ஒரு மாதத்திற்கான உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்புக்காக உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் அளிப்பதற்காக, 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கீடு செய்து அறிவித்திட வேண்டும்.

அறுவடை செய்ய பாதுகாப்பு அளித்திடுக ஆறு மாத காலத்திற்கு அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவச ரேஷன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் அளித்திட வேண்டும். விளைந்து அறுவடை நிலையில் உள்ள பயிர்களை அறுவடை செய்வதற்கு, கேரளாவில் செய்ததைப்போல, அத்தியாவசிய சேவை என்று அறிவித்து அவற்றை அறுவடை செய்திடும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும். விரைந்து அறுவடை செய்வதற்காக, அறுவடை எந்திரங்களையும், வரவிருக்கும் காலத்திற்கான விதைகளையும் இலவசமாக அளித்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் சமூக முடக்கத்தின் விளைவாக வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிப்பதற்காக, வேலையின்மை ஆதாய ஷரத்து (unemployment benefit clause) ஒன்றை ஏற்படுத்திட வேண்டும். மாவட்ட-ஒன்றியங்களில் சோதனை மையம் கோவிட்-19 சோதனை வசதிகளை, அனைத்து மாவட்ட, ஒன்றிய மையங்களிலும் அமைத்திட வேண்டும்.

மத்திய- மாநில அரசாங்கங்கள் இந்நெருக்கடியைப் பயன்படுத்தி கறுப்புச்சந்தைப் பேர்வழிகள் கொழித்திடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்திட வேண்டும். அத்தியாவசியப் பொருள்களை போதுமான அளவிற்கு விநியோகம் செய்திட வேண்டும்.  ஸொமாட்டோ, ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும். எனினும், மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோர் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோர் ஆகியோர் மெஸ் மற்றும் சிறு சமையலகங்கள் மூலம் ஏற்கனவே தங்கள் உணவுகளை பெற்று வருகின்றனர். இதற்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகின்றது. இத்தகைய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகன ஓட்டுநர்கள், அடையாள அட்டை வைத்திருப்பதை சம்பந்தப்பட்ட வாகனங்களில் “அத்தியாவசிய சேவைக்காக” என்று வில்லைகள் ஒட்டியிருப்பதையும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் தவிர்க்க முடியாத விதத்தில் விவசாய வேலைகளில் ஈடுபடுவதற்காக, உரிய பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அளித்திட வேண்டும். சமூக முடக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் இழப்பு குறித்து ஆய்வு செய்து, பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் உரிய இழப்பீடு அளித்திட வேண்டும். பயிர்க்கடன் முழுமையாகச் செலுத்தாமல் இருந்தாலும், புதிதாகப் பயிர்க்கடன் அளித்திட வகை செய்யும் விதத்தில் பயிர்க்கடன் வழிகாட்டும் நெறிமுறைகளை மாற்றி அமைத்திட இந்திய ரிசர்வ் வங்கிக்கும், அனைத்து வங்கிகளுக்கும் கட்டளை பிறப்பித்திட வேண்டும். பயிர்க்கடன் வசூலித்திட ஓராண்டு காலத்திற்கு காலநீட்டிப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளன

;