tamilnadu

img

கேரளாவில் கோவிட் சிகிச்சையில் 20 பேர்....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் ஞாயிறன்று 7 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் 3 பேர், திரிச்சூர் 2, எர்ணாகுளம், மலப்புறம் மாவட்டங்களில் தலா ஒன்றுமாகும். திரிச்சூர், மலப்புறம் மாவட்டங்களில் கடந்த 7ஆம் தேதி அபுதாபியிலிருந்து விமானத்தில் வந்தவர்களிடம் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வயநாட்டில் இருவருக்கு தொடர்புகள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. வயநாட்டிலிருந்து ஒருவரும் எர்ணாகுளத்திலிருந்து ஒருவரும் சென்னையிலிருந்து வந்தவர்கள்.  

சிகிச்சைபெற்று வந்த கண்ணூர் மாவட்டச் சேர்ந்த இருவரும், பாலக்காடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் குணமடைந்தனர். கோவிட்டிலிருந்து இதுவரை 489 பேர் குணமடைந்துள்ளனர். 20 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 26,712 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவற்றில், 26,350 வீடுகளிலும், 362 மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்படுகின்றனர். 135 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 37,464 நபர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

36,630 மாதிரிகளில் நோய் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. தீவிர கண்காணிப்பின் ஒரு பகுதியாக சுகாதாரப் பணியாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், சமூக சேவகர்கள் போன்ற முன்னுரிமை பிரிவினரிடமிருந்து 3825 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அவற்றில் 3525 மாதிரிகளில் தொற்று இல்லை. தற்போது 33 ஹாட் ஸ்பாட்கள் உள்ளன. ஞாயிறன்று மாநிலத்தில் புதிய ஹாட் ஸ்பாட்கள் எதுவும் இல்லை.

;