tamilnadu

img

1,16,500 அறைகள்.... 40,000 பரிசோதனைக் கருவிகள்... வெளிநாடுகளிருந்து வருவோருக்காக சிறப்பு அதிகாரிகள்...

கொச்சி:
வெளிநாடுகளில் வசிக்கும் கேரளியர் திரும்பி வரும்போது அவர்களுக்கு உதவ மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் கண்காணிப்பில் தங்குவதற்கான 1,16,500 அறைகள்; 40,000 பரிசோதனைக் கருவிகள் உட்பட போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் உள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த ஏற்பாடுகள் தவிர ஓட்டல்கள், ரிசார்ட்டுகளில் 9,000 அறைகள் தயாராக உள்ளன. இங்கு சொந்த செலவில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில துயர் துடைப்பு ஆணையத்தின் சார்பில் 4,694 கட்டடங்களில் 82,566 படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், விடுதிகள், ஆயுர்வேதமையங்களில் 55,000 அறைகள் உள்ளன. இதுகுறித்தவிவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. தேவையான வசதிகள் போன்றவற்றுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏப்ரல் 1 முதல் இதுவரைரூ.13.45 கோடி அனுமதிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின்சாரம், குடிநீர் தடையின்றி கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் குடும்பஸ்ரீ கிளைகள் மூலம் உணவு வழங்கப்படும். விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் அவர்கள் வசிப்பிடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அரசு வாக்குமூலம் அளித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் கேரளியர் 4.52 லட்சம் பேர் நாடு திரும்ப ஏப்ரல் 6 வரை பதிவு செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து திரும்பி வருவோருக்கு அரசு செய்துள்ள ஏற்பாடுகளை விளக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டததைத் தொடர்ந்து இந்த வாக்குமூலத்தை அரசு வியாழனன்று சமர்ப்பித்தது.
 

;