tamilnadu

img

தப்பிப் பிழைக்குமா சிறுமலை?

பல்லுயிர்ச்சூழல் பாதுகாக்கப்படுமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது சிறுமலை.  சிறுமலையில் வளமான பல்லுயிர் வகைக் காடுகளும்,  நடுமலைப் பகுதியில் வெப்ப மண்டல வறண்ட இலையுதிர் காடுகளும் அமைந்துள்ளன. காபித் தோட்டங்கள், பழத் தோட்டங்கள், காய்கறி சாகுபடி காரணமாக சிறுமலையில் உள்ள அரிய வகை தாவரங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளன. தாவரங்கள் கணக்கெடுப்பு ஆய்வின்படி தென்னிந்தியாவில் உள்ள தாவரவகைகளில் 536 உயிர் தாவரங்களும், 895 சிற்றினங் களும் சிறுமலையில் உள்ளதாகக் கண்டறி யப்பட்டுள்ளது. இவை தவிர காட்டெருமை, சிறுத்தை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம் பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களும் வசிக்கின்றன. 

சிறுமலையின் சீதோஷ்ண நிலையும், பசுமை நிறைந்த புல்வெளிகளும் சுற்றுலாப் பயணி களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. பல்வேறு மருத்துவ மூலிகைகளையும், அரிய வகை மரங்களையும் உள்ளடக்கிய பகுதி என்ப தாலும்  அரிதான, அழிவின் தருவாயில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்களைப் பாது காக்கும் நோக்கத்தில் பல்லுயிர்ப் பெருக்க பூங்கா அமைப்பதற்கு சிறுமலையை அரசு தேர்வு  செய்துள்ளது. 120 ஏக்கர் பரப்பளவில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் இப்பூங்கா அமைய வுள்ளது.  மூங்கில் பூங்கா, ஆர்க்கிடோரியம் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் பூங்கா மட்டுமல்லாது பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை விளக்கும் விதமாக பல்வேறு வசதிகளுடன் கூடிய பார்வையாளர் தகவல் மையம், கள்ளிச்செடி தோட்டம், பனைப் பூங்கா ஆகியவை அமைய வுள்ளன. இயற்கைவளத்தைப் பாதுகாப்பதன் அவசியம், வனம் பற்றிய கல்வி அறிவு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. இத்தகைய பல்லுயிர்ப் பூங்கா அமைப்பதற்கான நிலங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

சிறுமலை வனப்பு சிதையும் அபாயம் 

சிறுமலையில் பல்லுயிர்ப் பூங்கா அமைவது வரவேற்கத்தக்கதுதான்.  பல்லுயிர்ப் பூங்காவை அமைக்கும் வேகத்தோடு சுற்றுலாப்பயணிகளுக்கு  தங்கும் விடுதிகள் அமைத்தல், உணவகங்கள், சுற்றுலா இடங்கள் குறித்து  விளக்குவதற்கு சுற்றுலா வழிகாட்டிகள் நியமித்தல், பேருந்து வசதி ஆகியவற்றையும் செய்துதரப்போவதாக அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.   சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து ‘ஸ்மார்ட் சிட்டி’ போல சிறுமலை யின் இயற்கை எழிலைக் குலைக்கும் விதமாக இந்தத் திட்டம் இருக்கப் போகிறதா அல்லது வனவிலங்குகளைக் காக்கும் பல்லுயிர் பூங்காவாக அமையப் போகிறதா என்பது தான் நம்முடைய கேள்வி.

ரியல் எஸ்டேட் அதிபர்களின் வேட்டைக்காடு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் அமைச்சர்கள், ஆளுங் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பெரும் பணக் காரர்கள் சிறுமலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. காஞ்சி மடத்திற்கும் இங்கு நிலம் உள்ளது. ஆனால் வனத்துறைக்கு சொந்தமான அடர் வன நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பல ‘சாமி யார்கள்’ சித்தர் பீடம் என்ற பெயரில் இடங்களை  ஆக்கிரமித்து வளைத்துப் போட்டு வருகிறார்கள். பூர்வ குடிகளான பளியர்கள் உள்ளிட்ட பலர் அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் நிலையும் உள்ளது. பல்லு யிர்ப் பூங்கா என்ற பெயரில் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால், சிறுமலை ரியல் எஸ்டேட் அதிபர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. 

பறவைகள் சரணாலயம் 
2010-ஆம் ஆண்டு  திமுக ஆட்சிக் காலத்தில் முல்லைப் பூங்கா சிறுமலையில் அமையப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தற்போது  அதே இடத்தில் பல்லுயிர்ப் பூங்கா அமைகிறது.  சிறுமலை ஒரு வேடந்தாங்கலாக உள்ளது. அழிந்து வரும் உயிரினமான தேவாங்கு, காட்டுப் பூனை, காட்டு முயல்கள், எறும்புத் தின்னி, மலைப் பாம்பு, நட்சத்திர ஆமை, விரியன் பாம்புகள், அரிய வகை தவளை இனங்கள் கழுகு இனங் கள் உள்ளிட்ட விலங்குகள்  உள்ளன.

வெளிநாட்டுப் பறவையினங்களான இலங்கை தவளை வாய்ப் பறவை, கிரேட் நைட்  ஜார், சிப்ட்லெட் உள்ளிட்ட பல வகை  பறவைகள் நவம்பர் மாதத்தில் இங்கு வரு கின்றன. நீலநிறக் கிளிகள், மரங்கொத்திகள், குயில்கள் ஆகியவையும் இங்கு அதிகம் உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை   காடுகளில் உள்ள அரிய வகை கொடி இனங்களும் இங்குள் ளன.  இந்த மலைக்கு அமைதி தேவை. அதிக  மக்கள் நடமாட்டம் வனத்தின் பல்லுயிர்ச் சூழலை பாதிக்கும். எனவே இங்கே நிஜமான பல்லுயிர் பூங்கா அமைய மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட வேண்டும்.  மரம் வெட்டப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை என முழுப் பொய்யை வனத்துறை அமைச்சர் பதிலாக கூறினார். அவரது வாக்கில் உறுதித்தன்மை இருந்தால்  தப்பிப்பிழைப்பது சிறுமலை மட்டுமல்ல; இங்குள்ள அரிய வகை உயிரினங்களும் தான்.

- இலமு, திண்டுக்கல்
 

;