tamilnadu

img

நையாண்டி : இதுதான் எனது ஆலோசனைப் பட்டியல்

அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் கோவிட்- 19 நிவாரண திட்டங்களின் பட்டியல் பார்த்து நீங்கள் சிலிர்த்துப் போயிருப்பீர்கள். என்னவோ தெரியவில்லை, நிதி அமைச்சர் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டத்தை 5வது தவணையோடு நிறுத்தி விட்டார். மொத்தத்தில் 19 கட்ட அறிவிப்புகள்  (இது கோவிட் -19 என்பதால்) திட்டமிடப்பட்டதாக, அரசு தரப்பின் மிக முக்கிய வட்டாரம் எனக்கு தெரிவிக்கிறது. அதில், 18 ஏற்கெனவே முடிவு செய்தாகிவிட்டது. 19வது கட்ட திட்டமிடுதலுக்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. விஷயம் என்னவெனில், 18வது கட்ட அறிவிப்புகளோடு அமைச்சகத்தின் சிந்தனைகள் மொத்தம் கொட்டித் தீர்த்துவிட்ட  நிலையில், அடுத்து என்ன என்பதில் கட்டை போட்டு உட்கார்ந்திருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவ நான் தயார் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படியான திட்டங்களை வரைவு செய்வது என்பது எனது நீண்ட கால பொழுது போக்கு.  தேசிய நெருக்கடி சூழ்ந்த இந்த நேரத்தில், என் சிந்தனைகளை இலவசமாக வழங்குவதை விட வேறென்ன செய்ய முடியும்? இதற்கு  கைம்மாறாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது தான், நிதியமைச்சர் எனது இந்த 19வது கட்ட நிவாரண அறிவிப்புகளுக்கான விஷயதானத்தை பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கும்போது, “இப்போது நான் செய்யும் இந்த அறிவிப்புக்கான ஆலோசனைகளை வழங்கியவர், இந்த நெருக்கடி நேரத்தில் தன்னை வெளிப்படுத்த விரும்பாத இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர், மனிதநேயர், சகல கலா வல்லவர்.” என்ற அறிவிப்பைச் செய்தால் போதும்.

அன்பர்களே, இது தான் எனது ஆலோசனை பட்டியல்:

பிரதம மந்திரி காய்கறி வண்டிகளைக் குடை சாய்க்கும் திட்டம்: ரூ. 80,000 கோடி

இந்தத் திட்டம் கோவிட் - 19 வெற்றிக் கதைகளில் முதன்மையானது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், நாடு முழுவதிலும் 38,971 காய்கறி வண்டிகளைத் தலைகீழாகக் குடை சாய்த்திருக்கிறது நமது காவல் துறை - இது மற்ற எந்த நாட்டை விடவும் 10,000 சதவீதம் அதிகம்! இது ஏப்ரல் மாதத்தில் 65,786 ஆக உயர்ந்தது. மே மாதத்தில் ஏற்கெனவே 96,456 வண்டிகள் உருட்டி விடப்பட்டுள்ளன. ஆக மொத்தம், இந்த மூன்று மாதங்களில் 7.4 லட்சம் டன் காய்கறிகளும், 30 லட்சம் பேருடைய வாழ்வாதாரங்களும் வெற்றிகரமாக அழித்து ஒழிக்கப்பட்டன.  நாம் இப்போது, இந்த வெற்றிகரமாகக் காய்கறி விற்பனை வண்டிகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போடும் திறமையை மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டு, 80,000 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தை முன்வைக்கிறோம்.
                                                                                                                                        
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்: கோவிட் - 19 சிறப்பு நடவடிக்கைகள்

லாக் டவுன் காலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளரை அடித்து வெளுக்கும் அறிவியல் பூர்வமான கலையைக் காவல் துறையினருக்குப் பயிற்றுவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  ஏற்கெனவே புலம் பெயர்ந்த தொழிலாளரை அடித்து நொறுக்கியதன் விளைவாக நைந்து போய்விட்ட லத்திகளைத் தூக்கிப் போட்டுவிட்டு அந்த வேலையைத் தொடர்வதற்குப் புதிய லத்திகள் வாங்க 5,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி உருவாக்கப்படும். சொந்தவூர் திரும்பத் துடிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் ஒற்றை ஆள் கூட இருக்குமிடம் விட்டுப் போகாதபடி உறுதி செய்யும் மாநில அரசுகளுக்குச்  சிறப்புப் பண உதவி திட்டம் கொண்டுவரப்படும்.


கண்காணிப்பு உள் கட்டமைப்பு ஊக்கத்தொகைகள்: ரூ. 9.80 லட்சம் கோடி

கோவிட் - 19 நெருக்கடியை எதிர்கொள்ளும் திட்டத்தின் அச்சாணி, கண்காணிப்பு செய்யும் வேலைதான். புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் அயோக்கிய சேது செயலி, உங்கள் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து, இந்தியாவின் உயர்
மட்டத்தில் வேவு பார்க்க நியமிக்கப்பட்டவர்களுக்கு நேரடி தகவல்களைக்கொடுக்கும். அயோக்கிய சேது செயலிக்கு எதிராக பிரச்சாரம் செய்வோரை முறியடிப்பதற்காக சிறப்பு சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நிதி ஒன்று 6.70 லட்சம் கோடி ரூபாய் செலவில்  நிறுவப்படும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை: ரூ.50,000 கோடி 

கோவிட் - 19 இதிகாச யுத்தத்தில் முன்னணி போர் வீரர்களாக இயங்கிக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு சொந்தத் தற்காப்பு சாதனம் (PPE) வேண்டும். எனவே ரூ. 20,000
கோடி செலவில் இதற்காகவே சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, தற்காப்பு சாதனங்கள் போதாமை குறித்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கும் ஊடகச் செய்திகளால் அரசாங்கத்திற்கும், பிரதமர் பெயருக்கும் இழைக்கப்பட்டிருக்கும் சேதத்தை சரி செய்து. தூக்கலான பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

நட்சத்திர மண்டலங்களுக்கு இடையே கால்நடை வர்த்தகத்தை முன்னெடுப்பது: ரூ. 20,000 கோடி 

இந்த அண்டத்தில் பல நட்சத்திர மண்டலங்களில் பால் வளம் அள்ளிப் பெருகும் வண்ணம் கால் நடைகள் மிகுந்து காணப்படுகின்றன. விண் வெளியில் பால்வளத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வண்ணம், “பால் வீதி” சிறப்பு நிதி ஒன்று நிறுவப்படும்.உள்நாட்டு பசுக்களை வேற்று கிரக பசுக்களோடு இணைய வைத்து, ஆனால், நமது தேசிய பாரம்பரிய கலாச்சார மகாத்மியங்கள் தக்கவைத்துக் கொண்ட கோமியம், சாணி வெளியேற்றும் கலப்பினப்  பசுக்களை வெற்றிகரமாக உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.


பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து பாடும் சிறப்பு திட்டம்: ரூ. 30,000 கோடி

கோவிட் - 19 லாக் டவுன் காலமானது, பல லட்சம் பேரை ஊதிய வெட்டு, வேலை இழப்புக்கு உள்ளாக்கி விட்டது. இதனால் பொருளாதார நிச்சயமின்மையும், மன அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக இருதய நோய்கள் பன்மடங்கு அதிகரிக்கக் கூடும். எனவே, பிரதமர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடும் சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். அதன்படி, காவல் துறையினர் பணக்காரர் வீடுகளுக்கு விஜயம் செய்து, பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் இசைத்துவிட்டு வருவார்கள். இது அந்த கனவான்களின் மன அழுத்தங்களைக் குறைக்கவும், போலீஸ்காரர்கள் மனித நேயத்தோடும், நட்புறவோடும் விளங்கவும் வழிவகுக்கும்.பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் மட்டும் இன்றி நேயர் விருப்பமாகக் கேட்கப்படும் 
வேறு பாடல்களும் கற்றுக் கொள்வதற்குக் காவல் துறையினரை ஊக்குவிக்க மூவாயிரம்  கோடி ரூபாய் கூடுதல் உதவியாக ஒதுக்கப்படும்.  லாக் டவுன் நேரத்தில் மனப்பாடம் செய்து காவல் துறையினர் பாடத் தக்க தேசிய அளவில் பிரபலமான இரண்டு பாடல்கள்: “சைத்தான் கா ஸாலா’ (சாத்தானின் மச்சானே), ‘தேரா கட்டா’ (நஷ்டம் என்னவோ உனக்குத் தான்).

கருத்துரிமைக்குப் புதிய வரையறை 

கருத்துரிமையை மறு வரையறை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இப்போது புழங்கும் விளக்கம் அரசாங்க அதிகாரிகள், ஆட்சியாளருக்கு நெருக்கமான பெருந்தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருக்கும்
எளிய ஜீவன்கள் எல்லோர்க்கும் அச்சத்தை உண்டு பண்ணியபடி இருக்கிறது. எனவே, அரசு, கருத்துரிமையை, “அரசாங்கத்தை, அமைச்சர் பட்டாளத்தை, அதிகாரவர்க்கத்தை, கூட்டணி கட்சி பிரதிநிதிகளை, பிரச்சார பீரங்கிகளைத் துதி பாடும் உரிமை” என்று மறு வரையறை செய்ய முன்மொழிகிறது.ஆகவே, அரசாங்கம் உண்மையிலே முட்டாள் தனத்தோடு நடந்தாலும் கூட, அதை ஒருமுட்டாள் போல் சித்தரிக்கும்படி யாரேனும் சுதந்திரமாகப் பேசினால், அது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்டு என்ன பெயரில் எல்லாம் தடை சட்டங்கள் உண்டோ அவற்றின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.ஒரு லட்சம் சுதந்திர பேச்சாளர் சிறைகள் நாடு முழுவதும் கட்டப்பட்டு, புதிதாகவரையறுக்கப்பட்டு இருக்கும் கருத்துரிமைக்குப்  புறம்பாக நடந்து கொள்ளும்  பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் குடிமக்கள் யாராக இருந்தாலும், அதில் ‘லாக் டவுன்’ (சிலேடை தற்செயலானது) செய்யப்படுவார்கள். இதற்காக ‘பிரதமர் - மிரட்டல் (PM - SCARES)’ நிதியிலிருந்து 85% ஒதுக்கப்படும்.

கட்டுரையாளர்  :  ஜி சம்பத் 

- தமிழில்: எஸ்.வி.வேணுகோபாலன்

நன்றி: தி இந்து ஞாயிறு இணைப்பு: 24.05.2020

;