tamilnadu

img

தாளினாமிக்ஸா... காலினாமிக்ஸா... க.சுவாமிநாதன்

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் கடைசி அத்தியாயம் “தாளினாமிக்ஸ்” என்ற தலைப்பில் உள்ளது.

“தாளி” என்றால் இந்தியில் சாப்பாடு என்று அர்த்தம். பொருளாதார ஆய்வறிக்கை மக்களின் பசியைப் பற்றி ரொம்ப கவலைப்பட்டிருக்கிறது என்று இத் தலைப்பை பார்த்தால் தோன்றும்.“மேக்ரோ ஸ்கேன்” இணைய பக்கத்தில் பிப்ரவரி 6, 2020 அன்று பொருளாதார நிபுணர் பேரா. சுப்பிரமணியம் எழுதியுள்ள கட்டுரையை படியுங்கள்.அவர் போடுகிற கணக்கு இது. இந்த ஆய்வறிக்கை தேச அளவில் ஒரு வேளை உணவுக்கு சைவம் எனில் ரூ 23 ம், அசைவம் எனில் ரூ 37 ம் சராசரியாக ஆகுமென (2019-20 விலைகள் அடிப்படையில்) மதிப்பிட்டுள்ளது. சைவம் சாப்பிடுபவர்கள் 3 பேர், அசைவம் சாப்பிடுபவர்கள் 7 பேர் என விகிதம் இருக்கலாம் என்கிறது அதே அறிக்கை. அப்படியெனில் ஒரு வேளை சைவம், அசைவம் இரண்டிற்குமான சராசரி உணவு செலவுக்கு  ரூ (23X3) + (37X7) ÷ 10 என்று கணக்கு போட வேண்டும். கால்குலேட்டரை தட்டுங்கள். (69) + (259) ÷ 10 = ரூ 32.8.  சரியா கணக்கு? 

அறிக்கை இரண்டு வேளை உணவாவது வேண்டாமா என்று “கருணை கணக்கும்” போடுகிறது. எவ்வளவு ? ஒரு நாளைக்கு ஒருவருக்கு ரூ 32.8X 2 வேளை= ரூ 65.60. ரூ 65 என வைத்துக் கொள்வோம். இது இருந்தால் ஒரு மனிதர் பசியில்லாமல் இருக்கலாம்.“சாப்பாட்டு கணக்கை” இப்படிப் போடுகிறது ஆய்வறிக்கை. ஆனால் “நிதி அயோக்” வறுமைக் கோட்டிற்காக அங்கீகரித்த டெண்டுல்கர் குழு 2012 ல் நிர்ணயித்த தொகை கிராமங்களில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு வருமானம் ரூ 27, நகரங்களில் ரூ 33. அப்படியெனில் சராசரி ரூ 30. விவசாயத் தொழிலாளர், ஆலைத் தொழிலாளர்க்கான விலைவாசி குறியீட்டெண் 2012 ல் இருந்து 2020 வரை 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அப்படியெனில் வறுமைக் கோட்டிற்கு 2012ல் ரூ.30 எனில் இப்போது ரூ.30X 150 %= ரூ.45 ஆகும். மறுபடியும் கால்குலேட்டரை தட்டி சரி பாருங்கள்.

இரண்டு கணக்குகளும் அரசாங்க கணக்குகளே. ஒரு மனிதர் பசியில்லாமல் இருக்க “தாளினாமிக்ஸ்” கணக்குப்படி ரூ.65  வேண்டும். ஆனால் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் இவர்கள் கணக்குப்படி தின வருமானம் ரூ 45 க்கு கீழே இருப்பவர்கள். சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்கள் கூட வறுமைக் கோட்டிற்கு மேல் வந்து விடுவார்கள் என்பதே  கணக்கு.கணக்கு தெரியவில்லையா? கால்குலேட்டர் இவர்களிடம் இல்லையா? எல்லாம் உண்டு. உதட்டுக்கும் உள்ளத்திற்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதுதான்.பொருளாதார நிபுணர் சுப்பிரமணியம் வார்த்தைகளில் சொல்வதானால் “ இது தாளினாமிக்ஸ் அல்ல; காலினாமிக்ஸ்”.(நன்றி : “A brief exercise not taking the Economic survey 2020 seriously” By S. Subramaniam, Economist- Wire 6.2.2020.)

===க.சுவாமிநாதன்===
;