tamilnadu

img

திருப்பூரில் நாளை வாக்கு எண்ணிக்கை அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்

 திருப்பூர், மே 21 -திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செய்தியாளர்களிடம் இது குறித்துக் கூறியதாவது: திருப்பூர் பல்லடம் சாலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையம் உள்ளது.இங்கு திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

100 மீட்டரில் தடுப்பு

கல்லூரி நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தேர்தல் அலுவலர், பார்வையாளர் மற்றும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தவிர மற்றவர் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் வாகனம் ஆட்சியரக வளாகத்திலும், அரசியல் கட்சி முகவர்கள் வாகனம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள காலி இடத்திலும் நிறுத்திவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு, கட்டுப்பாடு

வியாழனன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் இதர அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கேமராக்களின் தொகுப்புகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் பார்ப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர், பார்வையாளர்கள் தவிர இதர நபர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு பேனா, பென்சில், கால்குலேட்டர் போன்றவற்றை மாவட்ட நிர்வாகமே வழங்கும் என்பதால் அவர்கள் எவ்வித பொருட்களும் எடுத்து வர அனுமதி இல்லை.

வாக்கு எண்ணும் அறை

ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணுவதற்கு தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 4 மேசைகளும், ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் சரி பார்க்கப்பட்டு எண்ணுவதற்கு 1 மேசையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், 14 வாக்கு எண்ணும் உதவியாளர்கள், 14 வாக்கு எண்ணும் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் அலுவலர்கள் முன்திட்டமின்றி, சீரற்ற முறையில் (ரேண்டம்) சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்கு எண்ணும் மேசைக்கு ஒதுக்கீடு செய்யப்படுவர். தகுந்த அடையாள அட்டை இல்லாமல் எவரொருவரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தபால் வாக்குகள் மற்றும் ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு, நான்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும், ராணுவ வீரர்களின் தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கட்சி முகவர்கள்

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 14 வாக்கு எண்ணும் மேசைக்கும் தலா ஒருவர் வீதமும், உதவித்தேர்தல் அலுவலர் மேசைக்கு ஒருவரும் என ஒரு கட்சிக்கு 15 முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுவர். தபால் வாக்கு எண்ணிக்கைக்கு 4 மேசைக்கு தலா ஒரு முகவர் மற்றும் தேர்தல் அலுவலர் மேசைக்கு ஒரு முகவர் அனுமதிக்கப்படுவர். வேட்பாளர் மற்றும் முதன்மை முகவர் ஆகியோர் அனைத்து தொகுதி வாக்கு எண்ணும் அறைகளுக்கும் சென்று பார்க்கலாம். மற்ற முகவர்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மேசை தவிர பிற மேசைகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.இரு சட்டமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று பார்வையாளர்கள் ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசைக்கும் தலா ஒரு நுண் பார்வையாளர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு சுற்றுக்கு 14 மேசைகள் என்ற அடிப்படையில் திருப்பூர் தெற்கு 17 சுற்றுகள், திருப்பூர் வடக்கு 26 சுற்றுகள், பெருந்துறை 19 சுற்றுகள், பவானி 21 சுற்றுகள், கோபிசெட்டிபாளையம் 22 சுற்றுகள், அந்தியூர் 19 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும். அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் எண்ணப்படும்.

முடிவு விபரம் அறிவிப்பு

வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவினையும் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முறை (பப்ளிக் அட்ரசிங் சிஸ்டம்) வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவுரைப்படி ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை சுற்று முடிவிலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளமான சுவிதா போர்ட்டலில் முடிவு விபரம் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

விவிபாட் எண்ணிக்கை ஒப்பீடு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஏதேனும் ஐந்து வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, விவிபாட் பெட்டியில் இருக்கும், துண்டுச்சீட்டில் அச்சான சின்னங்களை எண்ணி, அவை அந்த வாக்குச்சாவடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வேட்பாளர்களின் சின்னங்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப் போகிறதா என்று சரிபார்க்கப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடு

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பு பணிக்கு மாநகர துணை ஆணையர், எஸ்.பி. என இருவர் தலைமையில், உதவி ஆணையர்கள் 5 பேர், ஆய்வாளர்கள் 13 பேர், உதவி ஆய்வாளர்கள் 52 பேர் மற்றும் 199 காவலர்கள், ஆயுதப்படை வீரர்கள் 74 பேர், சிறப்புப்பிரிவு காவலர்கள் 50 பேர், எல்லை பாதுகாப்புப் படையினர் 24 பேர் உள்பட மொத்தம் 477 பேர் பணியாற்றுவர்.

தபால் வாக்குகள்

செவ்வாய்க்கிழமை வரை 4,290 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள இருப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. புதனன்றுதபால் வாக்குகள் பெறப்பட்டு இருப்பறையில் வைக்கப்படும். வாக்கு எண்ணப்படும் 23ஆம் தேதி காலை 7 மணிக்குள் வரப்பெறும் தபால் வாக்குகளும் சேர்க்கப்பட்டு எண்ணப்படும். இவ்வாறு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பாஷியம் (தேர்தல்), கீதா பிரியா (பொது), தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

;