tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உடல்களை குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்

திருநெல்வேலி ஜூன் 25-  சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களான ஜெயராஜ்,இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உடல்களை, நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து   அவர்களது குடும்பத்தினர் வியாழனன்று பெற்றுக் கொண்டனர். சாத்தான்குளத்தை  சேர்ந்த வணிகர்களான  ஜெயராஜ்,இவரது மகன் பென்னிக்ஸ்  ஆகியோர் ஊரடங்கு நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி  இரண்டு நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கடுமையாக தாக்கி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று இரவே பென்னிக்ஸ் இறந்தார். மறுநாள் காலை ஜெயராஜ் இறந்துவிட்டார்.   இறந்தவர்களின் உடல்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமையன்று பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இதனையடுத்து புதன்கிழமையன்று இறந்தவர்களின் குடும்பத்தார் நீதி கிடைக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம்  என்றும் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதால் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே சம்பவத்தை அறிந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  அர்ச்சுனன் மற்றும் தோழர்கள் நேரில் வந்து நடந்தவற்றை உறவினர்களிடம் விசாரித்தனர் இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில் ஜெயராஜ்,பென்னிக்ஸ் உடல்களை அவரது குடும்பத்தினர்  பெற்றுக்கொண்டனர்.  ஜெயராஜ் மகள் பெர்சி, நீதித்துறையின் மீது  நம்பிக்கை வைத்து தனது தந்தை மற்றும் சகோதரர் உடலை பெற்றுக் கொள்வதாகக்கூறி உடல்களை பெற்றுக் கொண்டு சென்றார்.

;