tamilnadu

img

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.300 கோடி பாக்கி

திண்டுக்கல்:
மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர் களுக்கு ரூ.300 கோடி வரை பாக்கி பணம் வழங்காமல் ஆவின் நிர்வாகம் இழுத்தடித்து வருவதைக் கண்டித்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறு கின்றது.   

கொரோனா  ஊரடங்கு காலத்தில் சென்னையில் பால் விற்பனை ரூ.11.50 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சமாக உயர்ந்துள்ளது. இணையதளம் வழியாக தமிழகம் முழுவதும் வீடுகளுக்கேசென்று ஆவின் பால் உற்பத்தி பொருட்கள்விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. ஏப்ரல், மே மாதங்களில் 25 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு ஒன்றியங்களில் நாள் ஒன்றுக்கு 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப் பட்ட நிலை மாறி தற்போது 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் கூறுகிறது. பால் விற்பனை மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் ரூ. 327 கோடியாக இருந்தவிற்பனை  இந்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் ரூ.420 கோடியாக  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 சதவீதம் அதிகம். கடந்தாண்டு 2 கோடி நஷ்டத்தில் இருந்த இணையம் இந்த ஆண்டு ரூ.10 கோடி லாபத்துடன் செயல்படுகிறது. இது ஒரு வரலாற்றுச் சாதனை என ஆவின் நிர்வாகம் பெருமையுடன் கூறுகிறது. 

இது ஒரு புறமிருக்க பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு சேர வேண்டிய பால் பாக்கிப் பணத்தை உடனடியாகத் தர வேண்டுமென  தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.முகமது அலி  வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ஞாயிறன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

ஆவின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து வாரத்தில் இரண்டு நாட்கள் கொள்முதல் செய்வதில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டமடைந்து வருகிறார்கள்.  திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30 சதவீத பாலை வேண்டாமென ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. இதையடுத்து 100 இடங்களில் பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் போராட தயாராகி வருகிறார்கள்.  பால் உற்பத்தியாளர் களுக்கு இரண்டு மாதம் முதல் மூன்று மாதம்வரையிலான பணப்பட்டுவாடா பாக்கி  ரூ.300 கோடி  உள்ளது. பால் விற்பனை, உற்பத்தியில்  அதிகாரிகளும், அரசும் அக்கறையும் காட்டவில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். பால் கொள்முதலே இங்கு நடக்கவில்லை. ஆனால் ஆவின் நிர்வாகம் வரலாற்று சாதனை புரிந்ததாக எப்படிக் கூறுகிறது என்று தெரியவில்லை.  ஊரடங்கு காலத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த திருமலா, பாலாஜி போன்ற தனியார் பால் நிறுவனங்கள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனம். தனியார்  பால் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் வரை விற்பனை செய்து வருகின்றன. கர்நாடாக அரசு பால் நிறுவனமான நந்தினி தினசரி 15 லட்சம் லிட்டர் விற்பனையிலிருந்து ரூ.40 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்து உள்ளது. கொள்முதல் 20 லட்சத்திலிருந்து 80 லட்சமாக  உயர்ந்துள்ளது. 

குஜராத் அரசு பால் நிறுவனமான அமல்  நிறுவனத்தின் விற்பனை இரண்டரைக் கோடி லிட்டர் அதிகரித்துள்ளது. தமிழகம் கடந்த 40 ஆண்டுகளாக விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை. கொள்முதலிலும் முன்னேற்றமில்லை.  1980-ஆம் ஆண்டு களில் தமிழ்நாட்டில் 22லட்சம லிட்டர்; கொள்முதல் செய்து  20 லட்சம் லிட்டர் விற்பனை செய்தது.  அதே நிலை தான் இன்றும் உள்ளது. 2015-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா தினசரி ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்வோம் என்று சட்டசபையில் உறுதியளித்தார். அம்மா வழியில் செயல்படும் ஆட்சி எங்கள் ஆட்சி என்கிறார்கள். ஆனால் அம்மா அறிவித்த ஒரு கோடி லிட்டர் பால் கொள்முதல் திட்டம் என்ன ஆனது? 

 தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் பால் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு  பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் பால் தொழில் ஒன்றையே நம்பியுள்ள ஏழை-எளிய பால் உற்பத்தியாளர்கள்  வயிற்றில்’ மண் அள்ளி போடுவதையே ஆவின் நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.32 வரை கொள்முதல்விலை நிர்ணயிக்கப்பட்டது. தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.35 வரை விலை நிர்ணயித்தன.  தற்போது தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.18 க்கு கொள்முதல் செய்கின்றன. சில தனியார் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும்  நிறுவனங்கள் வியாபாரம் இல்லாத தால்  மூடப்பட்டுள்ளன. பால் உற்பத்தியில் பிற நாடுகள், பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடும் போது நாம் பெரிய அளவிற்கு தன்னிறைவு அடையவில்லை, மிகவும் பின்தங்கி உள்ளோம்.  சத்துணவு குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க வேண்டும். அதன் மூலம் தினசரி 15 லட்சம் ஏழை-எளிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்படுகிறது. இதனால் ஆவின் நிர்வாகத்திற்கு தினசரி 5 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனையாகும். அதற்கான செலவு தொகையை பல்வேறு குழந்தைகள் நலத் திட்டங்கள் மூலமாகவும், உலக நாடுகளில் இருந்தும் மானியமாக பெற்றுக்கொள்ளலாம். 

அரசு பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பால் கொள்முதல் முழுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யக் கூடாது. கொரோனா காலத்தில் பால் பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற உள்ளது.

;