tamilnadu

img

இரண்டு கோடிக்கும் மேலான மாதச் சம்பள ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்...

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட சமூக முடக்கத்தின் விளைவாக, நிரந்தர ஊதியம் பெற்றுவந்த ஊழியர்களும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமூக முடக்கத்தின் கடந்த ஐந்து மாத காலத்தில் அவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என ‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ ஏட்டின் கட்டுரை கூறுகிறது.  இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவரான மகேஷ் வியாஸ் எழுதியுள்ள அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:

நிரந்தர வேலை என்றால் என்ன?
நிரந்தர வேலை என்பதன் பொருள், ஒரு நபர் ஒரு ஸ்தாபனத்தால் முறையான அடிப்படையில் வேலை செய்வதற்குப் பணிக்கப்பட்டு, அதற்காக அவருக்கு குறிப்பிட்டக் கால இடைவெளியில் ஊதியம் வழங்கப்படுவது என்பதாகும். இந்தியாவில் இந்தக் குறிப்பிட்டக் காலஇடைவெளி என்பது மாதாந்திர அடிப்படையில் அமைந்திருக்கிறது. இவ்வாறு வேலைவழங்கும் ஸ்தாபனம் என்பது, அரசாங்கமாக இருக்கலாம், (இதனைத்தான் இந்தியர்களில் பெரும்பாலோர் அதிகம் விரும்புவார்கள்) அல்லது தனியார் நிறுவனங்களாகவும் இருக்கலாம். தனியார் நிறுவனம் என்கிறபோது சிறியனவாகவும் இருக்கலாம் அல்லதுமிகப்பெரிய ஒன்றாகவும் இருக்கலாம். இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பெரிய அளவிற்கு முறையான ஊதியம் பெறுகிறவர்கள்.
இதுபோன்ற ஸ்தாபனங்களில் இவ்வாறு நிரந்தர ஊதியம் பெறும் ஊழியர்களுடன், மாதச்சம்பளம் பெறும் ஊழியர்கள் வேறு வகைகளிலும் உண்டு. வீடுகளில், மாதச்சம்பளத்தில் சமையல் வேலைகள், தோட்ட வேலைகள், வீட்டுக்காவலர்கள் போன்று வீட்டு வேலைகளைச் செய்வதற்காக நியமிக்கப்படும் ஊழியர்களும் உண்டு. ஆனால் இவர்களில் அநேகமாக பலர் முறைசாராத் தொழிலாளர்களாக இருப்பார்கள்.இவ்வாறு பணியிலிருக்கும் அனைத்து மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களையும் சேர்த்துப்பார்க்கும்போது இவர்கள் இந்தியாவில் உள்ள மொத்த வேலை வாய்ப்பில் 21 முதல் 22 சதவீதம் வரைக்கும் வருகிறார்கள்.நாட்டில் இவ்வாறு சம்பளம் பெறும் ஊழியர்களைவிட, விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாகும். நாட்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். விவசாயிகளையும், நாட்கூலித் தொழிலாளர் களையும் சேர்த்துப் பார்த்தால் இவர்கள்இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

மாதச் சம்பள ஊழியர்களின் நிலை 

இத்தகைய உழைக்கும் மக்களின் கட்டமைப்பு, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிற ஒரு நாட்டிற்கு அழகல்ல. இந்தியா வேகமான வளர்ச்சி அடைந்த போதிலும், அதன் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் நிலை என்பது திண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. 2016-17இல்21.2 சதவீதமாக இருந்த மாதாந்திர ஊழியர்களின் நிலை, 2018-19இல் 21.9 சதவீத அளவிற்கே இருந்திருக்கிறது. 2019-20இல் பொருளாதாரம் 4 சதவீதம் வளர்ந்த நிலையில், மாதாந்திர  ஊதியம் பெறுபவர்களின் வேலைகள் 21.3 சதவீதமாக இருந்தது.சமீபகாலங்களில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக வளர்ந்துள்ளபோதிலும், அதற்கேற்றவிதத்தில் மாதாந்திர ஊழியர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அதுதேக்கநிலையிலேயே நீடிக்கிறது. அதே போன்றே தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை இக்காலத்தில் அதிகரித்தபோதிலும், அவற்றிலும் போதிய அளவிற்கு மாதாந்திர ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திடவில்லை.இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்முனைவோர் எண்ணிக்கை மட்டும் அதிகரித்திருப்பதும் கூட சமூகமுடக்கக் காலத்தில் வீழ்ச்சி அடைந்திருக் கிறது. ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 70 லட்சம் தொழில்முனைவோர் வேலையிழந்துள்ளார்கள்.

12 கோடி வேலைகள் வீழ்ச்சி
இக்காலகட்டத்தில் மிகவும் இழப்புக்கு ஆளானவர்கள் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களும், நாட்கூலித் தொழிலாளர்களுமாவார்கள். குறிப்பாக ஏப்ரல்மாதத்தில் பெரிய அளவில் பாதிப்புக்குஆளானவர்கள் நாட்கூலித் தொழிலாளர் களாவர். இம்மாதத்தில் வேலையிழப்பின் மொத்த எண்ணிக்கை 12 கோடியே 10 லட்சம்ஆகும். இதில் நாட்கூலித் தொழிலாளர்கள் மட்டும் 9 கோடியே 10 லட்சம் ஆகும். ஆகஸ்டில்இதில் சற்றே மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2019-20இல் மொத்தம் உள்ள 12 கோடியே 80 லட்சம் வேலைகளில், இது 1 கோடியே 10 லட்சத்திற்கும் குறைவாக மாறியிருக்கிறது.   2020 ஆகஸ்ட் வாக்கில் மாதாந்திர சம்பளம்பெறும் ஊழியர்கள்தான் மிகப்பெரியஅளவிற்கு இழப்புக்கு ஆளாகியிருக் கிறார்கள். ஏப்ரலில் மொத்த வேலைவாய்ப்பு 12 கோடியே 10 லட்சம் வீழ்ச்சியடைந்தபோது, அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களேயாவர்.

மொத்த வேலைவாய்ப்பில் மாதாந்திர ஊதியம் பெறுவோர் 2019-20இல் 21 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது, இப்போது 15சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி அடைந்திருக் கிறது.ஆகஸ்ட் இறுதியில் சுமார் 2 கோடியே10 லட்சம் மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்திருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2019-20இல் இந்தியாவில் மாதாந்திர சம்பளம்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 8 கோடியே 60 லட்சமாக இருந்தது. 2020 ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சமாகக் குறைந்துவிட்டது. 2 கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பற்றாக்குறை என்பது வேலைவாய்ப்பின் அனைத்து விதமான வகைகளின் மத்தியில், மிகவும் பெரிய அளவிலான பாதிப்பாகும்.  ஜூலையில் 48 லட்சம் வேலைகளும், ஆகஸ்டில் 33லட்சம் வேலைகளும் காணாமல் போய்விட்டன. இந்த வேலைவாய்ப்புகள் இழப்பால், மாதாந்திர சம்பளம் பெறும் ஊழியர்களின் மத்தியில் மட்டுமல்ல, தொழிற்சாலைகளில் வேலை செய்திடும் காக்கிச்சட்டைத் தொழிலாளர்களும் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யும் வெள்ளைச்சட்டை ஊழியர்களும் ஆழமான முறையில் பாதிக்கப்படுவார்கள்.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு என்பது 2016-17இல் மொத்த வேலைவாய்ப்பில் 13 சதவீதமாக இருந்தது. பின்னர் இது 2017-18இல் 15 சதவீதமாகவும், 2018-19இல் 17 சதவீதமாகவும், 2019-20இல் 19 சதவீதமாகவும் அதிகரித்தது.தனியார் தொழில்முனைவோர் எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரித்துவந்துள்ளபோதிலும், மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 2016-17இல் 5 கோடியே 40 லட்சம் தொழில்முனைவோர்கள் என்றிருந்த எண்ணிக்கை, 2019-20இல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மாதாந்திர ஊதியம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 8 கோடியே 60 லட்சமாக மாற்றம் எதுவும் இல்லாமல் நீடித்தது. இதற்கு என்ன காரணம் என்றால், தொழில்முனைவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் தொழில்நிறுவனங்களில் எவரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. 

===தொகுப்பு: ச. வீரமணி===

;