tamilnadu

img

பன்மை உலகைப் பாதுகாப்போம்... ...1ம் பக்கத் தொடர்ச்சி...

இந்தச் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, நாங்கள், எங்களது தொற்று கட்டுப்பாட்டுநடைமுறைகள், தொற்று பரவலை ஆய்வு செய்யும் மருத்துவ நடைமுறைகள் மற்றும் சிகிச்சை நடைமுறைகள்உள்ளிட்ட அனைத்தையும் இதர நாடுகளுடன் பகிர்ந்து வருகிறோம்; இனியும் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்; தேவைப்படும் நாடுகளுக்கு மருத்துவ ஆதரவும் உதவிகளும் தொடர்ந்து மேற்கொள்வோம்; உலக அளவில்தொற்று பரவலை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்வதை தொடர்ந்து உத்தரவாதப்படுத்துவோம்; வைரஸ் எங்கிருந்து உருவாகிறது, அது எவ்விதம் பரவுகிறது என்பது தொடர்பான ஒவ்வொரு அம்சத்தையும் ஆய்வுக்கு உட்படுத்துகிற உலகளாவிய ஆராய்ச்சியில் தொடர்ந்து செயலூக்கத்துடன் பங்கேற்போம்.

இந்த தருணத்தில், சீனா, கோவிட் 19க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. பல தடுப்பூசிகள் மருத்துவ சோதனை (கிளினிக்கல் டிரையல்) என்ற மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தடுப்பூசிகள், சோதனைகள் முழுமை அடைந்து பயன்பாட்டிற்கு வரும் போது, உலகம் முழுவதிலும் இருக்கிற மக்களுக்கு இவை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். முன்னுரிமை அடிப்படையில் வளர்முக நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை கிடைக்கச் செய்வோம். 

இரண்டாண்டு காலத்தில் இந்த நடவடிக்கைகளுக்கான சர்வதேச உதவி என்ற முறையில் 200 கோடி டாலர் நிதியைஅளிப்பதற்கு சீனா ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. அந்த உதவியை உடனடியாக வழங்கிடுவோம். அது மட்டுமல்ல, இந்தக் காலத்தில் விவசாயம், வறுமை ஒழிப்பு, கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மற்றும்காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் சர்வதேச ஒத்துழைப்பை நல்குவோம். மேலும், பொருளாதாரத்தை மீட்பதற்கும் சமூக வளர்ச்சியை மீட்பதற்கும் பிற நாடுகளுக்கு நிச்சயம் உதவிடுவோம்.

நூறாண்டுகளில் கண்டிராத மாற்றங்களை எதிர்நோக்கி...
மனித சமூக வளர்ச்சியின் வரலாறு என்பது அனைத்து விதமான சவால்களையும் கடினமான சூழல்களையும் எதிர்கொண்ட நமது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் போராட்டங்களது வரலாறே ஆகும். அனைத்து கடினமான சூழல்களையும் வென்று நாம் கடந்து வந்திருக்கிறோம். தற்சமயம் இந்த உலகம் கோவிட் 19 தொற்றுடன் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த நூறாண்டு காலத்தில் நாம் கண்டிராத மாற்றங்களை இது ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், அமைதியும் வளர்ச்சியுமே நமது காலத்தின் அடிப்படையான அம்சமாக இன்னும் நீடிக்கிறது. உலகெங்கிலும் இருக்கிற மக்கள் இன்னும் வலுவான முறையில் அமைதியான வாழ்வை, வளமான வாழ்வை, ஒருவருக்கொருவர் வளம் சேர்க்கும் விதத்திலான ஒத்துழைப்பு மிகுந்த வாழ்வை விரும்புகிறார்கள். கோவிட்19 என்பது மனிதகுலத்திற்கு எதிரான கடைசி நெருக்கடி அல்ல; அடுத்தடுத்த நெருக்கடிகள் சூழக்கூடும்; நாம் அனைவரும் கரம் கோர்த்து நிற்பதும் எத்தனை பெரிய உலகளாவிய சவால்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதும் அவசியம்.

ஒருவர் துயரத்தில் இன்னொருவர் வாழ்ந்துவிட முடியாது
முதலாவது, கோவிட் 19 வைரஸ் பரவல் ஒரு முக்கிய அம்சத்தை நமக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. நாம் மிகவும் நன்றாக பிணைக்கப்பட்ட தொடர்புகளுடன் கூடிய உலகில் வசித்துக் கொண்டிருக்கிறோம். உலகமே ஒரு கிராமமாக சுருங்கியிருக்கிறது. அனைத்து நாடுகளும் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. எனவே அனைவருக்குமே பொதுவான ஒரு எதிர்காலம் இருக்கிறது. எந்தவொரு நாடும் வேறொரு நாட்டின் துயரத்திலிருந்து பலன்பெற்று விட முடியாது; அல்லது எந்தவொரு நாடும் வேறொரு நாட்டின் துன்பத்தின் மூலம் சாதகமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.நமது அண்டை நாடு வறுமையில் கிடந்து ஒழியட்டும் என்று கருதுகிற கொள்கையோ அல்லது, மற்ற நாடுகள் ஆபத்தில் இருந்தாலும் நாம் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு பார்ப்பதோ நல்லதல்ல. நிச்சயம் மற்றவர்கள் எதிர்கொண்டிருக்கிற அந்தத் துயரங்கள் நம்மையும் சூழும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இதனால்தான், நம் எல்லோருக்கும் பொதுவான ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் கரம்கோர்த்து ஒன்றுபட வேண்டியது அவசியமாகும். எனவே மற்ற நாடுகளை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு தடை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் நிராகரித்திட வேண்டும்; ஒரு சூனியமான அணுகுமுறையை எதிர்த்திட வேண்டும். உலகம் எனும் மிகப்பெரிய குடும்பத்தில் ஒவ்வொருவரும் உறுப்பினர் என்ற சிந்தனை மலர வேண்டும். ஒவ்வொருவரும் வெற்றிபெறும் விதத்திலான ஒத்துழைப்பினை மேற்கொள்ள வேண்டும். வேறுபட்ட தத்துவங்கள் நம்மை வழிநடத்தினாலும், அதற்கும் அப்பால் ஒன்றுபட்டு, ஒத்துழைத்திட வேண்டிய தருணம் இது; “நாகரிகங்களுக்கிடையிலான மோதல்” என்கிற வலையில் நாம் விழுந்துவிடக்கூடாது. இன்னும் குறிப்பாக, எந்தவொரு நாடும் எந்தப் பாதையில், எந்த தத்துவத்தின் அடிப்படையில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது என்பதை தேர்வு செய்கிற சுதந்திரம் ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு என்பதை நாம் மதித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகம், இயற்கையிலேயே பன்முகத் தன்மை வாய்ந்தது; இந்த பன்முகத் தன்மையை, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கான நிரந்தர உந்து சக்தியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது மனித நாகரிகங்கள் தொடர்ந்து வண்ணமயமாகவும் பன்மைத்துவம் நிரம்பியதாகவும் வாழ்வதை உறுதி செய்யும். 

பொருளாதார உலகமயம்
இரண்டாவதாக, கோவிட் 19 வைரஸ் பரவல் நமக்கு இன்னொரு விஷயத்தை நினைவுபடுத்தியிருக்கிறது. இன்றைக்கு பொருளாதார உலகமயம் என்பது மறுக்க முடியாத எதார்த்தமாக மாறியிருக்கிறது. வரலாற்றுப்பூர்வமான ஒரு போக்காகவும் அது மாறியிருக்கிறது. இதைஉணராமல், நெருப்புக்கோழி போல தரையில் தலையை புதைத்துக் கொள்வதோ அல்லது பொருளாதார உலகமயம் என்பதை எதிர்த்து டான் குய்க்சாட் போல அதிரடியாக போரிட்டு வென்றுவிடலாம் என்று முயற்சிப்பதோ வரலாற்று ரீதியான நிகழ்ச்சிப் போக்குகளை புரிந்து கொள்வதற்கு எதிரானதாக அமைந்துவிடும். எனவே நாம் இதில் தெளிவாக இருக்க வேண்டும்: இந்த உலகம் ஒரு போதும் முன்பு இருந்தது போன்று தனித்த பொருளாதார வாழ்க்கை கொண்ட உலகமாக திரும்பாது. நாடுகளுக்கிடையிலான உறவுகளை - தொடர்புகளை யாராலும் துண்டித்துக் கொள்ள முடியாது. எனவே, பொருளாதார உலகமயம் ஏற்படுத்தியுள்ள சவால்களை எவராலும் தாண்டிச் சென்றுவிட முடியாது. மாறாக, சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளி, வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அரசாங்கத்திற்கும் சந்தைக்கும் இடையில்; நேர்மைக்கும் திறமைக்கும் இடையில்; வளர்ச்சிக்கும் வருமானப் பகிர்வுக்கும் இடையில்; தொழில்நுட்பத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையில் - என ஒவ்வொரு துறையிலும் ஒரு பொருத்தமான சமநிலையை உருவாக்கிட வேண்டும். அப்போதுதான், அனைத்து நாடுகள்,அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து பின்னணிகளைக் கொண்ட ஒட்டுமொத்த மக்களுக்கும் பலன்களை சமமான முறையில் பகிர்ந்தளிப்பதை உறுதிசெய்ய முடியும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஒரு திறந்த உலகப்பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான உறுதிப்பாடு மற்றும் உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்டு உலகளாவிய பல்துறை சார்ந்த, பன்முகத் தன்மை வாய்ந்த வர்த்தகக் கட்டமைப்பை வலுப்படுத்துவது என திறந்த மனதுடன் கூடிய அணுகுமுறையை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

அந்த அடிப்படையில் ஏகபோக வணிகத்திற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். தங்களை மட்டும் பாதுகாத்துக் கொள்கிற வர்த்தக நடவடிக்கைகளுக்கு நாம் மறுப்பு தெரிவிக்க வேண்டும். ஒட்டுமொத்த உலக தொழில் உற்பத்தி மற்றும் பொருள் அளிப்பு சங்கிலியை நிலையானதாகவும் எளிதானதாகவும் சுழலச் செய்கிற நடவடிக்கைகளை நாம் உறுதி செய்ய வேண்டும்.

மாபெரும் பசுமைப் புரட்சி அவசியம்
மூன்றாவதாக, கோவிட் 19 தொற்று பரவல் மற்றொரு உண்மையை நமக்கு நினைவுபடுத்தியிருக்கிறது. அது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது என்னவென்றால், மனிதகுலம் கட்டாயமாக ஒரு மாபெரும் பசுமைப் புரட்சியை கட்டவிழ்த்துவிட வேண்டும். முற்றிலும் பசுமைமயமான வாழ்க்கையையும் வளர்ச்சியையும் மிக வேகமாக உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும்; நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து, பூமித்தாயை நாம் எல்லோருக்குமான ஒரு சிறந்த இடமாக உறுதிசெய்ய வேண்டும். மனிதகுலத்தை இயற்கை மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டிருக்கிறது. அதை மனிதகுலம் நீண்டகாலத்திற்கு மறுத்துக் கொண்டே இருக்க முடியாது. இயற்கையின் வளங்களைச் சேமிப்பதற்கான முதலீடுகள் எதையும் செய்யாமல் தொடர்ந்து சுரண்டிக் கொண்டே இருப்பது என்ற அணுகுமுறை முற்றாக கைவிடப்பட வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பை காவுகொடுத்து வளர்ச்சியைத் தேடுவதும்; மறு உற்பத்திக்கு வழி செய்யாமல் வளங்கள் அனைத்தையும் சுரண்டுவதும் முற்றாக கைவிடப்பட வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தமானது, இந்த உலகை பசுமையானதாக மாற்றுவதற்கும் குறைவான அளவே கரியமிலவாயு உருவாவதற்குமான வாய்ப்புகளை அளிக்கிறது. அந்த ஒப்பந்தம், இந்த பூமியை பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் குறைந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வரையறை செய்கிறது; இந்த பூமி எல்லோருக்குமான தாயகம். எனவே பாரீஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான தீர்மானகரமான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். சீனாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களை தீவிரமான முறையில் மேற்கொள்வதற்கான கொள்கை நிலைப்பாடுகளை வரையறை செய்திருக்கிறது.

2030ஆம் ஆண்டிற்கு முன்பு நாங்கள் கரியமிலவாயு கழிவு வெளியேற்றத்தை முழுமையாக குறைப்பது எனவும் 2060க்கு முன்பு சீனாவிலிருந்து கரியமிலவாயு கழிவே இல்லை என்ற நிலையை எட்டுவது எனவும் இலக்கு தீர்மானித்திருக்கிறோம். அனைத்து நாடுகளும், இந்தப் பிரச்சனையில் புதிய சிந்தனையுடன், ஒத்துழைப்புடன், பசுமை உலகினை உருவாக்குவதை நோக்கிய வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்; வரலாறு நமக்கு சிறந்த வாய்ப்புகளை அளித்திருக்கிறது; புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் அடுத்த சுற்று துவங்கியிருக்கிறது; அதன்மூலம் தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் துவங்கியிருக்கின்றன; இந்த வரலாற்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு உலகப்பொருளாதாரத்தின் ஒரு பசுமை நிறைந்த வளர்ச்சியை சாதித்திட கோவிட் வைரசுக்குப் பிந்தைய சகாப்தம் நம்மை எதிர்நோக்கியிருக்கிறது; அந்த அடிப்படையில் ஒரு சக்திவாய்ந்த நிரந்தர வளர்ச்சியை இந்தக் காலக்கட்டம் உறுதிசெய்யும் என நம்புகிறேன்.

பன்மை உலகம்
நான்காவதாக, கோவிட் 19, சர்வதேச நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைத்து மேம்படுத்திட வேண்டும் என்றும் நமக்கு நினைவூட்டியிருக்கிறது. நாடுகளது நிர்வாகக் கட்டமைப்பின் பலம் என்ன என்பதற்கு கோவிட் 19 ஒரு மிகப்பெரிய சோதனையாக அமைந்துவிட்டது. அது, உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்புக்கும் ஒரு சோதனையாகவே அமைந்துவிட்டது. நாம் உலகின் பன்மைத்துவத்திற்கு உண்மையானவர்களாகவும் ஐக்கிய நாடுகள் சபையை மையப்புள்ளியாகக் கொண்ட சர்வதேச நிர்வாகக் கட்டமைப்பை பாதுகாப்பவர்களாகவும் உறுதிபட நிற்க வேண்டும். உலகளாவிய நிர்வாகம் என்பது நாடுகளிடையே விரிவான முறையில் விவாதிப்பது என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது. கூட்டாக ஒத்துழைப்பது, சர்வதேச அளவிலான பலன்களை அனைத்து நாடுகளும் சமமாக பகிர்ந்துகொள்வது, அனைத்து நாடுகளுக்கும் சமமான உரிமைகள், சமமான வாய்ப்புகள்  போன்றவற்றை உறுதிசெய்வது அவசியமாகும். உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார போக்குகளை உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பு உள்வாங்கிக் கொண்டு செயல்பட வேண்டும். அமைதி, வளர்ச்சி, பரஸ்பரம் வெற்றியை ஈட்டுவதற்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்தக் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும். 

பல்வேறு பிரச்சனைகளில் நாடுகளிடையே வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருப்பது இயல்பு. முக்கியம்என்னவென்றால், இந்த வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதன் மூலமாகவும் தீர்வுகாண வேண்டும். நாடுகளிடையே போட்டி இருக்கலாம். ஆனால் அந்தப் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். போட்டி என்ற பெயரில் எந்தநாடும் சர்வதேச விதிகளையோ, நெறிமுறைகளையோ மீறக்கூடாது. குறிப்பாக பெரிய நாடுகள் பெரிய நாடுகளைப் போல நடந்துகொள்ள வேண்டும். அவை உலக மக்களுக்கு அதிகமான பொருட்களை வழங்க வேண்டும், உலக மக்களின் வாழ்வு உயர பொறுப்புணர்வுடனும் மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவையாகவும் செயல்பட வேண்டும்.

சீனாவின் இலக்கு என்ன?
இந்த ஆண்டு துவங்கும்போது 140கோடி மக்கள் கொண்ட சீனா, கோவிட் 19 வைரசால் தாக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளானது. எனினும் சீன அரசும் மக்களும் ஒன்றாக இணைந்து நின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும் இயல்பு வாழ்க்கையை துரிதமாக மீட்கவும் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டுவரவும் அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். நாங்கள் தீர்மானித்த இலக்குகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவோம் என ஒவ்வொருவரும் நம்பிக்கை கொண்டிருந்தோம். எங்களது நாட்டில்தற்போது வரையறை செய்யப்பட்டுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து கிராமப்புற மக்களையும் வறுமையிலிருந்து விடுவிப்பது உள்பட ஒரு தலைசிறந்த வளமான சமூகத்தை உருவாக்குவதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் ஒரே மனிதராக நின்று சீன அரசும் மக்களும் நிறைவேற்றுவதில் உறுதியோடு இருக்கிறோம். 2030ஆம் ஆண்டில் வறுமை முற்றாக ஒழிக்கப்பட்டது என்ற இலக்கினை நிறைவேற்ற அடுத்த பத்தாண்டு காலத்திற்கான திட்டங்களுடன் நீடித்த வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறோம். 

எல்லையை விரிவுபடுத்த விரும்பவில்லை
சீனா என்பது உலகின் மிகப்பெரிய வளரும் நாடு; அமைதியான, மனம் திறந்த, ஒத்துழைப்புமிக்க, பொது வளர்ச்சியில் உறுதிப்பாடு கொண்ட ஒரு நாடு. நாங்கள் ஒரு போதும் மேலாதிக்கம் செய்ய விரும்பவில்லை. எங்களது எல்லையை விரிவுபடுத்த விரும்பவில்லை. அல்லது எங்களது செல்வாக்கு தளத்தை விரிவுபடுத்த நினைக்கவில்லை. எந்தவொரு நாட்டுடனும் பனிப்போரிலோ அல்லது நேரடியான யுத்தத்திலோ ஈடுபடும் எண்ணம்எமக்கு இல்லை. முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலமும் தொடர்ச்சியான விவாதங்கள் மூலமும் தீர்வுகாண்பதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம். நாங்கள் எங்களை மட்டும் முன்னேற்றிக்கொள்ள விரும்பவில்லை அல்லது யாருக்கும் பலனில்லாத ஒரு சூனியமான விளையாட்டை விளையாடவும் விரும்பவில்லை. ஒரு மூடப்பட்ட நாடாக, திரைமறைவில் எங்களது வளர்ச்சியைப் பற்றி திட்டமிடவும் விரும்பவில்லை. மாறாக உள்நாட்டு உற்பத்தி - அளிப்பு என்ற பொருளாதார சுழற்சியை ஒரு புதிய வளர்ச்சி சகாப்தத்திற்கு கொண்டு செல்வதை மையமாகக் கொண்டு, அதனடிப்படையில் சர்வதேச அளவில் ஒருவருக்கொருவர் பலனளிக்கும் பொருளாதார சுழற்சியை இலக்காக வைத்து முன்னேறுகிறோம். இது சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் இன்னும் கூடுதலான வாய்ப்புகளை உருவாக்கித்தரும். இது உலகப் பொருளாதார மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் நிச்சயம் உதவும்.சீனா, உலக அமைதியை உருவாக்கும் ஒரு நாடாக, உலக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிற ஒரு நாடாக, சர்வதேச ஒழுங்கமைவை பாதுகாக்கும் நாடாக தொடர்ந்து பணியாற்றும். சர்வதேச விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை மையமான பங்கினை ஆற்றுவதற்கு சீனா என்றென்றும் துணை நிற்கும். 

மனிதகுலத்தின் வரலாறு தனது தொடர் ஓட்டத்தின் ஒளிச்சுடரை நமது தலைமுறையின் கைகளில் ஒப்படைத்திருக்கிறது. நாம் நமது காலத்திற்கும் நமது மக்களின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களாக அந்த ஒளிச்சுடரை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அமைதி, வளர்ச்சி, சம பங்கு, நீதி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகிய மகத்தான விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம். புதிய விதத்திலான சர்வதேச உறவுகளை வளர்த்தெடுப் போம். மனிதகுலத்தின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்ற, இந்தப் பூமிப் பந்தை ஒவ்வொரு மனிதருக்கும் சிறந்ததோர் வாழ்விடமாக மாற்ற ஒன்றுபட்டு பயணிப்போம்.

(சிஜிடிஎன் ஊடகத்தில் இருந்து)
தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

;