tamilnadu

img

செப்பு மொழி அத்தனையும் செழுமை பெற வேண்டும் - மதுக்கூர் இராமலிங்கம்

அவரவர் தத்தம் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடி மகனும் தன்னுடைய தாய்மொழியில் கூட்டங்க ளில் பேசவும், அரசமைப்புகளில் தாய்மொழியில் கலந்துரை யாடவும் உரிமை இருக்க வேண்டும். மக்கள் பொதுவாக எங்கும் தங்கள் மொழியில் பேசுவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்கிறார் மாமேதை லெனின்.  சோவியத் ஒன்றியம் உருவான நிலையில், ரஷ்ய மொழியின் மேலாதிக்கத்தை சிலர் முன்மொழிந்தபோது அதை நிராகரித்த லெனின் சோவியத் ஒன்றியத்தில் ஒரே ஒருவர் மட்டுமே பேசக்கூடிய ஒரு மொழி இருந்தாலும் அவரது  அந்த தாய்மொழியை பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சி களையும் சோவியத் அரசு எடுக்கும் என்றார். 

இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்று முன்பின் முரணின்றி விடுதலைப் போராட்டக் காலத்திலேயே முன்மொழிந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மொழிவழி மாநிலங்கள் நவீன மதச்சார்பற்ற ஜனநாயக குடி யரசின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார் தோழர் இஎம்எஸ். மொழி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிந்த நீரோடை போல தெளிவாகப் பேசுகிறது. “நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீ கரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர்க ளின் மாநில மொழியில்  பேசும் உரிமை வழங்கப்படுவதோடு மற்ற அனைத்து மொழிகளிலும், அதே நேரத்தில் மொழி யாக்கம் செய்யவும் உரிய வசதிகள் செய்யப்படும். அனைத்து சட்டங்கள், அரசு உத்தரவுகள், தீர்மானங்கள், அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்க வழி செய்யப்படும்” என்கிறது.  வம்படியாக ஒரு மொழியை எந்த பெயரிலேனும் திணிப்பதை கம்யூனிஸ்ட் இயக்கம் ஒருபோதும் ஏற்ற தில்லை. இந்த பாரம்பரியப் பெருமையின் தொடர்ச்சியாகவே தென் மாநில அளவில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு நடத்துகிறது. 

சனாதன அநீதியும்  சமஸ்கிருத மேலாதிக்கமும்

சனாதன அநீதி சாதி அடிப்படையிலான கட்டமைப்பை மட்டும் சமூகத்தில் திணிக்கவில்லை. சமஸ்கிருத மேலா திக்கத்தையும் ஒருசேர திணித்தது. பெண்களுக்கும், ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் கல்வியை தடுத்தது. இது தாய்மொழியின் மீதான தாக்குதலுமாகும். இது இன்றளவும் பல்வேறு வழி களில் தொடர்கிறது.  கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டபோது ஆங்கில மொழித் திணிப்பு வந்தது. 1830 செப்டம்பர் 29ல் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் ஆங்கில வழியில் தான் கல்வி கற்பித்தல் இருக்க முடியும் என்கிறது. அன்று முதல் விதைக்கப்பட்ட ஆங்கில மோகம் இன்றளவும் தொடர்கிறது.  இந்தித் திணிப்பு என்பதும் நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே துவங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் இந்தியை நாட்டின் பொது மொழியாக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி மொழி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தி பிரச்சார சபாக்கள் உரு வாக்கப்பட்டன. 

சென்னை ராஜதானியில் 1937ஆம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கல்விநிலையங்களில் இந்தியைத் திணிக்கும் முயற்சி நடந்தது. இதை எதிர்த்து வலுவான இயக்கங்கள் நடந்தன. நடராசன், தாளமுத்து என்ற இரு இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.  பின்னர் ஆளுநர் ஆட்சி வந்தநிலையில் 1940ல் கட்டாய இந்தி மொழிக் கல்வி விலக்கிக் கொள்ளப்பட்டது. 

அரசியல் நிர்ணய சபையில்....

சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் இந்தி யாவின் தேசிய மொழி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. இந்தியா அல்லது உருது கலந்த இந்துஸ்தானியா என்ற விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த சபையில் இடம் பெற்றிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஜி.துர்காபாய், ராமலிங்க செட்டியார், என்.ஜி.ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார், எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகி யோர் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்றனர்.   இந்த விவாதத்தின் போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி யார் குறிப்பிட்டது முக்கியமானது. “இந்தி ஏகாதிபத்திய நட வடிக்கைகளால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பதை நான் தெற்குவாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கி றேன். ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, இந்தி - இந்தியா வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டிய நேரம் இது” என்றார். 

மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு 1949ஆம் ஆண்டு முன்சி - கோபால்சாமி ஐயங்கார் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் 17ஆவது பிரிவின் அடிப்படையில் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்கப்பட்டது. இதில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று எந்த இடத்திலும் இல்லை. அலுவல் மொழி குறித்து மட்டுமே இந்தப் பிரிவு பேசுகிறது.   

பற்றிப் பரவிய தீயும்  அணைத்த உறுதிமொழியும்

1963ல் மத்திய அரசு நிறைவேற்றிய ஆட்சி மொழிச் சட்டம் மத்திய அரசின் அலுவல்கள் அனைத்தும் இந்தி மொழி யிலேயே இருக்கும். இது 1965க்கு பிறகு முழுமையாக நடை முறைக்கு வரும் என்றது. இதை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தநிலையில், தமிழ்நாடு இந்தித் திணிப்பு எதிர்ப்பில் முன்நின்றது. 1964ஆம் ஆண்டே போராட்டத் தீ பரவத் துவங்கிய நிலையில் 1965ல் மாநிலம் முழுவதும் பெரும் கிளர்ச்சி வெடித்தது. 50 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தில் ஆறு பேர் தீக்குளித்து இறந்தனர். துப்பாக்கிச் சூட்டில் அண்ணா மலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உட்பட 70 பேர் உயிரிழந்தனர்.

இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாகவும் தொடரும் என்று பிரதமர் நேரு உறுதிமொழி அளித்தார். அதன்பின் வந்த பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் இந்த உறுதிமொழியை தந்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்க ளில் திராவிட இயக்கத்திற்கு முக்கியப் பங்குண்டு என்ற  போதும், தமிழகத்தில் நடந்த போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டு களும் களம் கண்டனர். சிறை சென்றனர் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. எனினும் இந்தி மொழியைத் திணிப்பதற்கான முயற்சிகளும் அதற்கெதிரான போராட்டங்க ளும் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளன. 

கஸ்தூரி ரங்கன் அறிக்கையும் மோடியின் போலிப்பாசமும்

மோடி அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற நிலையில் இந்தி மற்றும் வடமொழி திணிப்பு தீவிரமாக்கப் பட்டுள்ளது. பாஜகவின் குருபீடமான ஆர்எஸ்எஸ் மொழி சமத்துவத்தை ஏற்பதில்லை. அவர்களை பொறுத்தவரையில் சமஸ்கிருதமே தேவ பாஷை. பிற அனைத்து மொழிகளும் நீஷ பாஷைகளே.  அவர்கள் இந்தி மொழியைக் கூட ஏற்பதில்லை. சமஸ்கிருத மொழியை அனைத்து இடங்களிலும் அமர வைப்பதற்கு முன்னேற்பாடாகவே இந்தித் திணிப்பை இவர்கள் வேக வேகமாக மேற்கொள்கின்றனர். மைல் கல் துவங்கி கல்வி நிலையங்கள் வரை இந்தியை வம்படியாகத் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது. குறிப்பாக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்த புதிய கல்விக்கொள்கை வரைவு இந்தியா முழுவதும் இந்தி கட்டா யப்பாடம் என்றது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்தியைத்தான் படிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால் மூன்று மொழிகளை படிக்க வேண்டியது கட்டாயம் என்று முதலை யைப் போல மும்மொழிக் கொள்கையை அழுத்தமாக பிடித்தி ருக்கிறது. அடுத்து சமஸ்கிருத மொழியும் கட்டாயமாகும். அப்போது நான்கு மொழி படிக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டுகிறார் கஸ்தூரி ரங்கன். 

சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கசிந்துருகி காதலாகி தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று பேசுவதன் மூலம் தமிழகத்திற்கு பாஜக மீது இருக்கும் ஒவ்வாமையை குறைக்க முயல்கிறார். ஆனால் தமிழர் தம் வரலாற்றிற்கும் நாகரிகத்திற்கும் இலக்கியச் சான்றுகள் இருந்த நிலையில், பொருண்மைச் சான்றுகள் புதையலைப் போல வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், கீழடி அகழ்வாய்வை முடக்கி மண்ணள்ளிப் போட இவர்கள் மேற் கொண்ட முயற்சிகளை தமிழ்ச்சமூகம் ஒருபோதும் மறந்துவிடாது. 

வானவில்லுக்கு வண்ணங்களே அழகு

இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, பல்வேறு மதங்களைப் பின்பற்றுகிற, பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட  நாடு என்று பன்முக தேசியத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மொழியோ, மதமோ ஏதொன்றும் திணிக்கப்படுவதை ஒருபோ தும் ஏற்க மாட்டார்கள். வளைந்து நிற்கும் வானவில்லுக்கு விதவிதமான வண்ணங்களே அழகு என்று ஏற்பவர்கள் இந்தி யாவின் பல்வேறு வண்ணங்களையும், எண்ணங்களையும் ரசிப்பார்கள். ஒற்றை தேசியம், ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மதம், ஒற்றை மொழி என்று பேசுபவர்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்க மாட்டார்கள். 

இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டு மானால், தமிழ் உட்பட அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளையும், மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். நாடாளுமன்றம், நீதிமன்றம் என நாட்டின் எவ்விடத்திலும் தாய்மொழி மட்டுமே அறிந்தவர்கள் தடுமாற்றமின்றிச் செயல்பட வைப்பதன் மூலமே ஜனநாயகம் இன்னமும் அர்த்தப்படும். 

மொழி திணிப்புக்கு எதிராக ஒரு பகுதி மக்களை உசுப்பி விடுவது பிரச்சனையைத் தீர்க்காது. மாறாக மொழிகளின் சமத்துவத்தை முன்மொழிந்து மக்கள் ஒற்றுமையை முன்வைத்து இந்தியாவின் ஆயிரக்கணக்கான மொழிகளை பாதுகாக்கும் பெரும் போரை கம்யூனிஸ்ட்டுகளால்தான் நடத்த முடியும். அதன் ஒரு பகுதிதான் சென்னையில் நடக்கும் மாநாடு.




 

;