tamilnadu

img

அமைதிப்பூங்கா தமிழகம்..... தமிழக தேர்தல் பணியில் ஈடுபட்ட பிஎஸ்எப் வீரர்கள் பெருமிதம்.....

மதுரை:
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பிஎஸ்எப் வீரர்கள் விடைபெற்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து வாகனத் தணிக்கை, சோதனைச்சாவடி பாதுகாப்பு, பதற்றமான வாக்குச்சாவடி கண்காணிப்பு வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணிகளில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 80 கம்பெனி பிஎஸ்எப் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அவர்களில் ஒரு பகுதியினர் மதுரையிலிருந்து சிறப்பு ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.

“இது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம்” என்று பிஎஸ்எப் வீரர் ஒருவர் கூறினார். தமிழக காவல்துறையின் விருந்தோம்பலை  மிகவும் பாராட்டிய அவர். “தங்குமிடம், உணவு, வாகனம் உட்பட அனைத்துத் தேவைகளும் எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது” என்றார். விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய ஒரு பி.எஸ்.எப் வீரர் கூறுகையில், விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்நிலை, அமைதியான சூழல் தம்மை வெகுவும் ஈர்த்துவிட்டதாகவும், மாவட்டத்தின் அபிமானியாகவே தாம் மாறிவிட்டதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “நான்  பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகசென்றிருந்தேன். அங்கு சிறு சண்டைகள் முதல் பெரிய மோதல்கள் வரையிலான சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட மென்மையான,  அமைதியான சூழலை தேர்தல் பணியில் காணமுடிந்தது” என்றார். மற்றொரு வீரர் கூறுகையில், “ஏறக்குறைய 50 நாட்கள் இங்கு பணியாற்றினோம். தேர்தல் அமைதியாக நடந்தது. இதையே மற்ற வீரர்களும் உணர்ந்துள்ளனர். தமிழகம் மிகச் சிறந்த அமைதியான மாநிலம்” என்றார். 

;