tamilnadu

img

தமிழக அரசிடம் கேட்காமல் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பும் பாஜக அரசின் எதேச்சதிகாரம்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்....

சென்னை:
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் பிராண (ஆக்சிஜன்) வாயுவை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய பாஜக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. வரும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் இன்னும் நிலைமை மோசமடையும் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் வரக்கூடும். கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு, அதிகமான நோயாளிகளுக்கு பிராண வாயு தேவையை உருவாக்குகிறது என செய்திகள் காட்டுகின்றன. 
வட மாநிலங்கள் பலவற்றிலும் மருத்துவமனை மற்றும் பிராண வாயு கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனா சிகிச்சை தருவதிலும், இதர நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கட்டமைப்பே மக்களை பாதுகாப்பதற்கு உதவி வருகிறது. ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மருத்துவ பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக செய்திகள் காட்டுகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிர்த்துள்ள தமிழக முதலமைச்சர், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.  மத்திய அரசு இதுபோன்ற விசயங்களில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, பாதிப்பை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதோடு, மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாறாக எதேச்சதிகாரமாக பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் மோடி அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.எனவே, தமிழக அரசிடமிருந்து கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிராண வாயுவை திருப்பி விடக் கூடாது எனவும், தமிழகத்தின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக முதலமைச்சர் கூடுதலாக கேட்டுள்ள பிராண வாயுவை உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

                                                          ************

தேசிய கல்விக்கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ்மொழி புறக்கணிப்புக்கு சிபிஎம் கண்டனம்

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் வகையிலும், மாநில அரசின் கல்வி உரிமைகளை பறித்து, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் முறையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கைத் திட்டத்தை வரைவு அறிக்கையின் போதே கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களுக்கு எல்லாம் செவி மடுக்காத மத்திய பாஜக அரசு தற்போது தேசிய கல்விக் கொள்கையை 17 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, தேசிய   தேர்வுகளில் புறக்கணிப்பு என தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமான போக்கையை மத்திய பாஜக அரசு கடைப்பிடித்து வரும் சூழலில், தேசிய கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யாதது தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.

22-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;