tamilnadu

img

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் ஆட்சியில் இருப்பது தேசத்தின் துயரம்.... சுதந்திரதின விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கட்சிக் கொடியை மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஏற்றினார்.பின்னர் அலுவலக செயலாளர் வெ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வேலையில் அந்த சுதந்திரத்திற்கு மோடியால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு என்றால் மட்டும் போதுமானதல்ல, பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தது கம்யூனிஸ்டுகள். 1930ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேய படைகள் வெளியேற்றப்பட வேண்டும், முழுமையாக அரசியலில் இருந்து மதத்தை பிரிக்க வேண்டும், அந்நிய நிறுவனங்களை தேசியமயமாக்க வேண்டும், நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண் டும், அனைவருக்கும் தாய்மொழியில் கல்வி வழங்க வேண்டும் என மீரட் வழக்கில் கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்டுகள் சிறையிலிருந்து முழக்கமிட்டனர்.  நாட்டின் விடுதலைக்காக கம்யூனிஸ்டுகள் செய்த தியாகத்தை போல் வேறு யாரும் செய்ததில்லை என்றார்.

கான்பூர் சதிவழக்கு, மீரட் சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு என பல சதி வழக்குகளில் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப் பட்டனர். தோழர்கள் என்.சங்கரய்யா, உமாநாத், பி.ராமமூர்த்தி, ஏ.பாலசுப் பிரமணியம், ஜீவானந்தம் ஆகியோர் நாடு விடுதலை அடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் (1947ஆம் ஆண்டு 14ஆம் தேதி) சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுயசார்பு, ஜனநாயகம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கி உருவாக்கப் பட்டதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு தற்போதைய ஆட்சியாளர்களால் மிகப்பெரிய ஆபத்து ஏற் பட்டுள்ளது. எனவே அரசியலமைப்பு சட்டத்தை, மதச்சார்பின்மையை, உதிரம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றார்.

கே.பாலகிருஷ்ணன்
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில் விடுதலைப் போராட்டத்திலேயே பங்கேற் காத, காட்டிக் கொடுத்த ஒரு இயக்கம் தற்போது ஆட்சியில் இருப்பது இந்த தேசத்தின் துயரம் என்றார். சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை, அரசியல் சாசனத்தின் விழுமியங்களை, கூட்டாட்சி தத்துவத்தை, மதச்சார் பின்மையை எல்லாம் தகர்த்து எறியக் கூடிய நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. மதவெறி சக்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் செயல்பாடு உள்ளது.  மதச்சார்பின்மையை சீர்குலைக் கும் வகையில் பிரதமரே தலைமை தாங்கி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டுகிறார். தேசத்தில் மதவெறி பிடித்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் சுதந்திரம் பறிபோவது மட்டுமல்லாமல், இந்தியாவின் இறையாண்மை, கூட்டாட்சி, மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்தையும் சீர்குலைத்து கொண் டிருக்கிறது மோடி அரசு என்று அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்திருக்கிற தியாகிகளுக்கு எல்லாம் வீரவணக்கம் செலுத்தி, எதிர்கால இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக உருவாக்க, எந்த நோக்கத்திற்காக விடுதலை பெற்றோமோ அந்த நோக்கம் நிறைவேற இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத, இந்திய அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொள் ளாத ஒரு இயக்கம் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆர்.எஸ்.எஸ்.சின் ஆர்கனைசர் பத்திரிகையில் எழுதியுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் இல்லை, நியமிக்கப் பட்டவர்களால் உருவாக்கப்பட்ட சட்டம் என்றும், நம்முடைய சட்டம் மனுநீதியுடன் இணைந்தது, எனவே இந்த அரசியலமைப்பு சட்டத்தை ஏற்க மாட்டோம் என்றார்கள்.காங்கிரஸ் கட்சியின் நடைமுறை கொள்கைகள், ஆபத்தான போக்குகள் போன்ற காரணங்களால் மாற்று அரசாக சங்பரிவாரங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மிகப்பெரிய எழுச்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. புதிதாக விடுதலை அடைந்த பங்களாதேஷ், பாகிஸ்தான். இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் ஜனநாயகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான உந்து சக்தியாக இருப்பது மக்களுடைய சக்திதான். அந்த ஜனநாயக உணவுர்களை மக்களிடத்திலே மேலும் மேலும் வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக சுதிர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக வில்சன் நன்றிகூறினார். இதில் மாநில செயற்குழுஉறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், க.உதயகுமார், இன்சூரன்ஸ்ஊழியர்  சங்கத்தின் தென் மண்டலதுணை தலைவர் கே,சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;