tamilnadu

மருத்துவ மாணவர்களுக்கு இடஒதுக்கீடு... அவகாசம் கேட்கும் ஒன்றிய அரசு....

சென்னை:
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அமல் படுத்தவில்லை எனக் கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-22 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு, அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.இந்த நிலையில் வழக்கு திங்களன்று(ஜூலை 26) விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசு தரப்பில் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் திங்கட்கிழமை ஒத்திவைத்துள்ளனர்.

;