tamilnadu

img

சட்டவிரோதமாக அடைக்கப்பட்டோரை மீட்க கோரிக்கை

சென்னை, மே 10- மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாசம், சமூக ஆர்வலர் என்ற முறையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மாவட்டத்தில் குப்வாட் என்ற கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்டிரா சென்றவர்கள், கொரோனா அச்சம் காரணமாக ஊர் திரும்ப முயல்கையில், தமிழகத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டுமென மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, அங்கிருப்பவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடுமையான வெயில் காலத்தையும் பொருட்படுத்தாமல், மனிதாபிமானமற்ற முறையில், ஏழைத் தமிழர்களை அடைத்து வைத்திருப்பது அவர்கள் வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு அவசரகால மனுக்களை விசாரணை செய்யும் நீதிபதிகள் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

;