tamilnadu

இரு நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிப்பதால் மக்கள் மடிகிறார்கள்: கே.எஸ்.அழகிரி சாடல்.....

சென்னை:
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால், மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்து 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பாஜக ஆட்சி சாதனைகளைச் செய்ததாக நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் மக்கள் வரிப் பணத்திலிருந்து ரூ.4,880 கோடி செலவு செய்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.விளம்பரங்களால் தோல்விகளை மூடி மறைக்க முடியாது. கடந்த 7 ஆண்டுகளில் பாஜக அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிற சாதனைகளை ஆய்வு செய்தால், இமாலய தோல்விகளையே பாஜக அரசு நிகழ்த்தியதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட முடியும்.கடந்த 7 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றினாரா? வாக்குறுதியின்படி 7 ஆண்டுகளில் 14 கோடி பேருக்கு வேலை வழங்க வேண்டிய மோடி ஆட்சியில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

2020ஆம் ஆண்டில் மட்டும் 12 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துள்ளனர். 2021, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 74 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.மேலும், மே 2021 நிலவரப்படி, குறைந்தபட்ச ஒருநாள் ஊதியமான ரூ.375 பெற முடியாமல் 23 கோடி மக்கள் கூடுதலாக வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2005 முதல் 2015 வரை 27 கோடி மக்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர். அதில், பெரும்பாலானவர்கள் மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள் ளனர். இதனால், இதுவரை காணாத பேரழிவைச் சந்திக்க வேண்டிய நிலை நடப்பாண்டில் இந்திய மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், கலால் வரியை உயர்த்தி, கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 20 லட்சம் கோடி வரை வருவாயை மத்திய அரசு பெருக்கிக் கொண்டுள்ளது.எனவே, கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவை ஆளுகிற பிரதமர் மோடி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்ததோடு, கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தி செய்து, கொள்ளை நோயிலிருந்து மக்களின் உயிரை அன்றைய மத்திய அரசுகள் பாதுகாத்தன. ஆனால், 136 கோடி மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பேராயுதமாக விளங்குகிற தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால், மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.தற்போது ஏற்பட்டுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய பிரதமர் மோடி, அதற்கு மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;