tamilnadu

img

போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்துக.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம்.....

சென்னை:
கிராமப்புறங்களில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் நோயிலிருந்து மக்களை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் நடமாடும் மருத்துவமனைகளை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி  தமிழகமுதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கடிதம்எழுதியுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று தினசரி வேகமாகப் பரவி அதிகமான கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுக் கொண்டுள்ளன. தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் காய்ச்சல் நோய் வேகமாக பரவியுள்ளதால் நோய் பாதிப்பு ஏற்பட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது பொதுமுடக்கம் போன்றவைகளால் கிராமப்புற மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமலும், மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் கொரோனா நோய்த் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து கிராமப்புற மக்களை காப்பாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

1. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை பரிசோதிப்பது, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய நடமாடும் மருத்துவமனைகளை அனைத்து ஒன்றியங்களுக்கும் போதுமான அளவு ஏற்பாடு செய்து மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்; 

2.அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், துணை சுகாதார மையங்களிலும் கொரோனா பரிசோதனை மையங்களை ஏற்படுத்திட வேண்டும்; 

3.அனைத்து கிராமப்புற மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான மையங்களை செயல்படுத்த வேண்டும்.

4.கிராமப்புற மக்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பில்லாத சூழ்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு தாலுகாவிலும் தேவையான இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் (கேர் சென்டர்) அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. கிராமப்புறங்களில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய நிதியுதவி அளித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

;