tamilnadu

img

எளிமை, நேர்மை, தூய்மையின் இலக்கணம் தோழர் கே.தங்கவேல்.... சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை:
அகமும் புறமும் தூய்மையான தலைவர் என்று தோழர்கே.தங்கவேலுக்கு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் மறைவையொட்டி ஞாயிறன்று (செப்.13) சென்னையில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி தலைவர்கள்அஞ்சலி செலுத்தினர். இந்தக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றிய இரங்கல் உரை வருமாறு:

இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஊரடங்குகாலத்தில் கொரோனா தொற்று, வேறுபல காரணங்களால் பத்துக்கும் மேற்பட்ட தலைவர்களை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது. வர்க்க எதிரிகளை எதிர்த்து போராடி வீழ்த்திய நம்மால், கொரோனாவை வீழ்த்த முடியவில்லை. உலகமேசிக்கித்தவிப்பதுபோல் நாமும் சிக்கியுள்ளோம் என்றார்.எந்த ஒரு சூழலிலும் பதற்றம், கோபப்படாமல், முரண்பாடுகள் வரும்போது கூட நளினமாக கருத்தை பதிவு செய்வதில் கை தேர்ந்தவர் தோழர் தங்கவேல். நியாயமாகஇருந்தால் நெருக்கடியான நேரத்தில் கூட தமது கருத்தை அழுத்தமாக பதிவு செய்வார். பனியன் தொழிலாளர்களை திரட்டி மகத்தான போராட்டம் நடத்தியவர். தோழர் கே.ரமணிக்கு பிறகு இயக்கம், பின்தங்கிவிடாமல் காத்தவர் அவர். சட்டமன்றத்தில் மிகுந்தபொறுப்போடு, கொள்கைநிலை நின்று வாதாடுவதில் வல்லவர் என்றும் கே.பால கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

கே.சுப்பராயன் எம்.பி.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., பேசுகையில், இணைந்திருந்தபோதும், எதிரெதிர் நிலையில் இருந்தபோதும் தனித்த சிறப்புகள் மூலம் அனைவரிடமும் உறவுகொண்டிருந்தார்.  மண்புழு மண்ணை வளப்படுத்திவிட்டு மண்ணுக்குள் மறைந்திருப்பதை போன்று அனைத்துப்பணிகளையும் செய்துவிட்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாத தலைவர். நம்பகமான மிகவும் கம்யூனிஸ்ட் அவர் என்றார்.வழுக்கல்களும், இடையூறுகளும் நிறைந்த பொதுவாழ்வில் எள்முனை அளவு கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு அப்பழுக்கற்ற முறையில் தனது நடவடிக்கை மூலம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெருமை சேர்த்தவர். கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களுடன் நிரந்தர உறவு வைத்துக்கொண்டு, தனது நிலையிலிருந்து வழுவாமல், நிலைகுத்தி நின்ற கம்யூனிஸ்ட் அவர்.

பனியன் தொழிலாளர்களுக்கான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு பெரும் பங்காற்றியவர். எதையும் அமைதியாக ஆழமாக உள்வாங்கி தீர்மானகரமான முறையில் தனது கருத்தை தெரிவிப்பார். தோழர் கே.தங்கவேலின் இழப்பு இடதுசாரி இயக்கத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு என்று சுப்பராயன் புகழஞ்சலி செலுத்தினார்.

டி.கே.ரங்கராஜன் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், “சுயகல்வி மூலம் தன்னை வளர்த்துக் கொண்டவர். தொழிலாளி வர்க்கத்திலிருந்து ஒருவர் கட்சியின் மாநிலத் தலைமைக்கு உயர முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சிதான் சாத்தியப்படுத்தியது. அவருடைய நிதானம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று” என்றார்.“1986 ஆம் ஆண்டு கடினமான சூழலில் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். ஸ்தாபன பிரச்சனைகளில் நெளிவு சுளிவோடு, ஒருவரையும் இழக்காமல் பிரச்சனைகளை கையாண்டவர்” என்று குறிப்பிட்டார். கே.தங்கவேலுவை போன்று உள்ளும் புறமும் தூய்மையான ஆட்கள் குறைந்து வருகிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் கூறியதையும் அப்போது டி.கே.ரங்கராஜன் நினைவு கூர்ந்தார்.

அ.சவுந்தரராசன்
சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் குறிப்பிடுகையில், பனியன் தொழிலாளியாக இயக்கத்திற்குள் ஈர்க்கப்பட்டு, சொந்த அனுபவத்தில் சுரண்டலின் கோரப்பிடியை உணர்ந்து ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தவர். தோழர் கே.தங்கவேல் சிஐடியு தொழிற்சங்கத் தலைவராக, பனியன் சங்கத் தலைவராக, மாவட்டச் செயலாளராக, ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர். எந்த சூழலிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் நாட்டம் செலுத்தாமல், இயக்க நலனை முன்னிறுத்தி பின்னின்று பணி செய்யக் கூடியவர் என்றார்.ஸ்தாபனத்திற்குள் பல்வேறு பிரச்சனைகள் எழும்போது, அதிலெல்லாம் அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. தோழர்களோடும், வெகுஜன மக்களோடும் தொடர்பில்இருந்தார். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது, அவருடைய தொகுதிக்குள் நடைபெற்ற பெரும்பாலான திருமணம், மரணம் போன்ற சுகதுக்க நிகழ்வுகளில் அதிகம் பங்கெடுத்தவர் அவர். அந்தளவிற்கு மக்களோடு மிகுந்த நெருக்கமான தொடர்பை வைத்திருந்தார். அதேசமயம் அடிப்படையான நிலைகளில் சமசரம் செய்து கொள்ளாதவராக இருந்தார். அவரது மறைவு  கட்சியில், தொழிற்சங்க அரங்கில் குறிப்பாக மேற்கு தமிழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர் கூறினார்.

பி.சம்பத்
மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் குறிப்பிடுகையில், தோழர் கே.தங்கவேல் தனித்த தன்மையுடைய தலைவர். பன்முகத் திறன் கொண்டவர். மாநிலச் செயற்குழுகூட்டங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் உறுதியானதாக, அனுபவம் மிக்கதாக, முடிவெடுக்க இசைந்ததாக இருக்கும் என்றார்.இந்தக்கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.உதயகுமார், ஏ.ஆறுமுகநயினார், பா.ஜான்சிராணி, எஸ்.நம்புராஜன், சி.கல்யாணசுந்தரம், வே.ராஜசேகரன், அலுவலக பொறுப்பாளர் வில்சன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்.சங்கரய்யா இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்புக்குரிய  தோழர் கே. தங்கவேலின்  மறைவுச் செய்தி  பேரதிர்ச்சியாகவும், பெரும்  துயரமும்  தருகின்றது.
திருப்பூரில்  பனியன்  தொழிலாளியாக வேலையில்  சேர்ந்து, தொழிற்சங்க  பணியில் சேர்ந்து, மார்க்சிஸ்ட்  கட்சியில்  இணைந்து பின்னர் முழு நேர ஊழியரானார். கட்சியின்  கோவை மாவட்ட  செயலாளராக மற்றும்  கட்சி  கொடுத்த  அனைத்து பொறுப்புகளிலும்  திறம்பட பணியாற்றியவர்.தோழர்களுடன்  மிக நெருக்கமாக பழகக் கூடியவர். தோழர்களை அரவணைத்து  இயக்கப் பணிகளில்  ஈடுபட செய்வார். மார்க்சிஸ்ட்கட்சி ஒரு சிறந்த மக்கள்  ஊழியரை இழந்துவிட்டது. அவரது  பிரிவால்  துயருற்று  இருக்கும்  அவரின்  துணைவியார் சாந்தி, மகள்கள்  கவிதா, பிரியா, பேரக் குழந்தைகள் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓய்வூதியர் சங்கம்
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எளிமை, நேரம் தவறாமை, கண்டிப்பு ஆகியவற்றை கடைப்பிடித்தவர். எளிமையான அவரது உரையில் ஆழமான கருத்தோடு இருக்கும் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நேர்மையின் சிகரம் தோழர் தங்கவேல் : வைகோ இரங்கல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தளகர்த்தர்களில் ஒருவரும், தொழிற்சங்கத் தலைவருமான கே.தங்கவேல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன்.நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தவர் அவர். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் அவர். அனைத்துக் கட்சியினரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர்.திருப்பூர், கோவை உள்ளிட்ட பிரிக்கப்படாத கோவை மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக இருந்தார்.அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தமிழ்நாட்டின் பொதுவாழ்வுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செவ்வணக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேலு (68) செப்டம்பர் 13 அதிகாலையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.தோழர் கே. தங்கவேலு சிறு வயதிலிருந்தே இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பொது வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டவர். தொழிலாளர்கள் அடர்த்தி மிகுந்த திருப்பூரில் பனியன், விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுத் தொழிலாளர்களையும் தொழிற்சங்க அமைப்பில் அணிதிரட்டி போராடியவர்.சிஐடியு  தொழிற்சங்கத்தின் முன்னணி தலைவரான கே.தங்கவேலு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் இணைந்து 3 மாத கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் உறுதியாக செயல்பட்டவர். மாற்றாரும் குறைகூற இயலாத நேர்மையாளர். தத்துவ கண்ணோட்டத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். கொள்கை தெளிவானவர். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பாகும். தோழர் கே.தங்கவேலு மறைவுக்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் செலுத்துவதுடன், அன்னாரை பிரிந்து வாடும்அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

;