tamilnadu

நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசுகிறது நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசுகிறது

சென்னை, ஏப்.17 - நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை வீசுகிறது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தயாநிதிமாறன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு, ஆயிரம் விளக்கு பகுதி, தர்மாபுரம் குடியிருப்பு பகுதியில் ஜி.ராமகிருஷ்ணன் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா அணி  வெல்லும். தென் மாநிலங்களில் மட்டுமல்ல, வட மாநிலங்களி லும் மோடி எதிர்ப்பலை கடுமையாக உள்ளது. இந்தியா கூட்டணி பக்கம் காற்று திசை மாறி வீச தொடங்கி விட்டது”  என்றார். “தேர்தல் பத்திரம் நிதி திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது, ஊழலுக்கு வழிக்கும், வெளிப்படைத் தன்மை அற்றது என்று கூறி உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. 50நாட்களுக்கு பிறகு திடீரென்று பிரதமர் மோடி, கருப்பு பணத்தை ஒழிக்க எனது சிந்தனையில் உருவான திட்டம்தான் தேர்தல் பத்திரம்.  இதை எதிர்ப்பவர்கள் வருந்துவார்கள் என்று பேசியுள்ளார்.

ஊழல் செய்வது தனது ஜீவாதார உரிமை என்று மோடி கருதுகிறார். ஜூன் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு  மோடிதான் வருந்துவார்” என்றும் அவர் கூறினார். “தேர்தல் பத்திரத்தில் கருப்பு பணம்தான் கைமாறி யுள்ளது. தேர்தல் பத்திரம் உலகமகா ஊழல் என்பது அம்பல மானதால், பதற்றத்தில் இரண்டு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை கைது செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளால் வடமாநிலங்களில் பாஜக விற்கு எதிரான அதிருப்தி அதிகமாகி உள்ளது.

எனவே, வட மாநிலங்களில் பாஜக தோற்பது உறுதி. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா அணி வெல்லும்” என்றார். “தமிழ்நாட்டில் வாக்கு கேட்க 8 முறை பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்துள்ளார். மழை வெள்ளத்தால் 8 மாநிலங்கள் தத்தளித்த போது வரவில்லை. வெற்றி பெற மாட்டோம். 2வது இடத்தையாவது பிடிக்க வேண்டும் என்று  பிரச்சாரம் செய்ய வருகிறார்.

அந்த முயற்சியும் வெற்றி பெறாது” என்றும் அவர் கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது, சிபிஎம் மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், திமுக பகுதிச் செயலாளர் மா.ப.அன்புதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.ராஜ், வட்டச் செயலாளர் தேவராஜ், சிபிஎம் ஆயிரம் விளக்கு பகுதிச்செயலாளர் வே.இரவீந்திர பாரதி,  பகுதிக்குழு உறுப்பினர்கள் சிவா, சுரேந்தர், ஏழுமலை, எஸ்.ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

;