tamilnadu

img

உழைப்பாளிகளின் உற்ற தோழர் என்.சங்கரய்யா.... முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி....

சென்னை:
இந்திய விடுதலைக்காக போராடியதியாகி, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி சட்டமன்ற எதிர்க் கட்சித்தலைவரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவு செய்திருக்கிறார்.

‘சுதந்திர போராட்ட வீரர், உழைப்பாளிகளின் உற்ற தோழர், கொண்ட கொள்கையில் பிடிப்புடன் இருப்பவர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், இன்று (வியாழன்) 100வது அகவையில் தடம்பதிக்கும் திரு.சங்கரய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு எடப்பாடிபழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

எளிமையின் உருவம்: ஓபிஎஸ்!
‘‘விடுதலைப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், உழைப்பாளர்களின் உற்றத் தோழனாக இருந்து பல போராட்டங்களை நடத்தியவரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக திறம்படப் பணியாற்றியவரும், எளிமையின் உருவமாகவும், பண்பின் அடையாளமாகவும் விளங்குகின்ற என். சங்கரய்யா, நூறாவது அகவையில் அடியெடுத்து வைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் பிறந்த நாளில் அவருக்கு எனது மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சிறந்த வழிகாட்டி: கனிமொழி
திமுக மகளிர் அணி செயலாளரும் மக்களவை தலைவருமான கருணாநிதி கனிமொழி, ‘‘100-வது பிறந்தநாளை கொண்டாடும் என்.சங்கரய்யா அவர்களுக்கு தொலைபேசி மூலம் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். சுதந்திரப்போராட்ட வீரரான அவர் தொடர்ந்து எழுத்துலகிலும் இடதுசாரி அரசியலிலும் புத்துணர்ச்சியோடு இயங்கி வருகிறார்.இன்றைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்‘‘ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவு செய்திருக்கிறார்.

களங்கமில்லாத தோழர்: தமிமூன் அன்சாரி
‘‘தமிழக இடதுசாரிகளின் மதிப்புமிக்க தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்கள்  நூற்றாண்டு காணுவது நமக்குமகிழ்ச்சியைத் தருகிறது. அவர் களங்கமில்லா பொது வாழ்வுக்குரியவர். 1999 நாடாளுமன்ற தேர்தலில் அவரோடு வடசென்னையில் மேடையை பகிர்ந்து கொண்டது எனக்கு பெருமிதம் தருகிறது” இவ்வாறு முன்னாள் எம்எல்ஏ தமிமூன் அன்சாரி கூறியுள்ளார்.

பாட்டாளி தோழர்: சீனுராமசாமி
‘‘மார்க்சியத் தத்துவத்தின் நெறியோடு  நேர்மை மிகு ஆவேசமான உங்கள் உரையை கல்லூரி காலந்தொட்டு கேட்டு வளர்ந்தவன். வெள்ளையர் முதல் தொடங்கி இன்று வரைசமர் செய்யும் சமரசமற்ற அரசியல் பெருவாழ்வு. பாட்டாளியின் தோழர் சங்கரய்யா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்”! என்று திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை அனுப்பியிருக்கிறார்.

;