tamilnadu

img

சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் மறைவுக்கு சிபிஎம் இரங்கல்.....

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பி.சேதுராமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான தோழர் பி. சேதுராமன் (வயது 65) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள் கிறோம்.தோழர் பி. சேதுராமன் தேசபக்தி மிக்க காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர். தனது இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடிகளின் அன்பை பெற்றுகம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டவர். இளைஞர் பெருமன்றத்தின் நிர்வாகியாக இருக்கும் போது 1979 ஆம் ஆண்டு இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்  பி.கே. வாசுதேவன் நாயர் கலந்து கொண்ட வேலையின்மை எதிர்ப்பு மாநாட்டை மதுரையில்  நடத்தியதில் பெரும் பங்காற்றியவர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தோழர் பி. சேதுராமன் கலந்து கொண்டு கைதாகி 54 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர், மதுரை மாவட்ட அமைப்புச் செயலாளர், ஜனசக்தி பொறுப்பாளர், தொழிற்சங்கம் என அனைத்திலும் திறம்பட பணியாற்றியவர். இடதுசாரி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதெல்லாம் மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவ தோடு இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதில் ஆர்வத்துடன் செயலாற்றியவர். அனைவரிடமும் மிகவும் இனிமையாக நட்புறவுகொள்ளும் குணம் கொண்டவர். இந்தியாவும், தமிழகமும் பல நெருக்கடிகளை சந்தித்து வரும் இக்காலத்தில், உழைப்பாளி மக்கள் பல இன்னல்களுக்கும், சுரண்டல்களுக்கும் ஆளாகி வரும் சூழ்நிலையில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு போராட வேண்டிய இக்காலகட்டத்தில், அவரது மறைவு உழைக்கும் வர்க்கத்தினருக்கும், இடதுசாரி கட்சிகளுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;