tamilnadu

img

தமிழகம் முழுவதும் 6 மாதங்களில் 103 பேர் போக்சோ சட்டத்தில் கைது....

சென்னை:
தமிழகம் முழுவதும் 6 மாதங்களில் 103 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.பள்ளி, கல்லூரியில் பாதிக்கப்படக்கூடியவர்கள் தாமாக முன்வந்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறித்த ரகசியம் முழுமையாக காக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி பருவத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் பலரும் துணிச்சலாக முன்வந்து புகார் அளித்து வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை தெரிவித்துள் ளது. இதில் சென்னையில் மட்டும் 50 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பாலியல் வழக்கில் கைதானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ஆனந்த், தடகளப் பயிற்சியாளர் நாகராஜன், தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ், சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா, அவருக்கு உதவியாக இருந்த சுஷ்மிதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்காப்பு பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கு நாமக்கல்லில் நடைபெற்ற சம்பவம் என்பதாலும், சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் காஞ்சீபுரம் மாவட்டம் என்பதாலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலியல் ரீதியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரியில் பாதிக்கப்படக் கூடியவர்கள் தாமாக முன்வந்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் குறித்த ரகசியம் முழுமையாக காக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே கடந்த 6 மாதங்களில் 103 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக் கப்பட்ட பள்ளி மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;