tamilnadu

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்... ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்....

சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப் படி உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளியன்று (ஆக. 13) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அறிவிக்கப் பட்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.  அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும், பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக்காலம் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப் பட்டுள்ளதும் வரவேற்கக் கூடியவைகளாகும்.அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மிகவும் முக்கியமானது தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பதாகும். இந்த வாக்குறுதியின் மீது ஒரு வார்த்தை கூட இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் தேதியில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி அகவிலைப்படியை முடக்கி வைத்த ஒன்றிய அரசு அதை 1.7.2021 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது.

அதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2022 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு ஒன்றிய அரசு போல் 1.7.2021 முதல் தனது ஊழியர்களுக்கு உயர்த் தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், குறைந்த ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 13,000க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், கடந்த ஆட்சியில் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஊக்க ஊதியத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குதல் போன்ற அறிவிப்புக்களையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;