tamilnadu

img

மின்சார சட்ட மசோதா நிறைவேறினால் ஏழை, எளிய மக்களுக்கு மின்சாரம் கிடைக்காது.... மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேச்சு...

சென்னை:
மின்சார சட்ட மசோதா 2021 நிறைவேற்றப்பட்டால் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக மாறி சந்தைப் பொருளாகிவிடும் என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் கூறினார்.

மின்சார சட்ட மசோதா 2021ஐ கைவிட வலியுறுத்தி மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி  தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஊழியர்களிடையே, பொதுமக்களிடையே துண்டுப்பிரசுர விநியோகம், வாயிற் கூட்டங்கள், கருத்தரங்கம் போன்றவை நடைபெற்று வருகின்றன.அதன் ஒருபகுதியாகச் சென்னை மேற்கு வட்டத்தின் சார்பில் மின் ஊழியர் மத்தியஅமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன் தலைமையில் அம்பத்தூரில் வியாழனன்று (ஆகஸ்ட் 5) கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எல்.சவுரிமுத்து வரவேற்றார்.இதில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசுகையில்,  ஒன்றிய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நுகர்வோர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். 

இந்த கொடிய கொரோனா தொற்று நோய் காலத்தில் ஒன்றிய அரசு அத்தனை பொதுத்துறை நிறுவனங்களை யும் விற்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் வழங்கிய காரணத்தால் விவசாயத்தில் உணவு உற்பத்தியில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. சிறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கிய காரணத்தால் தொழில் வளர்ச்சியடைந்தது. மின்சாரத்தைப் பார்க்காத சிறு குடிசையில் வாழும் மக்களுக்கு ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.

 மின்சார சட்ட மசோதா நிறைவேறினால் மின்சார விநியோகம், உற்பத்தி ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்குச் சென்றுவிடும். இதனால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் எட்டாக்கனியாக மாறி சந்தைப் பொருளாக மாறிவிடும். மானியம் படிப்படியாகக் குறைக்கப்படுவதால் மின் கட்டண உயர்வைப் பொதுமக்கள் சந்திக்க நேரிடும். மேலும் குடிசைகள், வீடுகள், கைத்தறி, விசைத்தறிக்கு வழங்கி வரும் மானிய விலை மின்சாரமும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் பறிக்கப்படும். மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் சென்று விடும். தனியார் முதலாளிகள் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோரை மட்டுமே தேர்வு செய்வார்கள்.

தமிழக அரசுக்குக் கோரிக்கை
மின்  துறையைப் பாதுகாக்க, பொதுத்துறையாக நீடிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் பங்கு பெறுவது மட்டுமல்லாமல் பொதுமக்களிடம் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும்.  கேரள அரசு இந்தசட்டத்தை ஏற்க மாட்டோம் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதுபோல் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மக்களின் சொத்துக்களை களவாட அனுமதியோம்
மின்வாரிய பொறியாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தி.ஜெயந்தி பேசுகையில், மின்சாரத் துறை சேவைத் துறையாக நீடித்தால் மட்டுமே கிராமப்புற மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும். மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறைகளும் பொதுத்துறை நிறுவனங்களாகவே நீடிக்க வேண்டும். அதற்கான போராட்டத்தை நாம்தொடர்ந்து நடத்தி வருகிறோம். மேலும் அந்த போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இதில் மின்வாரிய பொறியாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இந்திராணி, கே.வெங்கடேசன் (கணக்காயர் தொழிலாளர் சங்கம்), எம்.சங்கர் (அண்ணா தொழிற்சங்கம்), ஆர்.லோகேஸ்வரன் (மின்வாரிய ஜனதா தொழிற்சங்கம்), ஆர்.நரசிம்மன் (மின்வாரிய பொறியாளர் சங்கம்), சு.சரவணன் (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்), என்.கதிர்வேல் (டாக்டர் அம்பேத்கர் என்ப்ளாயீஸ் யூனியன்), ஆர்.ராமசாமி (இன்ஜினியரிங் யூனியன்), பி.முரளி (எம்ப்ளாயிஸ் பெடரேஷன்), கே.ராஜேந்திரன் (தொமுச) ஆகியோரும் பேசினர். பார்த்தசாரதி நன்றி கூறினார்.

;