tamilnadu

img

விவசாயிகள்-ஆதிவாசி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக.... முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவசாயிகள் சங்கம் நேரில் மனு அளிப்பு....

சென்னை:
விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைச்செயலாளர் சாமி.நடராஜன் உள்ளிட்டோர் இந்த மனுவை அளித்தனர்.  முதல்வரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பவர்கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின்தொடர மைப்பு கழகமும் உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கப்படுவதால் பல்வேறு விதமான இழப்புகளுக்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இதில் குறிப்பாக, திறந்தவெளி கிணறுகளுக்கு இழப்பீடு வழங்குவது சம்பந்தமாக அரசாணையில் குறிப்பிடப்படாததால் திருவண்ணா மலை மாவட்டத்தில் 137 கிணறுகளுக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு முழுவதையும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்திய பிறகே மின்கோபுர பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். பணிகளை முடித்துவிட்டால் அவர்களிடமிருந்து இழப்பீட்டை பெற முடியாமல் தாங்கள் ஏமாற்றப்படுவோம் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. எனவே, இப்பிரச்சனையின் மீது தாங்கள் தலையிட்டு விவசாயிகள் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும்.விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விவசாய பம்புசெட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் கூடுதலான நேரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துக!
வனஉரிமைச்சட்டம்-2006 நடைமுறைக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் இச்சட்டத்தை அமல்படுத்த போதிய அக்கறை காட்டவில்லை. இதனால், தமிழ்நாட்டில் 28.2.21 வரை 8594 பேருக்கு மட்டுமே வனஉரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி பயன்பெற வேண்டியஆதிவாசிகள் மற்றும் பாரம்பரிய மாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள் வனத்துறையினரால் தங்கள் நிலங்களிலிருந்தும், குடியிருப்பு களிலிருந்தும் வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். சில இடங்களில் வனத்துறை யினருக்கும் மக்களுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்டம், மேகமலை, வருசநாடு பகுதி விவசாயிகள் வனஉரிமைச்சட்டப்படி உரிமை கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அதன் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது. வனஉரிமைச்சட்ட த்தின்படி உரிமை வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வனத்துறையினர் இந்த ஆண்டு விவசாயம் செய்ய விடாமல் விவசாயிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தாங்கள் தலையிட்டு உடனடியாக விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடியில் நடைபெற்றுள்ள மோசடி தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மோசடியில் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவதுடன், முறைகேடாக பெறப்பட்டபணம் முழுமையாக வசூலிக்கப் பட வேண்டும். அதே நேரத்தில், கடன்தள்ளுபடி பெற்ற உண்மையான விவசாயிகளுக்கு நகை திருப்பித்தரப்படாமல் உள்ளது. இதனால், புதிதாக நகைக்கடன் பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் நகைகளை திருப்பிக் கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் நிதி மோசடியில் விசாரணை அறிக்கை வெளியிடுக!
விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் கடந்தஆட்சி காலத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. பாஜக, அதிமுகவைச் சார்ந்த பிரமுகர்களும், வேளாண்துறை அதிகாரிகளும் சேர்ந்து இந்த மோசடியை செய்துள்ளனர். இது தொடர்பாக, புகார்கொடுக்கப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த விசாரணையின் முடிவு இதுவரை வெளியிடப்பட வில்லை. எனவே, தமிழ்நாட்டில் பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான சிபிசிஐடி விசாரணை அறிக்கையை வெளியிடுவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

 

;