tamilnadu

img

விவசாயிகள் பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம்.... வேளாண் உற்பத்தியை லாபகரமானதாக மாற்ற விவசாயிகள் சங்கம் ஆலோசனைகள் முன்வைப்பு...

சென்னை:
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளுக்காக அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது. இதில் வேளாண் உற்பத்தியை பெருக்கி, லாபகரமானதாக மாற்றும் வகையில் , தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செய லாளர் பெ.சண்முகம் ஆலோசனைகளை முன்வைத்துள்ளார்.மாநில வேளாண் துறை அமைச்சரிடம் முன்வைத்த ஆலோசனைகள் வருமாறு:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்
இந்திய ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட விவசாயிகளுக்கு விரோதமான மூன்று சட்டங்களை எதிர்த்து ஒன்பது மாத காலமாக தலைநகர் தில்லிக்கு அருகில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய ஒன்றிய அரசு போராட்டத்தை அலட்சியப்படுத்தி கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், முதல்வர் அவர்கள் சட்டப் பேரவையில் அறிவித்ததைப் போல, நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொட ரில், மூன்று வேளாண் விரோத சட்டங்களை யும் இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திடுமாறு வேண்டிக் கேட்டுக்கொள் கிறோம். அரசின் இந்த நடவடிக்கை போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மிகப்பெரும் உற்சாகத்தை அளிக்கும்.இந்த சட்டங்களை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன், வேளாண் விளை பொருட்களுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக வியாபாரிகள், நிறுவனங்கள் வாங்கினால் குற்றம். அதற்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்ற முறையில் ஒரு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

நாடு முழுவதும் விவசாயிகளில் சிறு-குறு விவசாயிகள் தான் அதிகம். எனவே, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள், உதவிகள் அனைத்தும் சிறு-குறு விவசாயிகளை மையப்படுத்தியும், இந்தப் பிரிவினருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் செயல்படுத்தப்பட வேண்டும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம்.

பாசனம்
இருக்கும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரை சேமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அணைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு அதன் முழு கொள்ளளவு நீரை தேக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு உள்ளிட்ட தமிழக ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு கோரி காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் குறிப்பிட்ட காலவரை யறைக்குள் மின் இணைப்பு வழங்குவதுடன் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இடுபொருட்கள்
விதைக்கு விவசாயிகள் தனியாரைத் தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அது தரமில்லாமல் இருப்பதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே, தேவையான அளவு தரமான விதைகளை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே வழங்க வேண்டும். உற்பத்தி திறன் மிகுந்த புதிய விதைகளை நமது வேளாண் பல்கலைக் கழகங்கள் மூலம் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளும் தட்டுப்பாடின்றி உரிய நேரத்தில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கடன்
கூட்டுறவு அமைப்புகளை இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வதை எதிர்த்து முறியடிக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதில் சிறு-குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பயிர்களுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டுமே தவிர நகையை ஈடாக பெற்றுக் கொண்டு பயிர்க்கடன் என்ற பெயரில் வழங்குவது கைவிடப்பட வேண்டும். கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

விலை
தேசிய விவசாயிகள் கமிஷன் தலைவர் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைதீர்மானித்து அரசு அறிவிக்க வேண்டும். திமுகதேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது போல நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு கேரளாவைப் போல குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானித்து கூட்டுறவு அமைப்புகள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.நெல் தாமதமில்லாமல் அரசால் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமித்து வைப்பதற்கான கிடங்குகள், உலர் களம் அமைக்கப்பட வேண்டும். கொள்முதலின் போது ஒவ்வொரு மூட்டைக்கும் வாங்கும் லஞ்சம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ப ஊழியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்.தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையை கரும்பு விவசாயிகளுக்கு தராமல் 1219 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. இதை பெற்றுத்தர அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில்சர்க்கரை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியில்லாமல் பணம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளை நவீனப்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இணை மின்சார உற்பத்தி திட்டம், எத்தனால் தயாரிப்பது போன்றவற்றை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. மரவள்ளிக்கு ஆண்டுதோறும் அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி விலை தீர்மானிக்க வேண்டும். வேளாண்மை இயந்திரமயமாகிவரும் நிலையில், வேளாண் பொறியியல் துறை மூலம் கூடுதல் இயந்திரங்கள் வாங்கி விவசாயிகளுக்கு நியாயமான வாடகையில் வழங்க வேண்டும்.

செண்ட் தொழிற்சாலை அமைத்திடுக!
தமிழ்நாட்டில் மலர் சாகுபடி அதிகரித்துள் ளது. எனவே, மலர் சாகுபடி அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் செண்ட் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும்.பயிர்க்காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணைக்கப்பட வேண்டும். அதிலுள்ள குறைபாடுகள் களையப்பட்டு தனியொரு விவசாயி பயிர் பாதிக்கப்பட்டாலும் காப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும். அந்தந்த ஆண்டுக்குரிய காப்பீட்டுத் தொகை உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். மாநில அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.இயற்கை பேரிடர் கால நிவாரணத் தொகையை உயர்த்தி தீர்மானித்திட இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். வேளாண்மை மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்திடும் வகையில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்வதை ஊக்கப்படுத்த உதவிட வேண்டும்.இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில்  திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். மானியம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் பலப்படுத்தப்பட்டு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட அதற்கான குழு மாற்றி யமைக்கப்பட வேண்டும்.

வேளாண் மேம்பாட்டுக் குழு அமைத்திடுக!
வேளாண் விளை பொருட்களை சேமித்து வைக்க தேவையான ஊராட்சிகளில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரதான பயிர்களான நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, கரும்பு, மரவள்ளி ஆகிய பயிர்களின் உற்பத்தி திறன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைத்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரளாவைப் போல் கடனிலிருந்து விவசாயிகளை விடுவிக்க கடன் நிவாரண கமிஷன் அமைக்க வேண்டும். வனவிலங்கு களால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு இயற்கை பேரிடராக கருதி இழப்பீடு வழங்க வேண்டும். வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டு திறனுடன் செயல்பட வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் குறைதீர்ப்பு கூட்டமாக ஆக்கப்பூர்வமாக நடத்தப்பட வேண்டும்.தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். நூறு நாள் என்பது 150 நாட்களாக உயர்த்தப்படுவதுடன் கூலியும் அதிகரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

;