tamilnadu

img

ஊரடங்கு மீறல்: காவல்துறை தீவிர நடவடிக்கை....

சென்னை:
தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது காவல்துறையினரின் நடவடிக்கை தொடங்கியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டது.வருகிற 24 ஆம் தேதி வரையில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள் மட் டும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

அதே நேரத்தில் தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கை மீறி வெளியில் வரும் மக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களை துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேவையின்றி பலர் வாகனங்களில் வெளியில் சுற்ற தொடங்கினார்.கடந்த 3 நாட்களாக இது போன்று மக்கள் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து ஊரடங்கை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர்  தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து காவல்துறை தலைவர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அரசின் அறிவுரைகளை பொதுமக்களில் சிலர் ஒழுங்காக பின்பற்றாததால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்றும் எனவே பொதுமக்கள் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்தவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. பல இடங்களில் வாகனங்களில் வெளியில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் சுமார் 200 இடங்களில் காவல்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். 360 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.சென்னையில் கடற்கரை பகுதியில் டிரோன் கேமரா மூலமும் கண்காணித்தனர். காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய கடைகளை சரியாக 12 மணிக்கு மூடி விட வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதனை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இதே போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும் காவல்துறையினரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னைக்கு அடுத்து வைரஸ் அதிகமாக பாதித்து வரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் காவல்துறையினர் தங்கள் பணியை தீவிரப்படுத்தினர்.கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்துரோடு ரவுண்டானா, பெங்களூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.நெல்லையில் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர். பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வாகன சோதனை செய்தனர்.

மதுரையில் மாநகராட்சி, சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் கூட்டாக இணைந்து 30 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது, ஊரடங்கை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் சுற்றியவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான சாலைகளில் ஊரடங்கை மீறி வெளியில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்து கொண்டே சென்றனர்.

;