tamilnadu

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு... சட்டப் பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

சென்னை:
புதிய கல்விக் கொள்கை குறித்து பேச அனைத்துக்கட்சிக்கூட்டத்தைக் கூட்டவேண்டும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும், கல்வி அமைச்சர் பேசி அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

சட்டப்பேரவையில் புதனன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் எதிர்க் கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் புதியக்கல்விக்கொள்கைக் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். “தேசிய கல்விக் கொள்கை பற்றி ஆராய இரு குழுக்களை (உயர்கல்வி, பள்ளிக் கல்வி) நியமித்துள்ளனர். பாதக அம் சங்களைப் பெற அக்குழுக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். தமிழும் - ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை தமிழகத்தின் உயிர் மூச்சாக - உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஆகவே இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் விவாதிக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அழுத்தம் திருத்தமாகக் கேட்டுக்கொண்டு, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றித் தரவேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கையை விவாதித்து - சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கும் - தமிழ்மொழிக்கும் விரோதமான, ‘தேசிய கல்விக் கொள்கை 2020’-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும்’’ என்று அவர் கூறினார்.
ஆனால் இதுகுறித்து அரசு முடிவெடுக்க மறுத்ததால் திமுக வெளிநடப்புச் செய்தது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின்,  “நான் பேரவையில் பேசியதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துப் பேசினார். அவரது விளக்கத்தைத் தீர்மானமாக நிறைவேற்றித்தரக் கோரினோம். அரசின் விளக்கத்தைவிடத் தீர்மானம் தான் ஒட்டுமொத்த சட்டப்பேரவையின் எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தும்.ஆனால், எங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, இதனைக் கண்டித்துத் திமுக சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம்” என்றார். சிறிது நேரம் கழித்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

;