tamilnadu

img

முதல்வருக்கு ஒரு கடிதம்...

சென்னை:
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது;  கொரோனா மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 6 வியாழனன்று எழுதியுள்ள கடிதம் வருமாறு:

தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி ஆகிய தென்மாவட்டங்கள் உள்பட பெரும்பகுதியான மாவட்டங்களில், நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. புதன் நிலவரப்படி (5.8.2020) பாதிக்கப்பட்டவர்கள் 2,73,460, உயிரிழந்தவர்கள் 4,461 பேர்.  நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில் மருத்துவ சிகிச்சை மற்றும் நோய் பரவல் கட்டுப்படுத்துதல் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

உயர் மருத்துவக்குழு அமைத்திடுக!
1. தமிழ்நாட்டில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது.  உயிரிழப்புகளின் சதவிகிதமும் அதிகரித்துக்கொண்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.  இது மிகவும் கவலை யளிப்பதாக உள்ளது. கொரோனா  நோய்த் தொற்றில் மிக முக்கியமான பணி மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமே.  இதில் அரசின் கவனம் கூடுதலாகஇருக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இந்த உயிரிழப்புகளுக்கான காரணங்கள் குறித்து உயர்மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடன் மருத்துவமனைக்கு கொண்டு வருவது, சிகிச்சையளிப்பதில் தாமதம், போதுமான உபகரண கருவிகள்(ஆக்சிஜன், வெண்டிலேட்டர்) இல்லாதது, சிகிச்சையளிப்பதற்கான போதுமான மருத்துவர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன என அறிய முடிகிறது. எனவே, மேற்கண்ட குழு அமைத்துஉடனடியாக ஆய்வு செய்து உரிய மருத்துவ சிகிச்சை களை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

முழுக் கட்டுப்பாடும்  உதவிகளும்
2.  ஒவ்வொரு மாவட்டத்திலும் நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு முழுக்கட்டுப்பாட்டை அமல்படுத்தவேண்டும். அந்த பகுதியில்  நோய்த்தொற்றுக் கான சோதனை, கிருமி நாசினி தெளிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களை உடனடியாக தனிமைப் படுத்தி மருத்துவமனையில்  சிகிச்சையளிப்பது, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு  தன்னார் வலர்கள் மூலம் வீடுகளுக்கு   தேவையான அத்தியாவசியப் பொருட்களை  விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து அப்பகுதிகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து  கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.  அந்த பகுதிகளில்பாதிக்கப்பட்டவர்களை உடன் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பது போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு மருந்துகளை இலவசமாக வழங்குக!
3 . பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,  நிலவேம்பு கசாயம், ஆர்சனிக் ஆல்பம் (ஹோமியோ மருந்து)  உள்ளிட்டவற்றை அனைத்து பகுதிகளிலும் இலவசமாகவழங்கிடுவதை உறுதி செய்ய வேண்டும்.  அறிவிக்கப்பட்ட  இலவசமுகக் கவசங்களை உடனடியாக வீடு, வீடாக வழங்கிட வேண்டும்.

தாமதமாகும் பரிசோதனை முடிவுகள்!
4 . விருதுநகர், நெல்லை இன்னும் பல மாவட்டங்களில் பரிசோதனை முடிவுகள் வெளியிட ஒரு வார காலம் வரை தாமதமாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டியுள்ளது. பி.சி.ஆர். சோதனைக்கூடங்கள் மிகவும் குறைவான இடங்களிலேயே நடத்தப்படுவதால் முடிவுகள் தாமதமாக  கிடைக்கிறது என அறிய முடிகிறது. எனவே, ஒவ்வொரு கோட்ட மருத்துவமனைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனைக் கூடங்களை ஏற்படுத்திட வேண்டும். பரிசோதனை முடிவுகள் குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

தன்னார்வ அமைப்புகளை இணைத்து...
5 . ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து  மருத்துவமனையிலும் தினசரி காலை 10 மணி முதல் மாலை  4 மணி வரை பிசிஆர் சோதனை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். பரிசோதனை செய்திட வரும் அனைவருக்கும்  அன்றே பரிசோதனை நடத்த வேண்டும். அனைத்து நகரங்களிலும் தன்னார்வ அமைப்புகளை இணைத்து மொபைல் வாகனங்கள் மூலம் நோய்த்தொற்று கண்டறிய வேண்டும்.

ஆம்புலன்ஸ் பற்றாக்குறையைக் களைந்திடுக!
6 . பல மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களிடம், “நேராக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்” என சொல்லும் அவலம் உள்ளது. இதனை களைய அனைத்து மாவட்டங்களிலும் ஆம்புலன்ஸ் மற்றும் வாகன வசதிகள் மாவட்ட மருத்துவமனைகளிலும், பிற பகுதிகளிலும் கூடுதலாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தாமதிக்காமல் தகுந்த சிகிச்சை வழங்குக!
7.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் தாமதிக்காமல் நோயாளிகளுக்கு உடனடியாக முறையான தகுந்த சிகிச்சைகள் தொடங்கிட வேண்டும். இதில் தாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. உதாரணமாக காஞ்சிபுரம் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழுஉறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின்  மாவட்ட செய்தி யாளரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான இராமநாதன் நோய் தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடிப்படை  வசதிகள், சிகிச்சை ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபோன்ற துயரங்கள் தவிர்க்கப்பட வேண்டுமானால் உடனடியாக மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் சிகிச்சை ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, மூச்சுத்திணறலுக்கு ஆளான  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கிராமப் புறங்களில் கொரோனா சிகிச்சை மையம்
8 . கிராமப்புறங்களில் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் அடை யாளங்கண்டு அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை மையங்களை உருவாக்கிட வேண்டும். ஏற்கனவே நகரங்களில் உள்ள மருத்துவமனை களில் நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகமாகஇருப்பதால் கிராமங்களில்இருந்து வருகிறவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே, அந்தந்த பகுதிகளிலேயே கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கி சிகிச்சையளித்திட கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொரு மையத்திற்கும் கண்காணிப்பு அதிகாரி
9 . கொரோனா சிகிச்சை மையங்களில் சுகாதாரம் பராமரிப்பு , தரமான உணவு, வெந்நீர், போதியபடுக்கைகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து புகார்கள்எழுந்துள்ளன. சில  இடங்களில்நோயாளிகளே மருத்துவமனையில் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள் ளது. சிகிச்சை மையங்களில் உள்ள நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதில்லை எனவும்,அவ்வாறு வழங்கப்படும் உணவும் உரிய நேரத்தில் கிடைக்கப்படுவ தில்லை எனவும் புகார்கள் எழுகின்றன. இவைகளை உடனடியாக சரிசெய்வதுடன், ஒவ்வொரு சிகிச்சை மையத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமித்திட வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.

உடனடி மேல் சிகிச்சைக்கு வசதி செய்க!
10 .  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை தேவை என்கிற நிலையில், அடுத்த மேல்நிலையில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே உடனடியாக இதுபோன்று நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை கிடைத்திட அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.

சிறப்பு மருத்துவ முகாம்களை அதிகரித்திடுக!
11 . மதுரை உள்ளிட்ட மாநகராட்சி களில் உயிரிழப்புக்கள் அதிகரித்துவருகிறது. இந்த மருத்துவமனை களில் போதிய சிகிச்சைக்கான மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துவதுடன், அதிக வசதிகளுடன் கூடிய சிறப்பு தற்காலிக மருத்துவ முகாம்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

பிற நோயாளிகளுக்கு பொது மருத்துவத்தை உறுதி செய்க!
12 . மருத்துவமனைகளில் வேறு தொந்தரவுகள், நோய்கள் காரணமாக மருத்துவமனைக்கு வருகிற வர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் குறைபாடுகள் உள்ளன. மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிற பொதுமருத்துவ ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.குறிப்பாக தலைக்காயம் அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவு,மாரடைப்பு ஏற்படும் நோயாளி களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை உடனடியாக செலுத்துகிற ஏற்பாடு, விஷக்கடி மருந்துகள் என அனைத்து அவசர பிரச்சனைகளுக்கும், பாதிப்புகளுக்கும் உரிய மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் மருத்துவமனைகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதாரப் பணியிடங்களை நிரப்புக!
13 . அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போதிய அளவில் நியமிக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் நகர்நல அலுவலர்கள் (M.H.O) உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொற்றுத் தடுப்பு  பணிகளை பாதிக்கும். எனவே நகராட்சிகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி  செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடுக!
14 . மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பலருக்கு அதிக அளவில் தொற்று ஏற்படுகிற தகவல்கள்  வருகின்றன. மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான கவச உடைகள் உள்ளிட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவேண்டும்.

தனியார் கட்டணக் கொள்ளையைத் தடுத்திடுக!
15 . தனியார் மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கான வசதிகள் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் அளவுக்கு அதிகமான கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. அரசு தீர்மானித்த கட்டணங்களுக்கு மேல் நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தீர்மானித்துள்ள கட்டண விகிதங்கள் தனியார் மருத்துவமனைகளில் வாயிலில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். 

தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்துக!
16 . அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதபோது, சில தனியார் மருத்துவமனைகளை கோவிட்-19 சிகிச்சைக்காக தற்காலிகமாக கையகப்படுத்த வேண்டும்.

25 சதவீத இடங்களை ஏழை நோயாளிகளுக்கு ஒதுக்குக!
17. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 25 சதவிகித இடங்களை ஏழை நோயாளிகளுக்கு கோவிட்-19 சிகிச்சைக்காக ஒதுக்குவதை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். 

உடனடி சிகிச்சையை மறுக்காதீர்!
18.  பிரசவத்திற்கு செல்லும் தாய்மார்கள் மற்றும் வேறு நோய்களுக்கு  செல்வோரையும் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ்கொண்டு வந்தால்தான் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நிலை உள்ளது. கொரோனா பரிசோதனை எடுப்பதுடன், உடனடி சிகிச்சைமறுக்கப்படக்கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில்
19.  கொரோனா பாதித்த நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்கள் மற்றும் மருத்துவமனைகள்ஆகியவற்றில் பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு  ஏற்ற  வகையில் சட்ட விதிகளின்படி  சிகிச்சை  ஏற்பாடு  இருக்க வேண்டும்.மாவட்ட தலைநகரங்களில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி களுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைந்த தனிமைப்படுத்தும் மையங்கள் உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ரூ.7500 தருக!
20 . கொரோனா நோய்த்தொற்று, ஊரடங்கு போன்ற காரணங்களால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் அனைத்து குடும்பத்தினருக்கும் மாதாந்திர நிவாரணத் தொகை ரூ. 7,500/- ஆறு மாதங்களுக்கு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். 

;