tamilnadu

img

பசிக்குதா எடுத்துக்குங்க..!

எளியவர்கள், ஆதரவற்றவர்களுக்கு உதவ செல்வந்தர்களாக இருக்க வேண்டியதில்லை. மனம் இருந்தால் போதும் என்பதை நிருபிக்கும் விதமாக சாலையோர உணவுக்கடையில் பசிக்குதா எடுத்துக்குங்க என்கிற வாசகத்துடன் பிரியாணி பொட்டலத்தை அடுக்கி வைத்து எளியவர்களின் பசியாற்றும் இளம் பெண்ணின் நடவடிக்கை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புளியகுளம் ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சென்னையை சேர்ந்த சதீஷ் மற்றும் சப்ரினா தம்பதியினர். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். பிஎஸ்சி சைக்காலஜி படித்துள்ள சப்ரினா தனது வீட்டின் முன்பு சிறிய அளவில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இயங்கும் இந்த கடையில் எம்டி பிரியாணி, சுராபுட்டு உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். எம்டி பிரியாணி இருபது ரூபாய் என குறைந்த விலையில் வழங்கி வருகிறார். மிகமிக குறைந்த விலையில் பசியாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் இப்பெண்மணி கடைக்கு முன்பு பெட்டி ஒன்றில் பிரியாணி பொட்டலங்களை வைத்துள்ளார். அதன் அருகிலேயே பசிக்குதா எடுத்துக்குங்க  என்று கரும்பலகையில் எழுதி வைத்துள்ளார். அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பிரியாணி பொட்டலங்களை ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள் விலை இல்லாமல் எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து சப்ரினா கூறுகையில், சாதாரண சாலையோர கடைகளில் பிரியாணி குறைந்தது 50 ரூபாயிலிருந்து விற்கப்படுகிறது. இருப்பினும் ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் மதியம் ஒருவேளை மட்டும் 20 ரூபாய்க்கு கடந்த மூன்று மாதங்களாக எம்.டி பிரியாணி விற்பனை செய்து வருகிறேன். இதில் நஷ்டம் ஏதுமின்றி வருவாய் ஈட்டி வருகிறேன். விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் 15 ரூபாய்க்கு தங்களால் பிரியாணி வழங்க இயலும் என்றார். மேலும் ஆதரவற்றவர்கள் பெரும்பாலானோர் இந்த 20 ரூபாய் கூட கொடுத்து பிரியாணி வாங்க இயலாத சூழல் உள்ளதால் அவர்களுக்காக தனியாக பெட்டியில் பிரியாணி பொட்டலங்கள் வைத்துள்ளதாகவும், கடந்த 4 நாட்களாக இதனை நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும், ஆதரவற்றவர்கள் பலர் பெட்டியிலிருந்து பிரியாணி பொட்டலங்களை எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்.
இதுபோன்று விலை இல்லாமல் உணவு வழங்க செல்வந்தர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த சப்ரினா ஏழைகளுக்கு உதவும் மனம் இருந்தால் போதும் என்றார் புன்னகையுடன்.
அ.ர.பாபு

;