tamilnadu

img

மணல் கடத்தலை கண்டுகொள்ளாத வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள்

அவிநாசி ஏப்.21-அவிநாசி சுற்றுப்புற பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரிகள் பிடிபட்டும், வழக்குப்பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்றது. இதையொட்டி அவிநாசி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் உரிய ஆவணமின்றி எந்தவொரு பொருள்களை வாகனங்களில் கொண்டு சென்றாலும் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், குளம், குட்டை, ஆறுகளிலிருந்து அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லும் வாகனங்களை பறக்கும் படை அதிகாரி சோதனை செய்தனர். ஆனால் எவ்வித ஆவணங்கள் இல்லாமல் இருப்பது தெரிந்தும் பறக்கும் படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவிநாசி, முறியாண்டாம்பாளையம் பகுதியிலிருந்து அனுமதியில்லாமல் மணல் கடத்துவதாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மணல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரி மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைனையும், அவிநாசி வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை. இந்த மணல் கடத்தல் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இருப்பது தான் காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, தேர்தல் நேரம் என்பதால் வழக்குப்பதிவு செய்ய நேரமில்லை என்று மழுப்பலான பதில் கூறினார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மணல் கடத்தல் நடத்துவதற்கு இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இதனை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக தெக்கலூர், நம்பியாபாளையம், போந்தபாளையம், சேவூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மறைமுகமாக ஆதரவு இருப்பதால்தான் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் கட்சியினரிடமிருந்து சிலர் ஆதாயம் அடைவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் மணல் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;