tamilnadu

img

குறைந்தபட்சக் கூலி வெறும் 4 ஆயிரமா?

தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுதில்லி, ஜூலை 30- 50 கோடி தொழிலாளர்களின் வாழ்வுக்கு வழி செய்கிறோம் என்று கூறி, மோசடியான முறையில், குறைந்தபட்ச கூலியை மிக மிக குறைவாக - மாதம் வெறும் ரூ.4,628 என்ற அளவில் மட்டுமே நிர்ணயிக்க வழிசெய்யும் ‘ஊதிய விதிகள் மசோதா - 2019’, மத்திய பாஜக அரசால் மக்களவையில் ஜூலை 30 செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் துறைவாரி மத்திய  சங்கங்கள் ஆகஸ்ட் 2 அன்று நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் நடைபெற்று வருகிற முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் மக்கள் விரோத, தேசவிரோத மசோதாக்கள் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல், பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செவ்வாயன்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள ஊதிய விகித மசோதா - 2019 மிக மிக ஆபத்தானதாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக தற்போது அமலில் இருக்கும் 44 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக குறுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக, முதல் கட்டமாக, கடந்த ஜூலை 23 அன்று மக்களவையில் ஊதிய விதிகள் மசோதா - 2019 மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் பற்றிய விதிகள் மசோதா - 2019 ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. இதில் ஊதிய விதிகள் மசோதா 2019 என்பது,  கூலி வழங்குதல் சட்டம் 1936; குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948; போனஸ் சட்டம் 1965 மற்றும் சம ஊதிய சட்டம் 1976 ஆகிய நான்கு மிக முக்கியமான சட்டங்களை ரத்து செய்து அதற்கு பதிலாக ஒரே சட்டம் என்ற முறையில், தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வாரால் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.  மற்றொரு மசோதாவான தொழில்பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் மசோதா 2019 என்பது தற்போது நடைமுறையில் உள்ள 13 விதமான தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து அதற்கு பதிலாக ஒரே சட்டம் என்ற முறையில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே இம்மசோதாக் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அன்றைய தினமே, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து  போராட்ட அறிவிப்பை வெளியிட்டன.

மக்களவையில் நிறைவேறியது

இந்நிலையில் செவ்வாயன்று இம்மசோதா மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், ஊதிய விதிகள் மசோதா 2019, 50 கோடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலியை உத்தரவாதம் செய்வதாகவும், பல  நிலைகளில் பணி செய்யும் தொழி லாளர்களுக்கு வெவ்வேறு விதமாக வரையறை செய்யப்படும் கூலி தொடர்பான 12 வரையறைகளை ரத்து செய்து நாடு முழுவதும் ஒரே விதமான வரையறை யின்கீழ் குறைந்தபட்சக் கூலி என்பதை கொண்டுவர இம்மசோதா வழி செய்யும் என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதிலும், குரல் வாக்கெடுப் பின் மூலம் இம்மசோதா நிறைவேற்றப் பட்டது.

ஆக. 2 நாடு முழுவதும் போராட்டம் தொழிற்சங்கங்கள் ஆவேசம்

இம்மசோதா நிறை வேற்றப்பட்டது தொடர்பாக இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறுகையில், இம்மசோதா முற்றிலும் தொழிலாளர்களுக்கு விரோதமானது.தொழிலாளர்களது குறைந்தபட்ச கூலி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உறுதிசெய்வது போல கூறிக்கொண்டு அவர்களது கூலியையும் உரிமைகளையும் முற்றாகப் பறித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைப்பதற்கே இம்மசோதா வழி செய்கிறது என்று சாடினார்.  குறைந்தபட்ச கூலி என்பது 2700 கலோரி சக்தி அளிக்கும் வகையிலான வரையறையின் கீழ் இந்திய தொழிலாளர் மாநாடு, உச்சநீதிமன்றம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட பல மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆனால் அந்த அடிப்படைகள் அனைத்தையும் இந்த மசோதா நிராகரிக்கிறது.

குறைந்தபட்சக் கூலி தீர்மானிப்பதிலும் தொழிலாளர் உரிமைகளை முடிவு செய்வதிலும் நடைமுறையில் உள்ள முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்ற அடிப்படைக் கட்டமைப்பையே இம்மசோதா தகர்க்கிறது. குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் என்பது இனி அரசு மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாக மாற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது. இம்மசோதாவில் குறைந்தபட்சக் கூலியை தீர்மானிப்பதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் ஆலோசனை கவுன்சில் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்தக் கவுன்சிலின் பரிந்துரையை அரசாங்கம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர்துறை அமைச்சர், இம்மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கடந்த ஜூலை 10 அன்று நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், குறைந்தபட்சக் கூலி நாடு முழுவதும் ஒரே விதமாக நாள் ஒன்றுக்கு ரூ.178 என நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தார்.

இது மாதம் வெறும் ரூ.4,628 மட்டுமே. மத்திய தொழிற்சங்கங்கள், குறைந்தபட்சக் கூலி மாதம் ஒன்றுக்கு ரூ. 18 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய தொழிலாளர் மாநாடு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றால் ஏற்கெனவே ஒரு மித்த கருத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட வரையறைகளையின்படி ரூ.18 ஆயிரம் உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் போராடி வருகிற நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள குறைந்தபட்சக் கூலியையும் சீர்குலைத்து இந்திய தொழிலாளர்களை மிக மிக துயரத்தின் பிடியில் தள்ளும் விதமாக புதிய விதிகளை இம்மசோதா வரையறை செய்கிறது. இதை முற்றாக இந்திய தொழிலாளர்கள் நிராகரிக்கிறார்கள். இதை எதிர்த்து ஆகஸ்ட் 2 அன்று, பாஜக தொழிற்சங்கமான பிஎம்எஸ் தவிர, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் உள்பட இந்திய தொழிலாளர் வர்க்கம் பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தும் என்றும் ஏ.கே.பத்மநாபன் தெரிவித்தார்.
 

;