tamilnadu

img

ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாக என்ஐஏ

கோவை, மே 3-முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு வெறுப்பை உண்டாக்க என்ஐஏவை ஆர்எஸ்எஸ், பாஜக பயன்படுத்துவதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் குற்றம்சாட்டினார்.தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ திருச்சி, தஞ்சை, காரைக்காலில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் வியாழனன்று சோதனை மேற்கொண்டது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு வெள்ளியன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் பாப்புலர்பிரண்ட் அமைப்பின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில் பங்கேற்று கூறியதாவது,2017ம் ஆண்டு ஹாதியா என்கிற பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார் என்று எங்கள் மீது என்ஐஏ குற்றம் சாட்டியது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அரசியல் சாசனத்தின் படி எங்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. முஸ்லிம்கள் மீது இதர பகுதி மக்களுக்கு வெறுப்பை உண்டாக்க வேண்டும் என்கிற இந்துத்துவ பாசிச சக்திகள் முயற்சித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மத்திய அரசின் என்ஐஏ போன்ற அமைப்புகளுக்கு அரசியல் நிர்பந்தம் அளித்து வருகின்றனர். என்ஐஏ அமைப்பு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. இந்த அமைப்பு இதுவரை மேற்கொண்ட அனைத்து விசாரணைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது. 

இதற்கிடையில் பிப்ரவரி மாதம் திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம்என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனை முதலில் எங்கள் அமைப்புதான் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இது போன்ற கொலை பாதக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எங்கள் அமைப்பில் இடம் இல்லை என அந்த அறிக்கையில் தெளிவாக தெரிவித்திருந்தோம். இந்நிலையில் வியாழனன்று காலை முதல் மாலைவரை மூன்று நகரங்களில் எங்கள் அலுவலகங்களில் சோதனை நடத்தினார்கள். சோதனைக்கு வரும் முன்னரே ஊடகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக செய்திகள் ஒளிபரப்பப்பட்டது. என்ஐஏ திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்க ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கிறது. அவர்களின் நோக்கம் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.அதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டிக்கிறது.

மேற்கண்ட சோதனையை கண்டித்து திருச்சி, காரைக்கால், கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ராமலிங்கம் கொலை நடந்த அதே நேரத்தில் நாகை, தஞ்சையில் மட்டும் 6 கொலைகள் நடந்தன. ஆனால் இந்த கொலையை மட்டும் என்ஐஏ விசாரணை செய்கிறது என்றால், இதில் ஆர்எஸ்எஸ், பாஜகவின் அழுத்தம் உள்ளது என சந்தேகிக்கிறோம். இதுகுறித்து சட்ட போராட்டத்தையும் நாங்கள் நடத்த உள்ளோம். முன்னதாக மத்திய அரசு தோல்வி அடைந்த அமைப்பாக உள்ளது. சுவாமிஅசிமானந்தா, தான் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் என்ஐஏமுறையான ஆவணங்களை தாக்கல் செய்யாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே, என்ஐஏவை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

;