tamilnadu

img

திமுக வேட்பாளர் வெற்றிக்கு தீவிர களப்பணியாற்ற முடிவு சூலூரில் நடைபெற்ற சிபிஎம் சிறப்பு பேரவையில் தீர்மானம்

கோவை, ஏப். 27 – சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் கோவை சூலூரிலுள்ள எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் வெள்ளியன்று தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி மற்றும் யு.கே.சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில், மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குள்ளாகி உள்ளது. அதேபோல், தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு தொடர்ந்து பறித்து வந்தபோதும் ஆட்சியை காப்பாற்ற வேண்டும். ஊழல் செய்த பணத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற சுயநலத்திற்காக அதிமுக அரசு மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்து விட்டது. இதன்காரணமாக, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மக்கள் மனநிலையை நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் கண்கூடாக உணர முடிந்தது. இதன்மூலம் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெரும். இந்நிலையில் சூலூர் சட்டமன்ற உறுப்பினரின் மரணத்தைத் தொடர்ந்து இத்தொகுதியில் தற்போது மே 19 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமி போட்டியிடுகிறார். ஆகவே, திமுக வேட்பாளரின் வெற்றிக்காக சூலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவதோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் தனித்துவமான அடையாளத்தோடு திமுகவின் வெற்றிக்கு தீவிரமான களப்பணியை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.முன்னதாக, இந்த கூட்டத்தில் சூலூர் தாலுகாவிற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கங்களின் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக, ஜோதிபாசு நன்றி கூறினார். 

;