tamilnadu

img

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து 4 நாளாக அணைக்க முடியாமல் திணறல்


வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பரவிய கட்டுக்கடங்காத தீயை ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்க முயன்றும் முடியாத நிலையில், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கோவை வெள்ளலூர் பகுதியில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டி வைக்கப்படும். இந்நிலையில் கடந்த சனியன்று இரவு தீப்பற்றியது. தீ பற்றி எரியத் தொடங்கியது தெரிந்ததும் அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ மளமளவென பரவியதால் அருகிலுள்ள மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு 30 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 200 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து சூலூர் விமான படை தளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் குறிச்சி குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு கடந்த 4 நாட்களாக தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றது. எனினும் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் குப்பை கிடங்கை சுற்றி வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையர் மற்றும் தீயணைப்புத் துறை இயக்குநர் உள்ளிட்ட அலுவலர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

;