tamilnadu

img

பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பு

கிரிக்கெட் உலகின் பணக்கார வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகனும், குஜராத் கிரிக்கெட் சங்க உறுப்பினருமான ஜெய் ஷா செயலராகவும், கேரள கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இணைச் செயலராகவும், மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.    இந்நிலையில் பிசிசிஐ ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மும்பையில் புதனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சவுரவ் கங்குலி பிசிசிஐ-யின் 39-வது தலைவராகப் பதவியேற்றார். அவருடன் இதர உறுப்பினர் களும் பதவியேற்றனர். உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 9 மாதங்களுக்கு பிசிசிஐ-க்கு கங்குலி தலைமை தாங்குவார். 

விடைபெற்றது உச்சநீதிமன்ற நிர்வாகக்குழு 

2016-ஆம் ஆண்டு பிசிசிஐ நிர்வாகத்தில் நிர்வாக முறைகேடு எழுந்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. துரித வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம் பிசிசிஐ நிர்வாக பிரச்சனையைத் தீர்க்க நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. லோதா குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் மற்றும் இதர உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் அதிரடியாக நீக்கியது. அதன் பின்னர் பிசிசிஐ-யை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. புதிதாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த நிர்வாகக் குழு பதவி விலக வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், 33 மாதம் சிறப்பாக பிசிசிஐ-யை வழிநடத்திய இந்த நிர்வாகக்குழு கங்குலி தலைவராகப் பதவியேற்றவுடன் புதனன்று பொறுப்பிலிருந்து விலகியது.
 

;