tamilnadu

img

ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை, மார்ச் 10 - 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி செவ்வாயன்று (மார்ச் 10) மண்டல அலுவலகங்கள் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், தொழிலாளர்களின் நம்பிக்கையை பெற்ற தொழிற்சங்கங்களோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், குறைந்தபட்சம் 25 விழுக்காடு ஊதிய உயர்வு தர வேண்டும், தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தபடி, கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை ஈடு செய்ய வேண்டும்,வேலைப்பளு திணிப்பை கைவிட வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணி யில் சேர்ந்தவர்களை கழக ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்த காத்திருப்பு போராட்டம் துவங்கியது.

தொமுச, சிஐடியு தலைவர்கள் பேட்டி 

சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும் போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய தொமுச தலைவர் கி.நடராஜன், சிஐடியு பொதுச்செய லாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் கூறியதாவது: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 2 வேலைநிறுத்த அறிவிப்புகளின் மீது நடைபெறும் சமரச பேச்சுவார்த்தையில், அதிகாரிகள் அக்கறை இன்றி இருப்பதோடு, தொழிலாளர் துறை வழங்கும் அறிவுரைகளை செயல்படுத்த மறுக்கின்றனர். தொழிலாளர்களுக்கு 14 மாதமாக அகவிலைப் படியை வழங்காமல் உள்ளனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 174 விழுக்காடு அகவிலைப்படி வழங்குவதற்கு மாறாக 119 விழுக்காடு மட்டுமே தரப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சேமப் பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். 

ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினக்கூலி வழங்க மறுக்கின்ற னர். சீருடை, ஓய்வறை, கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட செய்துதரப்படவில்லை.

வேலைநிறுத்தமாக மாறும்

எனவே, அரசு தொழிற்சங்கங்களை தேர்வு  செய்து அழைத்து பேச வேண்டும். கைப்பாவை சங்கங்களை வைத்து துரோக ஒப்பந்தத்தை திணிக்கக் கூடாது. வேலை நிறுத்தம் செய்ய அனைத்து நியாயங்கள் இருந்தாலும், பொது மக்கள், மாணவர்கள் நலன் கருதி காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். தொழிலாளர்களின் நியாயத்தை உணர்ந்து அரசு அழைத்துப் பேசும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும்; தவறும்பட்சத்தில் காத்திருப்பு போராட்டமே வேலைநிறுத்தமாக மாறும்.  இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தப்போராட்டத்தில் அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் (சிஐடியு),  பாலசுப்பிரமணி யம், பாரூக் (தொமுச), துரை,  தயானந்தம், கனகராஜ் (சிஐடியு), ஆறுமுகம், கஜேந்திரன் (ஏஐடியுசி), சுப்பிரமணியபிள்ளை (எச்எம்எஸ்), நாராயணசாமி (ஐஎன்டியுசி), வெங்கடேசன் (எம்எல்எப்), பத்மநாபன், நாகராஜ் (டிடிஎஸ்எப்), வேலு, ராஜேந்திரன் (ஏஏஎல்எல்எப்), மோகன் (டிடபிள்யுயு) உள்ளிட்டோர் பேசினர்.

மார்ச் 20ல் பேச்சுவார்த்தை

இந்த காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மார்ச் 20 அன்று ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

எந்தெந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை?

இந்த அறிவிப்பு தொடர்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்  “போராடும் சங்கங்களை அழைத்து பேசாமல் பேச்சுவார்த்தை நடை பெறும் என்று அரசு தன்னிச்சையாக அறி வித்திருப்பது வேதனை அளிக்கிறது. பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்பது மட்டும் கூட்டமைப்பின் கோரிக்கையல்ல. யாரோடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

2018ம் ஆண்டு போக்குவரத்து தொழி லாளர்களுக்கு சம்பந்தமில்லாத நபர்களை வைத்து ஒப்பந்தம் உருவாக்கியதால் 8 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனவே, அரசு இந்த முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் தொழிலாளர்களை வஞ்சிப்பதை ஏற்க முடியாது. எனவே, கூட்டமைப்பு சங்கங்களை அழைத்துப்பேசி, எந்தெந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை மாநிலம் முழுவதும் ஜனநாயக ரீதியாக, அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டம் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

;